செவ்வாய், 19 ஜனவரி, 2010

கருணை அடிப்படையிலான பணி நியமனத்தில் விரும்பிய வேலையை தேர்வு செய்ய உரிமை இல்லை: தில்லி உயர் நீதிமன்றம்



புது தில்லி, ஜன.17: கருணை அடிப்படையில் ஒருவரை பணியில் நியமிக்கும்போது தனக்கு விருப்பமான பணியில் நியமிக்குமாறு அரசை வலியுறுத்த அவருக்கு உரிமை இல்லை என தில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.தில்லியில் லேடி ஸ்ரீ ராம் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் ரஞ்ஜோத் சிங் என்பவரின் தந்தை மூத்த உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார். இவர் ஏறக்குறையை 24 ஆண்டுகளாகப் பணிபுரிந்துள்ளார். கடந்த 2005-ம் ஆண்டு ரஞ்ஜோத் சிங்கின் தந்தை இறந்தார்.இதைத் தொடர்ந்து ரஞ்ஜோத் சிங்குக்கு கருணை அடிப்படையில் இக்கல்லூரியில் நூலக உதவியாளர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் அவர் பல்கலைக்கழக மானியக்குழு, கல்லூரிக்கு வழங்கிய ஆலோசனைப்படி தன்னை இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் பணியில் நியமிக்குமாறு வலியுறுத்தினார். இதற்கு கல்லூரி நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது.எனவே இந்தப் பணி நியமனத்தை எதிர்த்து ரஞ்ஜோத் சிங் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.நூலக உதவியாளர் பதவி தனது கண்ணியத்துக்குக் குறைவானது. தனது கல்வித் தகுதிகளுக்கு இணையான பணி அல்ல. எனவே தன்னை இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் பணியில் நியமிக்குமாறு கல்லூரி நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.என்.அகர்வால் அளித்த தீர்ப்பு வருமாறு:கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும்போது, தனக்கு விருப்பமான குறிப்பிட்ட பணியில் நியமிக்குமாறு உரிமைகோர யாருக்கும் அதிகாரம் கிடையாது என இந்த நீதிமன்றம் கருதுகிறது.மேலும் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும்போது, இறந்தவரின் வாரிசுதாரர் குறைந்தபட்ச கல்வித் தகுதிகளை வைத்துக் கொண்டு தனக்கு விருப்பமான பணியில் நியமிக்குமாறு உரிமைகோர சட்டத்தில் இடமில்லை.இதுபோன்ற நியமனங்கள் செய்யும்போது, பகிரங்கமான வேலைவாய்ப்பு மற்றும் தகுதி ஆகிய பொது விதிகளைக் கணக்கில் கொள்ளாமல் பணியின்போது இறந்தவரின் வாரிசுதாரருக்கு வேலை வழங்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக