சனி, 27 ஜூன், 2009

பேரவையிலிருந்து அதிமுக, மதிமுக வெளிநடப்பு
தினமணி


சென்னை, ஜூன் 26: இலங்கைப் பிரச்னை குறித்த தீர்மானத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து சட்டப் பேரவையிலிருந்து அதிமுக, மதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் பேசிய அதிமுக உறுப்பினர் டி.ஜெயக்குமார், "சர்வதேச சட்டம் மற்றும் ஜெனீவா ஒப்பந்தத்தில் உள்ள போர் விதிமுறைகளை முற்றிலும் மீறி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவித்து ஓர் இனப் படுகொலையை இலங்கை அரசு நடத்தியுள்ளது. இது மனித உரிமையை மீறிய செயலாகும். எனவே இலங்கை அரசின் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டி மத்திய அரசை வலியுறுத்தி சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' என்றார். "இந்தத் தீர்மானம் எனது ஆய்வில் உள்ளது. நாளை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளலாம்' என்று பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன் தெரிவித்தார். இதனை ஏற்காமல், அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து கோஷமிட்டனர். தொடர்ந்து பேரவைத் தலைவர் அனுமதி மறுக்கவே அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். அவர்களைத் தொடர்ந்து மதிமுக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். அதிமுகவில் எஸ்.வி.சேகர் மட்டும் வெளிநடப்பு செய்யாமல் அவையில் அமர்ந்திருந்தார். சிறிது நேரத்தில் அதிமுக, மதிமுக உறுப்பினர்கள் அவைக்குத் திரும்பினர்.
கருத்துக்கள்

கண்டிப்பாக இந்தத் தீ்ர்மானத்தைக் கொணர்ந்து நிறைவேற்ற வேண்டும். இனப் படுகொலைக்குக் காங்.கும் உடந்தையாக இருந்தமையால் பன்னாட்டு நீதி மன்றத்தில் இலங்கை மீது வழக்கு தொடுக்க உடன்படாது. எனினும், தமிழக மக்களின் உணர்வை வெளிப்படுத்த இத் தீ்ர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.


அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/27/2009 1:02:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக