குமரிக் கண்டம் இருந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள்
வரலாற்றுக் காலத்திலேயே
தென்னிந்தியாவின் கிழக்கிலும் மேற்கிலும் பல கடல்கோள்கள் நிகழ்ந்துள்ளன.
அவற்றால் தமிழகத்துத் துறைமுகப் பட்டினங்கள் பல நீரில் மூழ்கிவிட்டன. குமரிமுனைக்குத் தென்பாலும் நிலப்பகுதி இருந்ததாகவும் அதைக் கடல் கொண்டு போயிற்றென்றும் புவியியலார் கருதுகின்றனர். ஆனால், அந்நிலப்பகுதி எவ்வளவு தொலைவுக்குப் பரவியிருந்தது என அறுதியிட்டு அறிய முடியவில்லை.
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலும் பல
கடல்கோள்கள் நிகழ்ந்திருக்கக்கூடும். கடல் கொண்டு போன அத்தென்னிலப்
பகுதிக்குக் ‘குமரிக்கண்டம்’ என்றொரு பெயருண்டு. குமரிக்கண்டத்தைப் பற்றிய குறிப்புகள் தமிழ் இலக்கியங்களிலும் உரைகளிலும் ஆங்காங்கு அகச் சான்றுகளாக விரவிக் காணப்படுகின்றன. பாண்டியன் ஒருவன் ‘பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங் கடல் கொள்ள, வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு தென்திசை யாண்ட’தாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது.1
அதாவது இப்பாண்டியனின் நாடு குமரிமுனைக்குத் தெற்கே நெடுந்தொலைவு
பரவியிருந்ததாம். அந்நாட்டில் பஃறுளியாற்றையும் பன்மலையடுக்கத்துக்
குமரிக்கோட்டையும் கடல்கொண்டு போயிற்று. இக்காரணத்தால் தன் நாட்டின்
பரப்பானது சுருங்கி விட்டதைக் கண்டான் பாண்டிய அரசன். தென்பால் கடல்
மண்டிவிட்டதால் அவன் வடபால் தன் நோக்கத்தைச் செலுத்தினான். வடக்கில் படை
செலுத்திச் சென்று இழப்புக்குள்ளான பஃறுளியாற்றுக்கு ஈடாகக் கங்கையையும்,
குமரிக்கோட்டுக்கு ஈடாக இமயத்தையும் கைக்கொண்டான். இச்செய்தியைப் பற்றிய
குறிப்பு ஒன்று முல்லைக் கலியிலும் காணப்படுகின்றது. ‘மலிதிரை
ஊர்ந்துதன் மண்கடல் வௌவலின், மெலிவின்றி மேற்சென்று மேவார் நாடு இடம் படப்
புலியொடு வில்நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை வலியினான் வணக்கிய
வாடாச்சீர்த் தென்னவன்’ என்று ஆசிரியர் சோழன் நல்லுருத்திரனார் கூறுகின்றார்.2 நக்கீரர், அடியார்க்கு நல்லார் ஆகிய உரையாசிரியர் காலத்திலும், நல்லுருத்திரனார்
காலத்திலும் தொல்காப்பியனாருக்கு முன்பு ஒன்றும் பின்பு ஒன்றுமாக இரண்டு
கடல்கோள்கள் நிகழ்ந்த செய்தியும், அவற்றால் தமிழகத்துக்குப் பேரிழப்பு
நேரிட்ட செய்தியும் பரவலாக வழங்கி வந்திருக்க வேண்டும்.
கடல்கோள்களுக்குட்பட்டு மூழ்கிப் போன நிலப்பகுதிக்கு ‘இலெமூரியாக் கண்டம்’ என்று பெயரளிக்கப்பட்டது. சர்.வால்டர் இராலே, பேராசிரியர் எக்கல், சர்.சான் ஈவான்சு, இசுகாட் எலியட்டு, சர்.சே.தபிள்யூ. ஓல்டர்னசு
ஆகிய ஆய்வாளர்கள் இந்நிலப்பகுதி ஒன்று பண்டைய காலத்தில் இருந்ததென்று
ஒப்புக் கொண்டுள்ளனர். அஃதுடன், இங்குதான் மக்களினமே முதன்முதல் உலகின்மேல்
தோன்றிற்று என்றும் கூறி ‘இலெமூரியக் கொள்கை’யை உருவாக்கினர்.
கன்னியாகுமரிக்குத் தெற்கிலும் கிழக்கிலும் பெரிய நிலப் பகுதி ஒன்று பரந்து
கிடந்தது என்பதற்கும், பிற்பாடு அது பகுதி பகுதியாகப் பல கடல்கோள்களினால்
மூழ்கிப்போயிற்று என்பதற்கும் அகச் சான்றுகளும் புறச் சான்றுகளும் உள்ளன.
ஆனால், அஃது எவ்வளவு தொலைவு பரவி இருந்தது. இறுதியாக எப்போது மறைந்து
போயிற்று என்பது இன்னும் புவியியல் புதிர்களில் ஒன்றாகவே உள்ளது.
எண் குறிப்பு:
- சிலப்பதிகாரம்: 11:19-23.
- முல்லைக்கலி: 4:1-4.
வரலாற்றுப் பேராசிரியர் முனைவர் கே.கே.பிள்ளை:
– தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்
முதல் படம்: நன்றி சிந்தனையைத் தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக