கோவை: ""மக்கள் சிந்திக்கக் கூடாது என்பதற்காகவே, கம்ப்யூட்டர் தர வேண்டிய காலத்தில் கலர் "டிவி' வழங்கி, டாஸ்மாக் மதுபான விற்பனை நடக்கிறது,'' என சினிமா டைரக்டர் சீமான் தெரிவித்தார். ஈழ ஆதரவாளர் விடுதலை கோரிக்கை மாநாடு, கோவை - புலியகுளத்தில் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற டைரக்டர் சீமான் பேசியதாவது: தேசிய பாதுகாப்பு சட்டம் இப்போது, தேவையில்லாத காரணத்துக்காக பயன்படுகிறது. என்னை புதுச்சேரி அரசு கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கிறது; அந்த மாநிலத்தில் அப்படியொரு சட்டமே இல்லை.
புதுக்கோட்டையில் பேசும் போது, "பிரபாகரன் எனது அண்ணன்' என்று பேசி விட்டேனாம். இத்தாலி நாட்டைச் சேர்ந்த சோனியாவை, "அன்னை' எனும் போது, தமிழ் ரத்தமான பிரபாகரனை, "அண்ணன்' என்று சொல்வது தவறா? இப்படி கூறியதால் இந்த தேசத்துக்கு என்ன நஷ்டம் ஏற்பட்டு விட்டது? விடுதலைப்புலிகள் இயக்கம், இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்நாட்டு பார்லிமென்ட் கட்டடங்கள் முன், ஆயிரக்கணக்கான தமிழர்கள் பிரபாகரன் படத்துடன் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அம்மக்களின் உணர்வுகளை அந்நாட்டு அரசுகள் மதித்தன. அதுதான் உண்மையான ஜனநாயகம். ஆனால், இங்கோ தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்கிறது.
விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் இறப்பு சான்றிதழ் பெற, வெளியுறவு செயலர்கள், சிவசங்கர மேனனும், நாராயணனும் இலங்கைக்கு தனி விமானத்தில் செல்கின்றனர். "பிரபாகரன் இறந்து விட்டார்; விடுதலைப்புலிகளை முற்றிலும் அழித்து விட்டோம்' என சொல்லும் இலங்கை அரசு, ராணுவத்துக்கு ஒரு லட்சம் வீரர்கள் புதிதாக சேர்க்கப்படுவர் எனக் கூறுவது எதனால்? ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில், போராட்டம் நடத்த அனுமதியில்லை. ஏன் போராட்டம் நடத்தக்கூடாது என மக்கள் சிந்திக்காமல் இருப்பதற்காகவே, கம்ப்யூட்டர் தர வேண்டிய காலத்தில் இலவச கலர், "டிவி' கொடுக்கின்றனர்; டாஸ்மாக் மதுபானக் கடையையும் திறந்து விட்டுள்ளனர். இவ்வாறு டைரக்டர் சீமான் பேசினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக