செவ்வாய், 23 ஜூன், 2009

குறள் நெறிகளைப் பரப்ப படைப்பாளிகள் முன்வர வேண்டும்:
அப்துல் கலாம் வலியுறுத்தல்
தினமணி


சென்னை, ஜூன் 22: திருக்குறள் நெறிகளை உலகம் முழுவதும் பரவச் செய்ய படைப்பாளிகள் முன்வர வேண்டும் என்று குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தெரிவித்தார்.
ஐஏஎஸ் அதிகாரியும், எழுத்தாளருமான காண்டீபன் என்ற பி.வி.ஜகன்மோகன் எழுதிய, "கங்கை கொண்ட செம்மொழி' நூல் வெளியீட்டு விழா ஆளுநர் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் அப்துல் கலாம் பேசியதாவது: உலகின் பல்வேறு பெரும் புலவர்கள், படைப்பாளிகளின் படைப்புகளை நாம் படித்துள்ளோம். எனினும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளில் உள்ள 1,330 குறட்பாக்களில் இல்லாத கருத்துகள் எதுவும் இல்லை. திருவள்ளுவரின் இலக்கியப் பணி மகத்தானது. இணையற்றது.
இத்தகைய மாபெரும் சிறப்புகள் வாய்ந்த திருக்குறள் காட்டும் நெறிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் அனைவரையும் சென்று சேர வேண்டும்.
சமுதாயத்துக்கு திருக்குறள் காட்டும் வாழ்வு நெறிகளையும், திருவள்ளுவரின் வரலாற்றையும் உலகம் முழுவதும் பரவச் செய்வதில் தாங்களும் பங்கேற்க தமிழ் இலக்கிய படைப்பாளிகள் முன்வர வேண்டும் என்றார் அப்துல் கலாம்.
வைரமுத்து: இந்தியாவுக்கு வெளியேயும் நாட்டின் மனித அடையாளமாகத் திகழ்பவர் கலாம். அரசியலையும் கடந்து தேசிய குடியரசுத் தலைவராக அவர் விளங்கினார்.
அவரால் நமது மாணவர்கள் உள்பட இளைய சமுதாயம் புத்துணர்வு பெற்றது. கலாம் வாழும் வரை நம்பிக்கையும் வாழும்.
"கங்கை கொண்ட செம்மொழி' நூலில், இந்தி மொழியில் வேரூன்றியுள்ள தமிழ்ச் சொற்களை திறனாய்வு செய்து நூலாசிரியர் நிறுவியுள்ளார்.
வணிகம், கலை, படையெடுப்பு உள்ளிட்ட காரணங்களால் ஒரு மொழி மற்றொரு மொழியுடன் கலந்து உறவாட நேரிடுகிறது.
உலக மயமாக்கலால் சமூகங்களிடையேயும், நாடுகளிடையேயும் வணிகத்திலும் நெருக்கம் ஏற்படுகிறது. இது குறித்து சமூக விஞ்ஞானக் கருத்து எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
உலகமயமாக்கலின் விளைவுகளால் நமது மாறுபாடுகள் தூக்கி வீசப்படும். பண்பாடுகள் சிதையும். சின்னச் சின்ன மொழிகளும் அழிந்து போகும்.
ஆனால், தமிழ், ஆங்கிலம், இந்தி, சீனம், அரபி, ஸ்பானிஷ் உள்ளிட்ட 6 மொழிகள் மட்டுமே நிலைத்து நிற்கும். இம் மொழிகளில் மட்டுமே, அழிக்க முடியாத வேர்ச்சொற்கள் நிறைந்துள்ளதே இதற்குக் காரணமாகும்.
ஒரு மொழியை மற்றொரு மொழி மற்றும் தேசிய இனங்கள் அங்கீகரிக்க வேண்டும். எந்த ஒரு மொழியையும் அரசுதான் காப்பாற்ற வேண்டும்.
இதற்கு அடுத்தபடியாக மொழியைக் காக்க, ஆசிரியர்கள், படைப்பாளிகள், இதழியலாளர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இல்லையெனில் எந்த ஒரு தேசிய மொழியும் நிலைக்க முடியாது என்றார் வைரமுத்து.
முன்னதாக இந்நூலை வைரமுத்து வெளியிட, முதல் பிரதியை அப்துல் கலாம் பெற்றுக் கொண்டார்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், பேராசிரியர்கள் எஸ்.ரகு, ஆர்.ராமன் உள்ளிட்ட பலர் பேசினர். நூலாசிரியர் காண்டீபன் ஏற்புரை வழங்கினார்.

கருத்துக்கள்

எளிமையின் திலகம் கலாம் அவர்கள், நம் நாட்டின் முதல் குடிமகனாக வீற்றிருந்த பொழுது கூட அண்டை மாநிலமான கருநாடகாவில் திருவள்ளுவர் சிலை திறக்கப்படாமல் மூடப்பட்டே கிடந்தது. இன்றும் அதே நிலைதான். எனவே, குறள்நெறிகளையும் அதன் சிறப்பையும் முதலில் நம் நாட்டில் பரப்ப வேண்டும். இவ்விழாவில் போகிற போக்கில் அள்ளித் தெளித்த அலங்கோலமாக வைரமுத்து அழிக்க முடியாத வேர்ச் சொற்கள் நிறைந்த மொழியாக இந்தியைக் குறிப்பிட்டுள்ளார். இதுவே தவறாக படிப்பவரால் தவறாக மேற்கொள்ளப் பட்டு அறிவுக்கும் மொழி அறிவியலுக்கும் பொருந்தாத உண்மைக்கு மாறான செய்தி நிலைத்து விடும். இவ்வாறு இடம் பெற்றது செய்தியாளரின் தவறு எனில் திருத்தம் வெளியிடுக! இல்லையேல் வைரமுத்துதான் கூறினார் எனில் மத்திய ஆளும் கட்சியைக் குளிர்விப்பதாகக் கருதிக் கொண்டு இது போன்ற அபத்தச் செய்திகளைப் பேசாதிருக்கட்டும்! தான் அறிந்த கவிதைச் சிறப்புகளைப் பற்றி மட்டும் பேசினால் போதுமானது. தான் அறியா மொழியியல் துறைபற்றி அமைதி காப்பது நல்லது! தமிழால் வாழும் அவர் தமிழுக்குத் தன் பாடல்களால் அணி செய்துள்ள அவர் தன்னுடைய உரையால் களங்கம் ஏற்படுத்த வேண்டா!

By Ilakkuvanar Thiruvalluvan
6/23/2009 4:08:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக