வியாழன், 21 ஏப்ரல், 2016

படிப்பதால் மட்டுமே விழிப்புணர்வுச் சிந்தனையைப் பெற முடியும்! – கவிஞர் மு.முருகேசு




தலைப்பு-வந்தவாசி-  மு.முருகேசு :thalaippu_padippathanaal-chinthanai_muurugesu

புத்தகம் படிப்பதால் மட்டுமே

குமுகாய விழிப்புணர்வுச் சிந்தனையைப் பெற முடியும்!

    – உலகப் புத்தக நாள் விழாவில் நூலக வாசகர் வட்டத் தலைவர் பேச்சு  

வந்தவாசி.ஏப்.17. வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின்  நூலக வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற உலகப் புத்தக நாள் விழாவில், “ஒவ்வொரு மனிதனும் புத்தகம் படிப்பதனால்மட்டுமே  குமுகாய(சமூக) விழிப்புணர்வுச் சிந்தனையைப் பெற முடியும்” என்று நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு குறிப்பிட்டார்.
     இவ்விழாவில் பங்கேற்ற அனவரையும் கிளை நூலகர் கு.இரா.பழனி வரவேற்றார்.  ஊர் உதவியாளர்கள் சங்க வந்தவாசி வட்டாரச் செயலாளர் பிரபாகரன், ஆசிரியர் திவாகர், நூலக உதவியாளர் மு. இராசேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
   விழாவில் சிறப்பு விருந்தினர்களாக வந்தவாசி  சுழற்சங்கத் தலைவர்  மரு. அ.சரவணன், சுழற்சங்கச் செயலாளர் மரு.ஆர்.இராம்குமார் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
     விழாவிற்குத் தலைமையேற்ற நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு, ‘நாள்தோறும் புத்தக நாளே!’ எனும் தலைப்பில் பேசியதாவது:
   ” ஒவ்வொரு மனிதனும்  மூச்சுஉயிர்ப்பதைப் போலவே, புத்தகம் வாசிப்பதையும்  கட்டாயம் கைக்கொள்ள வேண்டும். ஒரு மனிதனின் தன்னம்பிக்கையை வளர்த்தெடுப்பதற்கும்,  தற்சிந்தனையைத் தூண்டுவதற்கும் புத்தக வாசிப்பு மிகவும் இன்றியமையாதது. நாம் பெறுகிற கல்வி என்பது மனிதனின் வாழ்க்கைப் பாதையை வெளிச்சமாக்குகிறது என்றால், பாடப்புத்தகம் தாண்டிய ஏனைய  குமுகம்(சமூகம்), வரலாறு, அறிவியல், இலக்கியம், பண்பாடு சார்ந்த நூல்களே மனிதனின் அறிவு விரிவடைவதற்கு உதவியாக இருக்கின்றன.
    1923–இல்  இசுபெயினில் கூடிய உலகப் புத்தக விற்பனையாளர்கள் சங்கம் ஏப்பிரல்-23-ஆம் நாளை உலகப் புத்தக நாளாக அறிவித்தது. அந்த நாளில்தான் இக்கால இலக்கியத்தின் முன்னோடி என்று கொண்டாடப்படும்  இசுபானிய மொழி எழுத்தாளர் செர்வாண்டிசு மறைந்த நாளாகும். பிறகு, அதே நாளைத்தான்   ஐ.கஅ.ப.(யுனெசுகோ) நிறுவனமும் உலகப் புத்தக நாளாக அறிவித்தது. அதே நாளில் தான் உலகின் தலை சிறந்த நாடக மேதை  சேக்சுபியரும் மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
    புத்தகங்களைப்போல் சிறந்த நண்பர்கள் வேறில்லை என்பார்கள்.  புதுமை அறிவியல் தொழில்நுட்பம் பெருகியுள்ள  இக்காலச் சூழலில் மின்-நூல்கள், குறுந்தகடு, இணைய வழிப் புத்தக வாசிப்பு என்பதெல்லாம் புதிய வரவுகளாக இருக்கலாம். ஆனாலும், கையில் ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கும்  பேரின்பத்துய்ப்பை வேறு எதனாலும் தர முடியாது. எத்தனை மாற்றங்கள் வந்தாலும் தாள்களில் அச்சிடப்பட்ட புத்தகம் என்பதே என்றென்றைக்கும் இருக்கும். ஒவ்வொரு மனிதனும் புத்தகம் படிப்பதனால் மட்டுமே  குமுக(சமூக0 விழிப்புணர்வு சிந்தனையைப் பெற முடியும். அந்த விழிப்புணர்வோடு வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் சிந்தித்து வாக்களிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும் என்றார்.
    விழாவில், வந்தவாசி சுழற் சங்கத்தின் சார்பாக அரசுக்கிளை நூலகத்திற்கு 10  நாற்காலிகள் வழங்கப்பட்டன.
    நிறைவாக,  மூன்றாம் நிலை நூலகர் பூ.சண்முகம் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக