| இனத்தின் விடிவை நோக்கி அனைவரும் பராபட்சமின்றி பயணிக்க வேண்டும்: பிரித்தானிய கவனயீர்ப்பு நிறைவில் உறுதி |
| [வெள்ளிக்கிழமை, 19 யூன் 2009, 04:14 பி.ப ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] |
வரலாறு இட்ட வழிகாட்டலில், காலமிட்ட கட்டளையில் அனைவரும் ஒன்றிணைந்து - பாரபட்சமின்றி - எமது இனத்தின் விடிவை நோக்கி பயணிப்பதற்கு உறுதிபூண வேண்டும் என பிரித்தானியாவில் இடம்பெற்ற கவனயீர்ப்பு நிகழ்வின் நிறைவு குறித்து தமிழ் மாணவர்கள் வெளியிட்டிருக்கும்அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
பிரித்தானியாவில் 73 நாட்களாக இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம் நேற்று முன்நாள் புதன்கிழமை நிறைவடைந்தது. பிரித்தானியா வாழ் தமிழ் இளையோர்களால் கடந்த ஏப்ரல் 6 ஆம் நாள் தொடங்கப்பட்ட இந்த கவனயீர்ப்பு போராட்டம் பிரித்தானிய நாடாளுமன்ற முன்றலில் பல்வேறு இடையூறுகளைக் கடந்து நடைபெற்று வந்தது. நாளாந்தம் அங்கு குவிந்த தமிழ் மக்கள் இரவு - பகல் பாராது இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்தினால் குறிப்பிடத்தக்க சில நடவடிக்கைகளையும் பிரித்தானிய மற்றும் அனைத்துலக நாடுகள் மேற்கொண்டிருந்தன.
அத்துடன், போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் அங்கு தொடர் உண்ணாநிலைப் போராட்டங்களும் இடம்பெற்றன. குறிப்பாக பரமேஸ்வரன் தொடக்கம் ரிம் மாற்றின் வரை பலர் உன்னத பட்டினிப் போராட்டத்தை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் நேற்று முன்நாள் புதன்கிழமை மாலை 6:00 மணியளவில் நிறைவுக்கு வந்தது. இதனையடுத்து, இந்த போராட்டம் குறித்து பிரித்தானிய தமிழ் மாணவர்களால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழீழ தாயகத்தில்மனித நாகரீகமற்ற ஓர் அரக்கத்தனமான இன அழிப்பும் இனச் சுத்திகரிப்பும் நடந்து கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த கொடூரம் தாங்காது பொங்கி எழுந்து, உலகின் மனச்சாட்சியை தட்டி எழுப்ப நாம் அனைவரும் திரண்டெழுந்து, எமது உரிமைக்காய் குரல் கொடுத்து, உலகளாவிய தமிழர் போராட்டங்களுக்கு வித்திட்டோம். எமது போராட்டங்கள் உலக மனச்சாட்சியை முழுமையாக மாற்றத் தவறினாலும், எங்களால் முடிந்தவரை காத்திரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என்பதே உண்மை. இருந்தபோதும், தமிழீழ தாயகத்தில் நடந்தேறிய - நடைபெறும் சம்பவங்கள் எங்கள் அனைவரது மனக்கூண்டினுள்ளும் மாறாத வடுவாக - உயிர் உள்ள வரை எம்முள் எரியும் வேதனைத் தீயாகவே, ஒவ்வொரு இன மானமுள்ள தமிழனுக்கும் இருக்கும். இந்த வடு அல்லது வலி என்பதை நாம் வார்த்தைகளாகவோ உணர்வுகளாகவோ வெளிக்கொணர முடியாதவர்களாக, தாயகத்தில் அந்த மக்கள் மகிழ்வாக வாழவேண்டும் என்று அங்கலாய்த்துக்கொண்டு, இவைகள் யாவும் கனவாக இருந்து விடக்கூடாதோ என்ற ஆதங்கத்தோடும், நாம் அனைவரும் செய்வதறியாது மனப்புழுக்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் இது.
இந்த நிலையில் இங்கு கடந்த 73 நாட்களாக தங்களை வருத்தி உண்ணாநிலையில் இருந்து இவர்களுக்கு பக்கபலமாக அடையாள உண்ணாநிலையில் இருந்து இவர்கள் அனைவருடனும் சேர்ந்து நாளாந்தம் இந்த சதுக்க முன்றலில் உலகத்தின் மனச்சாட்சியை தட்டியெழுப்ப நாளாந்தம் அயராது அனைவரும் சேர்ந்து குரல் கொடுத்து, போராட்டங்கள் செய்து, வேதனை மிகுதியால் இந்த நாட்டில் வீதி மறியல்களையும் செய்து, நாம் காட்டிய தீவிரம் இன்று துயர் சூழ்ந்து இழப்புகளுக்கு மத்தியில் இழப்பதற்கு ஏதும் இன்றி வாழும் மக்களுக்கு ஆறுதலாகவும் எதிரிக்கு வெறுப்பையும், பயத்தையும் ஏற்படுத்தியிருந்தது. தமிழன் என்ற ஒரு இனம் காலம் காலமாக அடிமைப்பட்டு சேவகம் செய்து வந்த நிலையில் தமிழன் தன்மானம் கொண்டவன் வீரமிக்கவன். இனத்துக்காய் தன்னுயிர் கொடுப்பவன். மாற்றானை நேசிப்பவன், மண்டியிடமாட்டான். போராட்ட குணமும் பண்பும் கொண்ட எமது விடுதலைப் போராளிகளின் தியாகமும் அர்ப்பணிப்பும் எம்மை ஒரு பண்பானவர்களாகவும் உலகத்தின் முன் தலை நிமிரவும் வைத்துள்ளது. இன்னும் தமிழன் என்றால் அவன் யார் என்று அடையாளம் காட்டியுள்ளது. நாம் எந்த இனத்திற்கோ எந்த நாட்டிற்கோ எதிராக எமது போராட்டங்களை முன்னெடுக்கவில்லை. நாம் எமது மக்களுக்காக, நாம் காலம் காலமாக வாழ்ந்த மண்ணுக்காக, எமது விழுமியங்களுக்காவே குரல் கொடுத்து புகலிட தேசங்களில் அந்தந்த நாட்டின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு முரண்படாது எமது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். இனிவரும் காலங்களிலும் இதையே தொடருவோம். |
சனி, 20 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வரலாறு இட்ட வழிகாட்டலில், காலமிட்ட கட்டளையில் அனைவரும் ஒன்றிணைந்து - பாரபட்சமின்றி - எமது இனத்தின் விடிவை நோக்கி பயணிப்பதற்கு உறுதிபூண வேண்டும் என பிரித்தானியாவில் இடம்பெற்ற கவனயீர்ப்பு நிகழ்வின் நிறைவு குறித்து தமிழ் மாணவர்கள் வெளியிட்டிருக்கும்அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக