தனிமங்கள்(Chemical Elements)
- இலக்குவனார் திருவள்ளுவன்
அணுக்கள் பல இணைந்தவையே பொருள்கள். இவற்றுள் ஒரே வகை அணுக்கள் பல
சேர்ந்தது தனிமம்(element) எனப்படுகிறது. ஒரு தனிமத்தின் அணுவைப்போல்
மற்றொரு தனிமத்தின் அணு இருக்காது. ஆதலின் ஒரே அணு எண் கொண்ட அணுக்களால்
முழுவதுமான பொருளே தனிமம் ஆகும். சான்றாக இரும்பு ஒரு தனிமம். இதில்
இரும்பு அணுக்களின் பொருளைத் தவிர வேறு எந்தப் பொருளின் அணுக்களும் இரா.
தனிமமானது மாழை(உலோகம்), அல்மாழை(அலோகம்) என இருவகைப்படும்.
இயல்பான நிலையில் தனிமங்கள் திண்பொருளாகவும்(எ.கா. பொன், செம்பு)
நீர்ப்பொருளாகவும் [(எ.கா. (அ.) மாழை: அதள்(பாதரசம்) ; (ஆ.) அல்மாழை:
செந்நீர்மம் (புரோமின்)], சில வளிநிலையிலும் (எ.கா. உயிர்வளி) உள்ளன.
இயற்கையில் பல தனிமங்கள், வேறு சில தனிமங்களுடன் சேர்ந்தே கிடைக்கின்றன.
இவ்வாறு இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட தனிமங்கள் குறிப்பிட்ட நிறை
விகிதத்தில் இணைந்து சேர்ந்த கலவை சேர்மம் எனப்பெறும்.
அதே போல் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட தூய பொருள்கள் வீத அளவின்றிச் சேருவது கலவை.
தனிமத்தின் மிக மிகச்சிறிய அலகுதான் அணு எனப்பெறுகிறது. அணுவானது
முன்னணு(புரோட்டான்), நள்ளணு(நியூட்ரான்), மின்னணு( எலக்ட்ரான்) போன்ற
நுண்ணிய அணுத்துகள்களாகப்பிரிக்கப்படக் கூடியது.
இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட அணுக்கள் ஒன்று சேர்ந்து மூலக்கூறுகளை (molecules) உண்டாக்குகின்றன.
அணுக்கள் சேர்ந்து மூலக்கூறுகளை உருவாக்காமல் தனித்த நிலையில் உள்ள
அணுக்களை அடிப்படை அலகுகளாகக் கொண்ட தனிமங்கள் உள்ளன. இவை ஓரணுத்
தனிமங்கள் ஆகும்.
இவற்றுள் ஒரே வகை அணுக்கள் சேர்ந்த மூலக்கூறுகளை உடையது தனிமம்.
வெவ்வேறு வகை அணுக்கள் சேர்ந்த மூலக்கூறுகளைக் கொண்டது சேர்மம்.
ஒரு தனிமத்தின் அணுவின் உட்கருவில் உள்ள முன்னணுக்களின்(புரோட்டன்களின்)
எண்ணிக்கையைக் குறிப்பது அணு எண் எனப்பெறும். தனிமங்களின் பெயர்கள் அணு
எண்களின் வரிசைக்கு ஏற்பவும் அணுநிறைகளின் வரிசைக்கு ஏற்பவும் அகர
வரிசைப்படியும் அட்டவணையாக உருவாக்கப்பட்டுள்ளன. இங்கு நாம், அணு எண்
நிரல்படி அட்டவணையைப் பார்ப்போம்.
தனிமத்தின் பெயர்களுள் பல இலத்தீன், கிரேக்கம் முதலிய மொழிச்
சொற்களாகும். கண்டறிந்த வல்லுநர்களின் பெயர்கள், கண்டறிந்த இடங்களின்
பெயர்கள், பிற அறிவியல் அறிஞர்களின் பெயர்கள் என்ற முறையில் பல பெயர்கள்
அமைந்துள்ளன. இப் பெயர்களில் இருக்கும் ஒன்று அல்லது இரண்டு எழுத்துகளில்
உருவாக்கப்பட்டதே வேதியல் குறியீடு ஆகும். நாம் ஏன் இவற்றைத் தமிழில்
குறிப்பிட வேண்டும் எனச் சிலர் வினவலாம். தமிழில் படித்தால்தான் நன்கு
புரிந்து கொள்ளவும் உள்ளத்தில் பதிந்து கொள்ளவும் இயலும். தொடக்க
நிலையில் தமிழிலும் பின்னர் அடைப்பிற்குள் உள்ள பன்னாட்டு முறையையும்
தெரிந்து கொள்வதே நலமாகும்.
