வியாழன், 21 ஏப்ரல், 2016

யாழிசை – நூலறிமுகம், தொரந்தோ




யாழிசை – நூலறிமுகம், தொரந்தோ

அழை-யாழிசை- நூலறிமுகம் :azhai_yaazhisai_arimukam
  கொழும்பு மகசீன் சிறையில் அரசியல் கைதியாக அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் சிவ. ஆருரன் எழுதிய “யாழிசை” என்ற குமுகாயப் புதினம்(சமூக நாவல்) கனடாவில் ஞாயிற்றுக் கிழமை  சித்திரை 11, 2047 / ஏப்பிரல் 24 அன்று வெளியிடப்பட உள்ளது.
இனத்தின் வலியைச் சுமந்து சிறையில் துன்புற்று வாழும் இந்த நூலாசிரியரின் சிறைக்குள் இருந்து மலரும் இசையாக இந்த யாழிசை கடல் கடந்தும் உலகத் தமிழ் உறவுகளின் உள்ளங்களைத் தொட வெளிவந்துள்ளது.
சிறை வாழ்வில் இனி ஏது வாழ்வு என நொடிந்து துன்புறும் சிறை வாழ்வாளர்களிடையே சிறைக்குள் இருந்தாலும் எழுதுகின்ற  வேட்கையை எவராலும் பூட்டி வைக்க முடியாது என   மெய்ப்பித்திருக்கும் இவரின் எழுத்துகளை உலகத் தமிழ் உறவுகள் அள்ளி அரவணைத்து போற்றிப் பாராட்டுவது கடனாகும்.
400 பக்கங்களைக் கொண்ட இந்தப் புதினத்தின் சில படலங்களை(அத்தியாயங்களை)ப் படித்தவள் என்ற வகையில் வன்னி மண்ணின் அழகியலை வாழ்வியல் வலிகளைச் சமூக மாந்தர் வாழ்வியல் சுமைகளை அந்த நூலினுள் எம்மையும் நுழைய வைத்து அழகாகக் கதை நகர்கின்றது.
குமுக(சமூக)ச் சிக்கல்களை  – குறிப்பாக வன்னி மாவட்ட மாணவர்கள் சிக்கல்களை –  மையப்படுத்தியதாக நகரும் கதையில் கதை மாந்தர்கள் மனத்தோடு ஒட்டிக் கொள்கின்றார்கள். நாம் அவர்களோடு வாழும் சுவையை உணர்கின்றோம்.
இது வரை ஆறு படலங்களோடு வாழ்ந்து விட்டவள் என்றவகையில் இந்தப் புதினத்தின்  கதைப்பாங்கு என்னை ஈர்த்திருக்கின்றது என்பதை இங்கு உரைக்க விரும்புகின்றேன்.
முன்னாள் போராளிகள் எனக் கூறிச் சிலர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தி எழுதிக் கொண்டிருக்க,  சிவ. ஆரூரன் அவர்கள் முன்னாள் போராளிக் கதைப்பாத்திரத்தை மனத்தில் கோபுரமிட்டுப் போற்ற வைக்கின்றார். இந்த நூல் ஆதிக்க வன்கொடுமையாளர் கோரப் பிடிக்குள் சிறைக் கம்பிகளுக்குள் இருந்து எழுதப்பட்டாலும் பேரினவாதத்திற்கு, போராட்டத்திற்கான  பரப்புரை விலை போன சில குப்பைப்புதினங்கள்போல் இல்லை என்ற உணர்வு மனத்தில் நிறைவை தருகின்றது.
மென்மையான குமுக(சமூக)ச் சிக்கல்களில் மையமிட்டு உன்னதமான போராட்டத்தை மறைமுகமாக உயர்த்தி வைத்துக் கதை நகர்கின்றது.
கதையைப் படிக்க படிக்க அந்த மண்ணின் புழுதிக்குள் நாமும் ஆழ்ந்து போகின்றோம். இழந்த தாய் மண்ணின் வாழ்வின் அழகை,  புலத்தில் பனித் தேசத்தில் இருந்தபடி வாழ்ந்து பார்க்கும்  இனிமை மனத்துக்குள் எழுகின்றது.
தொடர்கின்ற  படலங்கள் என்ன சொல்கின்றன என்பதைப் பின்னர்ப் பார்க்கலாம்…
கனடா வாழ் உறவுகளே இந்தச் சிறை வாழ் உணர்வாளர் எழுத்து வெற்றி பெறுவது இனி உங்கள் கையில்!
.நூல் வெளியீட்டுக்கு அனைவரும் வாருங்கள் என அன்போடு வேண்டுகின்றேன்.
செந்தமிழினி பிரபாகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக