இலக்கியம், கலை, சித்த மருத்துவம், வானவியல் சாஸ்திரம் உள்ளிட்ட பலவற்றை ஓலைச்சுவடிகளாக நமது முன்னோர்கள், சித்தர்கள், நமக்கு விட்டுச் சென்றுள்ளனர். ஓலைச் சுவடிகளில் உள்ள பல்வேறு அறிவியல் சார்ந்த விஷயங்கள், வியப்பை அளிப்பதாக இருக்கின்றன. அந்த பொக்கிஷங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில், மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி ஆர்வம் மிகுந்த ஆராய்ச்சியாளர்கள் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சித்த மருத்துவ குறிப்புகள் கொண்ட ஓலைச்சுவடிகளை பாதுகாப்பது மட்டுமின்றி அதில் உள்ள தகவல்களை புத்தகமாக்கி அதை அழியாமல் ஆவணப்படுத்தும் நடவடிக்கையை மத்திய அரசின் சித்த மருத்துவ இலக்கிய ஆராய்ச்சி ஆவணத்துறை ஓசையின்றி செய்து வருகிறது.
இதன் மூலம் இந்தியாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ளவர்களும் பயனடைந்து வருகின்றனர். கடந்த 1964ம் ஆண்டு தஞ்சையில் உள்ள சரஸ்வதி மஹால் நூலகத்தின் ஒரு பகுதியில், மத்திய அரசின் சித்த மருத்துவ இலக்கிய ஆராய்ச்சி பிரிவு துவங்கப்பட்டது.
இதன் மற்றொரு ஆராய்ச்சி பிரிவு கடந்த 1971ம் ஆண்டு பாளையங்கோட்டையில் துவங்கப்பட்டது. அதன்பின் இவ்விரண்டு ஆராய்ச்சி பிரிவுகளையும் சேர்த்து, சென்னை அரும்பாக்கம் சித்த மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், மத்திய அரசு சித்த மருத்துவ இலக்கிய ஆராய்ச்சி ஆவணத்துறை துவக்கப் பட்டது. அன்றில் இருந்து இன்று வரை அதே இடத்தில் சித்த மருத்துவ இலக்கிய ஆராய்ச்சி ஆவணத்துறை இயங்கி வருகிறது. இங்கு அகத்தியர், புலிப்பாணி, போகர், தட்சணாமூர்த்தி, மச்சமுனி, ராமத்தேவர்(யாகோபு), கொங்கனார், சங்கமுனி, திருமூலர்(திருமந்திரம் எழுதியவர் அல்ல), போன்ற பல்வேறு சித்தர்களால் எழுதப்பட்ட மற்றும் பரம்பரை சித்த மருத்துவர்களால் பயன்படுத்தப்பட்ட அனுபவ குறிப்புகள் உள்ளடங்கிய 1,200க்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த ஓலைச்சுவடிகள் அனைத்தும் 200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தவையாக உள்ளன. பழங்கால தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த ஓலைச்சுவடிகளை படியெடுத்து (கேலி கிராப்பி), பின் அதற்கு பொழிப்புரை எழுதும் பணியை இங்குள்ள ஊழியர்கள் செய்கின்றனர்.
இதுவரை வெளிவராத தகவல்கள் கொண்ட ஓலைச்சுவடிகளை மட்டும் கண்டறிந்து அவற்றை படியெடுக்கின்றனர். பின், அதை தற்போதைய தமிழ் மொழி வடிவத்திற்கு மாற்றி புத்தகமாக வெளியிடும் பணியை ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் சிறப்பாக செய்து வருகின்றனர். இவ்வாறு படியெடுக்கப் பட்ட, அரிய சித்த மருத்துவ தகவல்கள் அடங்கிய 25 புத்தகங்களை மத்திய சித்த மருத்துவ இலக்கிய ஆராய்ச்சி ஆவணத்துறை வெளியிட்டுள்ளது. இந்த புத்தகங்கள் சித்த மருத்துவம் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு பல்வேறு அரிய தகவல்களை வாரி வழங்கும் பொக்கிஷங்களாக அமைந் துள்ளன. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் படிக்க வசதியாக தமிழில் மட்டுமின்றி இந்தி, ஆங்கிலத்திலும் இந்த புத்தகங்கள் மொழி பெயர்க்கப் பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் சித்த மருத்துவ ஓலைச்சுவடிகள் மற்றும் புத்தகங்கள் இடம் பெற்றுள்ள நூலகமும் இயங்கி வருகிறது. இங்கு நுழைவு கட்டணம் செலுத்தி ஏராளமான மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
இது குறித்து, மத்திய அரசு சித்தமருத்துவ இலக்கிய ஆராய்ச்சி ஆவணத் துறையைச் சேர்ந்த ஜெகஜோதி பாண்டியன் கூறியதாவது: ஆராய்ச்சி நிலையத்தில் பாதுகாக்கும் 1,200 ஓலைச்சுவடிகளில் 3,000க்கு மேற்பட்ட தலைப்புகளில் பல்வேறு அரிய மருத்துவ குறிப்புகள் உள்ளன. இதில் கோபுர வடிவிலான "திருவாசகம்' மற்றும் சித்திர வடிவிலான மந்திர ஓலைச்சுவடிகள் குறிப்பிடத்தகுந்தவை. இந்த ஓலைச்சுவடிகளை தஞ்சாவூர் உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று சேகரித்துள்ளோம்.
சமீபத்தில் கிடைத்த ஒரு சுவடியில், தேள் கடியால் பாதிக்கப்பட்டவரின் உடலில் இருந்து விஷத்தை முறிக்க அவரது கண்களில் உப்புக் கரைசல் தண்ணீரை இரு துளிகள் விட்டால் போதும் என்ற குறிப்பு இருந்தது.
அதை பயன்படுத்தி பார்த்ததில் குறிப்பு மிகச்சரியானது என தெரிந்தது. இவ்வாறு பல அரிய மருத்துவ குறிப்புகள் அடங்கிய ஓலைச்சுவடிகள் இந்தியாவில் உள்ள பல்வேறு இடங்களில் மட்டுமின்றி, இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் உள்ள மியூசியங்களில் தூங்குகிறது. அவற்றை படியெடுத்து புத்தகமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறு செய்தால், அதில் உள்ள மருத்துவ குறிப்புகள் மூலம் பல்வேறு நோய்களை குணப்படுத்த முடியும். இவ்வாறு ஜெகஜோதி பாண்டியன் கூறினார்.
செல்லரித்த சுவடிகளை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு : ஆரம்பகாலத்தில் ஓலைச்சுவடிகளை செல்லரிக்காமல் பாதுகாக்க, மஞ்சள் மற்றும் வசம்பு ஆகியவை தடவப்பட்டு வந்தன. பின் எலுமிச்சை நிறத்தில் உள்ள புல்லில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய் மூலம் (சிட்ரோனில்லா) சுவடிகள் பாதுகாக்கப் பட்டன. பின் "லேமினேட்' செய்தும், "டிஜிடலைஸ்' செய்தும் "சிடி' வடிவில் மாற்றியும் ஓலைச்சுவடிகளில் உள்ள தகவல்கள் பாதுகாக்கப்பட்டன. தற்போது "பியூமிகேஷன்' என்ற முறையில் சுவடிகள் பாதுகாக்கப்படுகின்றன. இம்முறையில், தனிப்பெட்டியில் பூச்சிகளால் பாதிக்கப்பட்ட சுவடிகள் வைக்கப் பட்டு அதற்கு அருகில் கிண்ணத்தில் "பாரா-டை-குளோரோ பென்சின்', லிக்குட் அமோனியா உள்ளிட்ட பல்வேறு வகை மருந்துகள் வைக்கப்படுகின்றன. பின்னர் மின்விளக்கு ஒளி மூலம் வெப்பம் அந்த பெட்டிக்குள் செலுத்தப்படுகிறது. அந்த வெப்பத்தின் மூலம் மருந்து கரைந்து அதன் மூலம் சுவடிகளை அரிக்கும் செல்களும், சிறிய பூச்சிகளும் இறந்து விடுகின்றன.இதன் மூலம் சுவடிகள் நீண்ட நாட்களுக்கு பாதுகாக்கப்படுகின்றன.
காஞ்சீபுரத்திலுள்ள ஸ்ரீசந்திரசேகரேந்திர ஸரஸ்வதி விஸ்வமஹாவித்யாலயா பல்கலைகழகம் நமது பாரம்பர்ய அறிவு பொக்கிஷமான சுவடிகளைப் பாதுகாக்க முக்கியத்துவம் அளித்து வருகிறது. தற்போது இங்குள்ள பன்னாட்டு நூலகத்தில் 5000க்கும் மேற்பட்ட சுவடிகளை பாதுகாத்து வருகிறது. மேலும் சுவடிகளை கணிணமயமாக்குதலும் நடைபெற்று வருகிறது.
பதிலளிநீக்குஇந்திய அரசின் கலாசார அமைச்சகத்தின் ஒரு அலகான தேசிய சுவடிகள் கழகம் (National Mission for Manuscripts) இந்தியா முழுவதுமுள்ள சுவடிகளைப் பற்றிய தகவல் திரட்டவும் அவற்றை வகைப்படுத்தவும் இயங்கிக் கொண்டிருக்கிறது. அக்கழகம் இத்திட்டத்திற்காக எங்கள் பல்கலைகழகத்தை சுவடிகள் மூலமையங்களில் (Manuscripts Resources Centre) ஒன்றாக தேர்ந்தெடுத்துள்ளது.
நீங்கள் வைத்திருக்கும் சுவடிகளைப் பற்றி எங்களுக்கு தெரிவிக்குமாறு பணிவன்புடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் உங்களிடத்தில் வந்து தகவல்களை சேகரித்துக் கொள்கிறோம். தங்கள் அனுமதியின்றி ஒரு சுவடியையும் நாங்கள் எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று உறுதியளிக்கிறோம். எந்த மொழியிலும் எந்த வரிவடிவத்திலும் இருக்கும் சுவடிகளின் தகவல்களை நாங்கள் வேண்டுகிறோம்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி-
முனைவர். ஜீ. ஸ்ரீநிவாஸு,
திட்ட ஒருங்கிணைப்பாளர்,
ஸ்ரீசந்திரசேகரேந்திர ஸரஸ்வதி விஸ்வமஹாவித்யாலயா பல்கலைகழகம்,
ஏனாத்தூர், காஞ்சிபுரம் – 631 561
தொலைபேசி – 044 27264293, 301, 308,
Extn: 252 & 218
Mob: +91 9894643836 / E-Mail: srinivasuscsvmv@gmail.com