சிங்கள வதைமுகாம் கமுக்கங்கள்
– அம்பலப்படுத்துகிறார் மருத்துவர் து.வரதராசா! 2/6
இர.சிறீகந்தராசா:
இந்த இறுதிப் போரிலே எத்தனை பேர் படுகொலை செய்யப்பட்டார்கள், காணாமல் போகச்
செய்யப்பட்டார்கள் என்கிற சரியான புள்ளிவிவரங்கள் இல்லை. ஆனால், “1,46,000
பேருக்கு என்ன நடந்தது எனத் தெரியாது” என்ற கருத்து மன்னார் மறை மாவட்ட
ஆயர் அவர்களால் முன்வைக்கப்பட்டது. அதே நேரத்திலே, ஐக்கிய நாடுகள் அவை
40,000 பேர் இறந்தார்கள், 30,000 பேர் இறந்தார்கள் என்று சில இடங்களிலே
கூறியது. நான் சென்ற ஓர் இடத்தில், ஐ.நா.,வின் முன்னாள் அலுவலர் ஒருவர்
80,000 வரையான தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறியிருந்தார்.
அதாவது களத்தில் மாத்திரம் – முள்ளிவாய்க்கால், வன்னிப் பகுதியில் நடந்த
போரில் மட்டும். அதற்கு வெளியில், அதாவது முகாம்களுக்குச் சென்றபொழுது எவ்வளவு பேர் கொல்லப்பட்டார்கள் என்று தெரியாது.
ஆனால் 80,000 பேர் இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று
ஐ.நா.,வின் உயர் அலுவலர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். அது வெளியில் வராத
ஒரு சந்திப்பு. உங்களுடைய கணக்கின்படி, வன்னியில் மட்டும் – வன்னியில்
நடந்த எறிகணை வீச்சுக்கள், வான்வழித் தாக்குதல்களில் – எத்தனை பேர்
கொல்லப்பட்டிருக்கலாம் என்று நீங்கள் கணிக்கிறீர்கள்?
து.வரதராசா: இது சிக்கலான ஒரு கேள்வி. எங்களுக்குப் புள்ளி விவரங்களை எடுப்பது தொடக்கத்திலிருந்தே சிரமமாக இருந்தது. பொதுவாக, வழமையான
நிலையில் இறந்தவர்களை மருத்துவமனைகளுக்குக் கொண்டு வருவார்கள்.
அப்படிப்பட்ட சூழலில் நாங்கள் அந்தப் பதிவுகளை மேற்கொண்டிருக்கலாம். இது
வழமைக்கு மாறான சூழ்நிலை. போக்குவரத்து எல்லாம் சீர் இல்லாத ஒரு
சூழ்நிலையில் இறந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு வர முடியாத நிலை
இருந்தது. காயமடைந்தவர்களை மட்டும்தான் ஏதோ கொஞ்சம் சிரமப்பட்டு, தூக்கியோ ஈருருளி
(மோட்டார் சைக்கிள்) போன்ற ஊர்திகளிலோ கொண்டு வருவார்கள். இறந்தவர்களைக்
கணக்கிடுவதில் எங்களுக்குத் தொடக்கத்தில் இருந்தே சிக்கல் இருந்தது.
ஏறத்தாழ 40,000-க்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள் என்பது
பல்வேறு புள்ளிவிவரங்கள் ஊடாகத் தெரியப்படுத்தப்படுகின்றது. ஆனால், இந்தப்
புள்ளிவிவரத்தை முறையாக மேற்கொள்ள வேண்டும் என்கிற தேவை இருக்கின்றது. இதை
இலங்கை அரசு, அரசு அலுவலர்கள், அரசுத் திணைக்களம், பிறப்பு – இறப்புப்
பதிவாளர்கள் ஆகியோர் மூலம் கணக்கிட வேண்டிய தேவை இருக்கின்றது. இதைச்
செய்வதன் மூலம் நாங்கள் சரியான புள்ளிவிவரத்தை எடுத்துக் கொள்ளலாம்.
இர.சிறீகந்தராசா: நீங்கள்
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக இருந்த வன்னியிலும்,
வாகரையிலும் கடமையாற்றியவர். நீங்கள் முன்னெடுத்த மருத்துவப் பணிகளில்,
மக்களுக்கான பணிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுடைய ஒத்துழைப்பு எவ்வாறாக
இருந்தது?
து.வரதராசா: நான் வாகரையில் கடமையாற்றிய பொழுதும் சரி, முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு, வன்னிப் பகுதிகளில் கடமையாற்றிய பொழுதும் சரி, விடுதலைப் புலிகளுடைய படை அணிக்கும், அவர்களுடைய மற்ற பிரிவினருக்கும் எங்களுக்கும் நேரடியாகத் தொடர்பு இருந்ததில்லை. நான் மருத்துவன் என்ற முறையிலும், மருத்துவ அலுவலர் என்ற முறையிலும், விடுதலைப் புலிகளுடைய நலவாழ்வுப் பிரிவினர், மருத்துவப் பிரிவினர் எங்களுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தார்கள். சில மருத்துவமனைகளில், குறிப்பாக நாட்டுப்புற மருத்துவமனைகளில், அல்லது
பொது மருத்துவமனைகளில் இருந்து நாட்டுப்புறப் பகுதிகளை நோக்கி இருக்கின்ற
இடங்களில் அரசு மருத்துவர்களைப் பணியமர்த்துவதில் பற்றாக்குறை இருந்தது.
விடுதலைப் புலிகளினுடைய நலவாழ்வுப் பிரிவின் மருத்துவர்கள், ஈகைப்
பேரொளி திலீபன் மருத்துவமனையின் மருத்துவர்கள் உதவியுடன் அந்த நாட்டுப்புற
மருத்துவமனைகளை நாங்கள் செயல்படுத்திக் கொண்டிருந்தோம்.
விடுதலைப் புலிகளின் மருத்துவர்கள் அங்கு ஒவ்வொரு நாளும் தங்கிப் பண்டுவம் (சிகிச்சை) வழங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த மருத்துவமனை எங்களுடைய கட்டுப்பாட்டில் இருந்தாலும், அந்த
மருத்துவர்கள் விடுதலைப் புலிகளினுடைய நலவாழ்வுப் பிரிவினராக
இருந்தார்கள். அதே போல, பல்வேறு நலவாழ்வுத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு
அவர்களுடைய உதவி தேவைப்பட்டது. மிகவும் ஒத்துழைப்புத் தந்தார்கள். சில
இடங்களில் நாங்களும், அவர்களும் சேர்ந்து கூட வேலை செய்ய வேண்டிய சூழ்நிலைகள் இருந்தன. அது மிகவும் ஆறுதலாகவும், உதவியாகவும் இருந்தது. எங்களுக்கு என்பதை விட மக்களுக்கு அது ஒரு பெரும் உதவியாக இருந்தது.
இர.சிறீகந்தராசா:
விடுதலைப் புலிகள் தங்களிடம் மருந்துப் பொருட்களையும் வைத்திருந்தார்கள் –
தமக்கென்று, போராளிகளுக்கென்று. அந்த மருந்துப் பொருட்கள் தொடர்பில்
எவ்வாறான ஒத்துழைப்பு உங்களுக்குக் கிடைத்தது விடுதலைப் புலிகள்
தரப்பிலிருந்து?
து.வரதராசா: எங்களிடமிருந்த மருந்துகளை வைத்துத்தான் எங்களுடைய சிறிய மருத்துவமனைகளை, நாட்டுப்புற மருத்துவமனைகளைச் செயல்படுத்திக்
கொண்டிருந்தோம். விடுதலைப் புலிகளுடைய மருத்துவர்கள் அங்கு
கடமையாற்றியிருந்தார்கள். ஆனால், சில மருந்துப் பொருட்களை இலங்கை அரசு
எங்களுக்குத் தர மறுத்து விட்டது. எடுத்துக்காட்டாக மயக்க மருந்து, குருதி
ஏற்றுகின்ற குருதிப் பை போன்றவற்றைத் தர முற்று முழுதாக மறுத்து
விட்டார்கள். அவ்வாறான வேளைகளில் விடுதலைப் புலிகளினுடைய மருந்துகளை
நாங்கள் வாங்கிப் பயன்படுத்தியிருக்கிறோம்.
இர.சிறீகந்தராசா: நீங்கள்
இறுதி வரை, அதாவது இறுதி நாட்கள் வரை முள்ளிவாய்க்காலில் பணிபுரிந்த
மருத்துவர். உங்கள் பொறுப்பில் ஒரு மருத்துவமனை இருந்தது என அறிகிறோம்.
து.வரதராசா: ஆம். நான்
முல்லைத்தீவு மாவட்டப் பகுதியின் நலவாழ்வுப் பணியாளராகக்
கடமையாற்றியிருந்தேன். அதே நேரம், முல்லைத்தீவு மருத்துவமனையில் மருத்துவ
அலுவலராகவும் கடமையாற்றியிருந்தேன் – வழமையான சூழ்நிலையில்.
2009ஆம் ஆண்டு இடப்பெயர்வுக்குப் பின்னர் முதலில் புதுக்குடியிருப்பு
மருத்துவமனையின் மருத்துவ அலுவலராகக் கடமையாற்றியதோடு, அதற்குப் பின்பு புது மாத்தளன், வலைஞர் மடம், பொக்கணை போன்ற மருத்துவமனைகளுக்கு இடம்பெயர்ந்த பொழுதும் நான் மருத்துவ அலுவலராகக் கடமையாற்றியிருந்தேன்.
இர.சிறீகந்தராசா:
அப்படிப் பணியாற்றிய நீங்கள் எவ்வாறு கைதானீர்கள்? அதாவது, நீங்கள் போர்
முடிகின்ற கட்டத்தில் சிங்களப் படைகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச்
சென்றபொழுது எந்த அடிப்படையில் உங்களைக் கைது செய்தார்கள்?
து.வரதராசா:
எங்களை அவர்கள் உண்மையில் கைது செய்திருக்கக் கூடாது. நாங்கள் அரசு
மருத்துவர்கள். அரசு மருத்துவமனையில் வேலை செய்து கொண்டிருந்தோம்.
அதற்குரிய முறையான ஒப்புதல் கடிதங்கள், முறையான
இசைவுகள்(அனுமதிகள்) எல்லாம் எடுத்துத்தான் அந்த இடத்தில் நாங்கள் வேலை
செய்திருந்தோம். ஒவ்வொரு கிழமையும் (வாரமும்) அங்கே இருக்கின்ற நிலைமைகளை எமது நலவாழ்வுத் திணைக்களத்திற்கு நாங்கள் தெரியப்படுத்துவோம் – நிலைமை அறிக்கை (situation report) என்று. மருத்துவத் தேவைகள், மக்களினுடைய காயங்களின் எண்ணிக்கை, மக்களின் எண்ணிக்கை எல்லாம் அந்த அறிக்கையில் இருக்கும். நாங்கள் ஓர் இடத்தில்கூட அரசுக்குத் தெரியப்படுத்தாமலோ, அவர்களின் நெறிமுறைகளை மீறியோ எந்தவொரு வேலையும் செய்யவில்லை.
மே மாதம் 15ஆம்
நாள் மருத்துவமனைகள் எல்லாம் இயங்க முடியாத ஒரு கட்டம் வந்துவிட்டது. 12ஆம்
நாளுக்குப் பிற்பாடு போர் மிகவும் அண்மையிலும், மிகவும்
கொடுமையாகவும் நடந்து கொண்டிருந்தது. 14ஆம் நாள் இரவிரவாக விடியும்
வரைக்கும் கடுமையான போர் நடந்து கொண்டிருந்தது. நாங்கள் தங்கியிருந்த
இடத்தில்தான் எல்லா மருத்துவர்களும், சில ஊழியர்களும் இருந்தோம்.
15ஆம் நாள் நண்பகல் நான் காயமடைந்தேன். அந்தக் காயமடைந்த சிறிது நேரத்தில்
அந்த இடத்திற்குப் (சிங்களப்) படையினர் வந்து விட்டார்கள். வந்து எங்களைத்
தங்களுடைய கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருமாறு கூறினார்கள். பின்பு, நான்
பண்டுவத்துக்காக அவர்களுடைய படையினர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன்.
ஏனைய மருத்துவர்கள் அங்கிருந்து ஓமந்தைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஓமந்தையில்
வைத்து அவர்களைப் பிரித்து நான்காம் மாடிக்கு உசாவலுக்காக (விசாரணைக்காக)
அழைத்துச் சென்றிருந்தார்கள். என்னைக் கிளிநொச்சியில் உள்ள அவர்களுடைய
கமுக்கமான (இரகசியமான) படைச் சிறையில் ஒரு கிழமைக்கு (வாரத்துக்கு) மேல்
வைத்திருந்தார்கள்.
இர.சிறீகந்தராசா: எந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில், எந்தச் சட்டத்தின் கீழ் உங்களை அப்படித் தடுத்து வைத்திருந்தார்கள்?
து.வரதராசா: நான் முதலில் சொன்னது போல், குற்றம்
எதையும் நாங்கள் இழைத்திருக்கவில்லை. ஆனாலும் வன்கொடுமைத் (பயங்கரவாத)
தடுப்புப் பிரிவின் கீழ்தான் எங்களைக் கைது செய்திருந்தார்கள். குற்றப் புலனாய்வுப் பிரிவினரும், வன்கொடுமைத் தடுப்புப் பிரிவினரும், அதைச்
சார்ந்தவர்களும்தாம் எங்களிடம் உசாவல்களை(விசாரணைகளை)
மேற்கொண்டிருந்தார்கள். எங்களுக்கு எதிரான எந்த விதமான குற்றச்சாட்டும்
நேரடியாகச் சுமத்தப்படவில்லை. உசாவலில் கூட எங்களுக்கு எதிராக ஒரு
குற்றச்சாட்டைக் கூட அவர்களால் உறுதிப்படுத்த முடியவில்லை. ஏனென்றால், நாங்கள் எல்லாவற்றையும், எல்லாச் செயல்பாடுகளையும், நடைமுறைகள் அனைத்தையும் நலவாழ்வுத் துறையின் சட்டத் திட்டங்களுக்கு அமையத்தான் செய்திருந்தோம்.
நன்றி: ஈழமுரசு
தரவு: தமிழ் அருள்
http://www.tamilarul.com/?p=23541
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக