தலைப்பு-மூடப்படும் சிறப்புப்பள்ளிகள் : thalaippu_muudappadum_sirappupallikal

அரசின் நெருக்கடியால் மூடப்படும் சிறப்புப் பள்ளிகள்

  வெளியூர்  பேருந்துகளில், மாற்றுத் திறனாளிகள் சலுகைக் கட்டணத்தில் பயணம் செய்ய அரசு ஆணை உள்ளது. ஆனால், மாநிலத்திற்குள் மட்டுமே பயணிக்க முடியும். பிற மாநிலங்களுக்குச் செல்லும்  பேருந்துகளில் சலுகைக் கட்டணத்தில் பயணிக்க  இசைவில்லை.
  மாற்றுத்திறனாளிகளாக உள்ள விளையாட்டு வீரர்களுக்கான மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக்குக் குழு அலுவலகம் பெங்களூருவில் உள்ளது. அரசுப் பேருந்தில் பெங்களூரு சென்றால், ஓசூரில் இறக்கி விட்டு விடும் அவலம் உள்ளது. மீதிக் கட்டணம் செலுத்த முன்வந்தாலும் ஏற்பதில்லை.
  அதே நேரத்தில், சென்னையில் இருந்து வேளாங்கண்ணி செல்ல, புதுச்சேரி வழியாகச் செல்ல வேண்டும். பிற மாநிலம் வழியாக என்றாலும் சலுகைக் கட்டணம்  வழங்கப்படுகிறது. இதில், நிறைய பாகுபாடுகள் உள்ளமையால், மாற்றுத்திறனாளிகள் திணறும் சூழல் உள்ளது.
  உத்தரவைச் செயல்படுத்தும் மாற்றுத்திறனாளிகள் ஆணையத்திற்கும் இதுபற்றிய தெளிவு இல்லை. உயர் அதிகாரிகளும், மாற்றுத்திறனாளிகளைக் குழப்புகின்றனர்.
  மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ், அரசு ஏற்பு பெற்ற, 254 சிறப்புப் பள்ளிகள் உள்ளன. மன வளர்ச்சி குன்றியோருக்கு, அரசு ஒரு பள்ளியை மட்டுமே நடத்தி வருகிறது. மற்றவை, தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. அரசின் விதிமுறைகள் கிடுக்கிப்பிடி போடும் வகையில் உள்ளதால், இவற்றை நடத்த முடிவதில்லை. தனியார் பள்ளிகள் நடத்துவதற்கு உள்ள விதிமுறைகளே, சிறப்புப் பள்ளிகளுக்கும் உள்ளன. இதற்கான விதிமுறைகளைத் தளர்த்த வேண்டும் எனப் பல முறை,  துறைச்செயலர் வரை சென்றும், அவர்கள் கண்டு கொள்ளவில்லை.
  இதனால், சிறப்புப் பள்ளிகள், ஆங்காங்கே மூடப்பட்டு வருகின்றன. இதற்கு, அரசின் நெருக்கடிதான்  முதன்மையான காரணம். தொண்டு நிறுவனங்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தாலும்,  இசைவு பெற பல மாதங்கள் அல்லாட வேண்டி உள்ளது.
  மாற்றுத்திறனாளிகள் மீது அக்கறை உள்ளது போல், அரசு சொன்னதெல்லாம் ஏமாற்று வேலை என்பதுதான் உண்மை. அரசு வேலை வாய்ப்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு, மூன்று  விழுக்காடு இடஒதுக்கீடு செய்வதோடு, தனியார் துறைகளிலும் இந்த இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும். இதற்கான அரசாணை இருந்தும், அரசு துறைகளில் கூட, மூன்று  விழுக்காடு வேலைவாய்ப்பு தரப்படவில்லை.
  காலிப் பணியிடங்கள் இருந்தும், அவற்றை நிரப்பாமல், மாற்றுத்திறனாளிகளை, அரசு ஏமாற்றி வருகிறது. அப்புறம் எப்படித் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பை உறுதி செய்ய முடியும்?
  பொதுத்துறை வங்கிகளில், மாற்றுத் திறனாளிகள்  தற்றொழில்  தொடங்க, 25நூறாயிரம உரூபாய் வரை கடன் வழங்கப்படும் என, அறிவித்துள்ளது. ஆனால், வங்கிகள் கிடுக்கிப்பிடி விதிமுறைகளைப் போட்டுஉள்ளதால்,  தன்தொழில் கடன்கூடப் பெற முடியாத நிலை உள்ளது.
  மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பல சலுகைகளை அறிவித்துள்ளதாகத் தம்பட்டம் அடித்தாலும், அவை மாற்றுத்திறனாளிகளின் வாழ்வை மேம்படுத்துவதாக அமையவில்லை. அரசு, ஆசை காட்டி மோசம் செய்து விட்டது. இனி வரும் அரசாவது, மாற்றுத்திறனாளிகள் நலனின் அக்கறை செலுத்த வேண்டும்.
வீரமணி, மாற்றுத்திறனாளிகள் சங்கம் : veeramani,maatruthiranaali
வீரமணி ,பொது செயலர்,
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாழ்வுச் சங்கம்.
தினமலர்  [ 02.04.2047 /15.04.16]
dinamalar-name02