ஞாயிறு, 21 ஜூன், 2009


ராமேசுவரம், ஜூன். 20-
இலங்கையில் இருந்து நேற்று காலை தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற் கரைக்கு ஒரு பிளாஸ்டிக் படகில் முல்லைத்தீவு மாவட்டம் கச்சிலமடுவை சேர்ந்த சத்தியசீலன் (வயது39), அவரது மனைவி மாலினி (37) ஆகியோர் வந்தனர். சத்தியசீலன் குண்டு காயத்துடன் காணப்பட்டார். பின்னர் இருவரும் தனுஷ்கோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
குண்டு காயத்துடன் வாலிபர் வந்ததால் விடு தலைப்புலியா? என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. உடனே போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். அதன் பின்னர் 2 பேரும் போலீசாரிடம் கூறியதாவது:-
நாங்கள் கச்சிலமடு பகுதியில் வசித்து வந்தோம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராணுவத்தினர் விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்துவதாக தமிழ் மக்கள் மீது தாக்கு தல் நடத்தினர். இதனால் அங்கிருந்து இடம் பெயர்ந்து வழியர்மடம் பகுதிக்கு சென்று அங்கு கடற்கரையில் குடிசை அமைத்து வாழ்ந்து வந்தோம்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் பலியாகி உள்ளனர். போரில் தமிழ் மக்களை பாதுகாப்பு கேடயமாக பயன்படுத்தி ராணுவத்தினர் விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்தினர்.
கடந்த ஏப்ரல் மாதம் ராணுவம் நடத்திய தாக்குதலில் எனது கணவர் சத்தியசீலன் வயிற்று பகுதிக்கு கீழே குண்டு பாய்ந்தது. இதையடுத்து அவரை முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தேன். குண்டு பாய்ந்ததில் எனது கணவருக்கு சிறுநீரக குழாய் பாதிக்கப்பட்டு விட்டது.
அதன் பின்னர் அங்கிருந்து வவுனியா சென்று உயிர் பிழைத்தால் போதும் என்று ரூ.1 லட்சம் கொடுத்து இங்கு வந்து விட்டோம். எங்களது 2 குழந்தைகள் எனது பெற்றோரிடம் உள்ளனர். கணவரை குணப்படுத்தவே இங்கு அழைத்து வந்துள்ளேன். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரு டன் உள்ளார். ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்கள் எங்கும் செல்ல முடியாதபடி முள்கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு சரியான அடிப்படை வசதி, உணவு கிடைக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக