நாடு முழுவதும் கட்டாயக் கல்வி இருக்கும்பொழுது மலையகத்தில் மட்டும் அது கிடையாது. அதே போன்று நாடு முழுவதும் கல்விக்கூடங்கள் தேசிய மயம் என்று வரும்போது இங்கு மட்டும் இல்லை. பின்னர் தேசியமயம் என்ற பெயரால் தனிச் சிங்களமொழிச் சட்டத்தின் கீழ் தாய்மொழி பயில்வது மறுக்கப்பட்டது.
பொதுவாக மலையகக் கல்விக் கூடங்களில் தரம் மிகக் குறைவு. பத்து வயதுவரைதான் அவர்களால் படிக்க முடியும். ஐந்தாம் வகுப்புக்கு மேல் அவர்களால் படிக்க முடியாது. அதனால் அன்று இரண்டரை லட்சம் குழந்தைகளுக்குக் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது.
பொதுவாக வாழ்க்கை நிலைகளினாலும், பொருளாதார நிலைகளினாலும் பள்ளிகளில் குழந்தைகள் சேர்ப்புக் குறைவாகவே இருந்தபோதிலும்கூட, குடியுரிமை மறுக்கப்பட்டதால்-ஒருசில குடும்பங்கள் குழந்தைகளுக்குக் கல்வி வாய்ப்பை அளிக்க முன்வந்தாலும்கூட அதை அளிக்க முடியாமல் போய்விட்டது.
மீறிச்சென்று படிக்கும் குழந்தையும் தாய்மொழியில் பயிலவில்லை. தாய்மொழி பின்னுக்குத் தள்ளப்பட்டுச் சிங்கள மொழி திணிக்கப்பட்டது. தமிழ்ச் சமுதாயமோ அல்லது மலையகத் தமிழர்களோ இதை உத்தேசித்துத் தனி பள்ளிகள் திறக்கலாம் என்றாலோ, தனியார் பள்ளிகள் நடத்துவதற்கு அனுமதி கிடையாது.
கல்வி கற்கும் வயதுள்ள 3 லட்சம் குழந்தைகளில் சுமார் 75,000 குழந்தைகளுக்குத்தான் அவ்வாய்ப்பு ஏற்படுகிறது என்று 1983-ஆம் ஆண்டு நடத்திய ஓர் ஆய்வு கூறுகிறது. பொதுவாகத் தமிழ் மாணவர் தொகை 1970-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இப்போது 5.4 சதவிகிதத்துக்கு மேலாகக் குறைந்துள்ளது.
அது மட்டுமல்லாமல் சரியான உணவு கிடைக்காததாலும், வறுமையாலும், நாடோடிகளாய் வாழ்கின்ற அவலத்தாலும் குழந்தைகளின் இறப்பு விகிதம் 10 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்திருக்கிறது.
மேலும் வயதானவர்களின் இறப்பு விகிதம் இலங்கை முழுவதுக்கும் 34.7 சதவிகிதம் இருக்கையில், மலையகத்தில் 62.4 சதவிகிதம் ஆகும். அவர்கள் வருவாயில் 76 சதவிகிதம் உணவுக்காகவே போய்விடுகிறது. சம்பள உயர்வோ மறுக்கப்படுகிறது. மிக மோசமான சூழ்நிலையில் வாழவேண்டிய நிலை ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஏற்படுகிறது. இப்படியிருக்க இவர்களின் குழந்தைகள் எங்கே படிக்க?
எஸ்.ஆர்.ஆசீர்வாதத்தின் கருத்துப்படி ""கல்வித்துறை மிக முக்கியமான ஒரு போர்க்களமாக 1948-க்குப் பின் மாறியுள்ளது. கலாசார மோதல்களின் இடமாகவும் அது மாறியுள்ளது. 1960-இல் கல்வித்துறையை அரசு ஏற்றுக் கொண்டபின் இது தீவிரமாகி உள்ளது'' என்று தெரிகிறது.
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இட ஒதுக்கீடு சம்பந்தமாகக் கடைப்பிடிக்கப்படும் கொள்கைகள், விதிமுறைகள் இந்தப் போர்க்களத்தின் முக்கியமான இடமாகும்.
1. ஏனெனில் வேலைவாய்பிற்கான ஓர் அடையாளச் சீட்டாகக் கல்லூரிக் கல்வி வாய்ப்பு இருக்கிறது.**
2. ஒரு சில இடங்களுக்கு அதிகமான எண்ணிக்கை நபர்களுடன் போட்டியிடக்கூடிய ஒரு துறையாக இது இருக்கிறது. ஆகையினால் இரு இனங்களும் தங்களுடைய வளர்சிக்கான போட்டிக்களமாக இதைக் கருதுகின்றன.
கல்வித் துறையில் இனவாதம் எந்த வடிவில் வந்தது என்றால், சிங்கள மாணவர்களுக்குப் பள்ளிகளில் கல்வி வாய்ப்புகளை விரிவாக்குவதற்கும் அதைத் தருவதற்கும், இருக்கும் இடங்களை ஒதுக்குவதற்கான போராட்டமாக இது வெடித்தது. இதன் எதிர் விளைவுகள் மாநில அரசியலில் சிங்களத் தரப்பில் இருந்த நிர்ப்பந்தத்தை கல்வித்துறையில் இவைகளை நிறைவேற்றும் அளவிற்கு இருந்தது.
சிங்களவர்களுக்கு ஒதுக்கப்படும் இடங்களுக்கு ஏற்படும் செலவுகளைத் தமிழ் மக்களின் தலையில் சுமக்க வேண்டி வந்தது. சிங்கள இனவாதத்தினரின் போராட்ட நிர்ப்பந்தத்தின் காரணமாகப் படிமுறை ரீதியான தரக் கட்டுப்பாடு ஙங்க்ண்ஹ-ரண்ள்ங் நற்ஹய்க்ஹழ்க்ண்ள்ஹற்ண்ர்ய்) 1973-இல் அறிமுகமானது. தமிழ் மாணவர்களுக்கு அதிருப்தியும் விரக்தியும் ஏற்படக்கூடிய அளவிற்கு இட ஒதுக்கீடு என்பது தர நிர்ணயிப்பில் இருந்தது.
தகுதி அடிப்படையிலான பழைய இட ஒதுக்கீடை 1978-இல் அரசு நீக்கிப் புதிய முறையைக் கொண்டுவந்தது. இது வேறு எங்குள்ள பல்கலைக்கழகத்திற்குள்ளும் இல்லாத ஒரு நிலையாகும்.
பள்ளியில் இருக்கும் இடங்களில் தர அடிப்படையில் 30 சதவிகிதம் ஒதுக்கீடு, மாவட்ட ஜனத்தொகை அடிப்படையில் 55 சதவிகிதம் பின்தங்கிய மாவட்டங்களான ஒதுக்கீட்டால் 15 சதவிகிதம் இருந்தது. அவற்றோடு மேலும் சில கட்டுப்பாடு விகிதம் இப்போது வந்துள்ளது. இவை என்னவென்றால், ஒரு மாவட்டத்தில் எத்தனை பள்ளிகள் இருக்கின்றனவோ அந்த விகிதாசார அடிப்படையில் இட ஒதுக்கீடு ஒரு பள்ளியில் செய்ய வேண்டும். மேலும் சேரக்கூடிய மாணவர் இருக்கும் ஊரில் விஞ்ஞானக் கல்விக்கான வாய்ப்பு வசதிகளை ஒட்டி இந்த இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் (கஹக்ஷ ங்ற்ஸ்ரீ...).
பின்கூறப்பட்டவைகள் பல்கலைக்கழக வழிகாட்டுதலின் அடிப்படையிலும், முன்சொன்னவை கல்வித்துறை வழிகாட்டுதலின் அடிப்படையிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
உதாரணமாக 1983-84-இல் ஒரு பல்கலைக்கழக விஞ்ஞானக் கல்விக்கான இடத்தில் 30 சதவிகிதம் கோட்டாவில் 2,692 முதல் தகுதியுள்ள விண்ணப்பப் படிவங்கள் இருந்தன.
விண்ணப்பதாரர்களில் 25 சதவிகிதம் பேர் தகுதி உள்ளவர்களாக இருந்த போதிலும் புறக்கணிப்பட்டனர். இதன் மூலம் 1983-84-இல் விண்ணப்பதாரர்களில் 590 மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள். இவர்கள் கொழும்பு, யாழ், அம்பாறை, திருகோணமலை போன்ற சில மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு இடமில்லாமல் மிகவும் தரம் குறைந்த வேறு மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்படிப் புறக்கணிக்கப்பட்டவர்கள் அனைவரும் தமிழர்களே. இந்த இட ஒதுக்கீடு விதிகளின் பெயரில் சிங்கள இனவாத அரசு சிங்களவர்களுக்கு அதிக இடம் ஒதுக்கியது.
அதேபோன்று பள்ளிகளில் ஆசிரியரின் விகிதாசாரமும் ஆசிரியர் புறக்கணிக்கப்படுதலும் உள்ளது.
அதேபோன்று வேலைவாய்ப்பிலும் கூட, தமிழர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். சமீப காலங்களில் அரசு அளிக்கும் வேலைவாய்ப்பில் 7 சதவிகிதம் கூடத் தமிழர்களுக்கு இல்லை. 1956-க்குப் பின் பொதுத்துறையில் தமிழர்களுக்கான இட ஒதுக்கீடு 10 சதவிகிதத்துக்கும் கீழாகவே உள்ளது. அது சில ஆண்டுகளில் 2 அல்லது 3 சதவிகிதம் கூட மாறியது.
மேலும் அறிஞர்கள், பேராசிரியர்கள், நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் ஆக்கத் திறமைகளைப் பயன்படுத்தாதது; அவர்களுக்கு அவர்களின் துறைகளில் ஆய்வுகள் மேற்கொள்ள வாய்ப்புகள் அளிக்காதது; நிம்மதியாகக் குடும்ப வாழ்க்கை மேற்கொள்ள முடியாதது; பொருளாதார நிலையில் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள இயலாதது போன்ற புறக்கணித்தல்கள் தொடர்ந்தன.
அதுமட்டுமல்லாமல் அவர்களின் வீடுகள் தாக்கப்படுவதும், நிறுவனங்களை இல்லாமல் செய்வதும், கைது செய்வதும் மற்றும் சித்திரவதை, கொலைகள் ஆகியவை செய்யப்படுவதும் தொடர் நிகழ்ச்சிகளாக மாறின.
பேராசிரியர் நிர்மலா நித்தியானந்தம், நித்தியானந்தம் போன்றவர்கள் பட்ட துன்பங்களைக் குறிப்பிடலாம். இன்னும் எண்ணற்ற அறிஞர்கள் இலங்கையை விட்டு வெளியேறிப் பிற நாட்டுப் பல்கலைக்கழகங்களில் பணியாற்றுவதையும் குறிப்பிட முடியும்.
மேலும் வயதான ஊழியர்கள், பென்ஷன் வாங்குபவர்கள் படும் மனநிலை வருத்தங்கள் சொல்லில் வடிக்க முடியாதது. அவர்கள் ஒவ்வொருவரும் பட்ட துன்பங்கள் ஏராளம்.
1983 கலவரத்திற்குப்பின் யாழ்ப்பாணம் பற்றிய ஓர் ஆய்வில் மிக நூதனமான ஒரு விஷயம் வெளிப்பட்டுள்ளது. அதாவது இன்று அங்கு 17 - 25 வயதிற்கிடையிலான மக்கள் குழுக்களில்-இளைஞர் பிரிவில் ஐந்து பெண்களுக்கு ஓர் ஆண் என்ற விகிதத்தில் தற்போது மாறியுள்ளது என்று சமூகவியலாளர்கள் மதிப்பீடு செய்துள்ளனர். பையன்கள் கொலை செய்யப்படுவதும், மறைவதும், சிறை செல்வதும், ஒடுக்குமுறை செய்யப்படுவதன் விளைவே இன்று இந்த விகிதம் என்கின்றனர் அவர்கள். இது எதிர்காலத் தமிழ் சமூகத்தின் ஒட்டுமொத்த நலன்களையும் பாதிப்பது மட்டுமன்றி எதிர்காலத் தமிழ் கலாசாரத்தையும் சமூகத்தில் ஒழுக்க சீர்குலைவையும் உருவாக்கும் என்கின்றனர் சமூகவியலாளர்கள். பெண்களின் விகிதம் அதிகமாவதைக் கண்டு எச்சரிக்கும் அவர்கள் உதாரணத்திற்கு வியட்நாம் சண்டைகளைக் காட்டுகின்றனர். வியட்நாமில் சமூகம் சீர்குலைந்ததை நினைவு கூர்கின்றனர். தமிழ்க் கலாசாரம், நாகரிகம், சமூக வாழ்வு ஆகிய அனைத்தையும் அழிக்கும் தன்மையாகவும் அவர்கள் கருதுகின்றனர்.
ஆக, குழந்தைகளிலிருந்து வயதானவர்கள் வரை மனரீதியான, உணர்வு நிலைகளில் மிகுந்த துன்பங்களையும் துயரங்களையும் சுமப்பவர்களாகவும், மன உணர்வுச் சித்திரவதைகளை அனுபவிப்பவர்களாகவும் உள்ளனர். இதன் உச்சகட்டமாக அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் யாழ்ப்பாண நீதிமன்றத்தின் முன் சுமார் மூவாயிரத்துக்கும் மேலான வயதான தாய்மார்கள் ஒன்றுகூடி நீதிபதியைச் சுற்றி நின்று ""ராணுவத்தால் கைது செய்யப்பட்டு ராணுவ முகாம்களில் அடைத்து வைக்கப்பட்ட தங்கள் மகன்களை விடுவிக்கும்படி'' குரல் கொடுத்துப் போராடினார்கள். பின்னர் காவல் துறையினர் வந்து அவர்களை அப்புறப்படுத்தினர்.
இவ்வகையில் அறிவுத்துறை மற்றும் மன உணர்வு நிலையில் ஓர் ஒடுக்குமுறையைச் சிங்களப் பேரினவாதம் மேற்கொண்டது.
** University Administrations: Saturday Review March 84
நாளை: ஸ்ரீமாவோவின் அரசியல் தந்திரம்!
Tamils are destroyed by Singalise goondas, Gandhi country is supporting to kill tamil people. Now Tamils lost interest in India, to save tamil people Tamil nation to be formed.
6/24/2009 1:04:00 AM