தனிமங்களின் அட்டவணை
அணு எண்
|
தனிமம்
|
குறியீடு
| அணுநிறை |
1 | நீர்வளி (Hydrogen) | நீ (H) | 1.00797 |
2 | கதிர்வளி (Helium) | க (He) | 4.0026 |
3 | கல்லம் (Lithium) | கல் (Li) | 6.94 |
4 | குருகம் (Beryllium) | கு (Be) | 9.0122 |
5 | பழுப்பம் (Boron) | ப (B) | 10.811 |
6 | கரிமம் (Carbon) | கரி (C) | 12.011 |
7 | வெடிவளி (Nitrogen) | வெ (N) | 14.0677 |
8 | உயிர்வளி (Oxygen) | உ (O) | 15.994 |
9 | பைம்மஞ்சள்வளி (Fluorine) | பை (F) | 18.9984 |
10 | புத்தொளிரி (Neon) | பு (Ne) | 20.1797 |
11 | வெடிமம் (Sodium) | வெடி (Na) | 22.9898 |
12 | வெளிமம் (Magnesium) | வெளி (Mg) | 24.312 |
13 | ஈயம் (Aluminium) | ஈம் (Al) | 26.98 |
14 | கன்மம் (Silicon ) | கன் (Si) | 28.086 |
15 | எரிமம் (Phosphorous) | எ (P) | 30.974 |
16 | கந்தகம் (Sulfur) | கக (S) | 32.064 |
17 | பாசிகம் (Chlorine) | பா (Cl) | 35.453 |
18 | மடியன் (Argon ) | மடி (Ar ) | 39.9 |
19 | சாம்பரம் (Potassium ) | சா (K ) | 40.1 |
20 | சுதைமம் (Calcium) | சு (Ca) | 45.0 |
21 | ‘காண்டிமம்’ (Scandium ) | கா (Sc ) | 44.956 |
22 | கரும்பொன்மம் (Titanium ) | கரு (Ti) | 47.9 |
23 | வெண்ணாகம் (Vanadium ) | வெக(V ) | 50.942 |
24 | குருமம் (Chromium ) | குரு (Cr ) | 51.996 |
25 | மங்கனம் (Manganese ) | மங் (Mn ) | 54.938 |
26 | இரும்பு (iron) | இரு (Fe ) | 55.847 |
27 | வண்ணிமம் (Cobalt) | வண் ( Co) | 58.933 |
28 | வெள்ளையம் (Nickel ) | வெய (Ni i ) | 58.91 |
23 | செம்பு (Copper ) | செ (Cu ) | 63.5 |
30 | துத்தநாகம் (Zinc ) | து (Z n) | 65.4 |
31 | நரைமம் (Gallium ) | ந (Ga) | 69.72 |
32 | ‘செருமம்’ (Rubidium ) | செரு (Rb) | 72.59 |
33 | சவ்வீரம் (Arsenic ) | ச (As) | 74.9 |
34 | மதிமம் (Selenium) | நி (Se) | 78.96 |
35 | செந்நீர்மம் (Bromine) | செநீ (Br) | 79.904 |
36 | மறைவளி (Krypton) | மறை (Kr) | 83.80 |
37 | செவ்வரிமம்(Rubidium) | செம் (Rb) | 85.47 |
38 | வெண்ணிமம்(Stronium) | வெணி(Sr) | 87.62 |
39 | கருநரைமம்(Yttrium) | கந (Y) | 88.905 |
40 | வண்மம்(Zirconium) | வம(Zr) | 91.22 |
41 | அருமிமம்(Niobium) | அரு (Nb) | 92.906 |
42 | முறிவெள்ளி(Molybdenum) | மு(Mo) | 95.94 |
43 | செயற்கைத்தனிமம்(Technetium) | செய(Te) | 97.9072 |
44 | சீர்பொன்(Ruthenium) | சீர்(Ru) | 101.07 |
45 | திண்ணிமம்(Rhodium) | திண்(Rh) | 102.90550 |
46 | பொன்னிமம்(Palladium) | பொம்(Pd) | 106.42 |
47 | வெள்ளி(Silver) | வெள்(Ag) | 107.8682 |
48 | வெண்ணீலிமம்(Cadmium) | வெநீ(Cd) | 112.44 |
49 | நீலவரிமம்(Indium) | நீவ(In) | 114.8182 |
50 | வெள்ளீயம்(Tin) | வெஈ(Sn) | 118.710 |
51 | நொய்ம்மிமம்(Antimony) | நொ(Sb) | 121.760 |
52 | ஒளிர்மம்(Tellurium) | ஒ(Te) | 127.60 |
53 | கருமயிலம்(Iodine) | கம(I) | 126.90447 |
54 | அயலிமம்(Xenon) | அய (Xe) | 131.30 |
55 | நீலநீறிமம்(Cesium) | நீநீ(Cs) | 132.90543 |
56 | மங்கிமம்(Barium) | ம(Ba) | 137.327 |
57 | ஊக்கிமம்(Lanthanum) | ஊ(La) | 138.9055 |
58 | நெகிழிமம்(Cerium) | நெ(Ce) | 140.115 |
59 | வெண்மஞ்சை(Praseodymium) | வெம(Pr) | 140.90765 |
60 | புதுமஞ்சை(Neodymium) | புமNd) | 144.24 |
61 | கதிர்மம்(Promethium) | கம்(Pm) | 144.9127 |
62 | வெண்நரைமம்(Samarium) | வெந(Sm) | 150.35 |
63 | ‘ஐரோப்பிமம்’ (Europium) | ஐ(Eu) | 151.965 |
64 | காந்தனிமம்(Gadolinium) | காம் (Gd) | 157.25 |
65 | விளர்மம்(Terbium) | விள(Tb) | 158.92534 |
66 | உறிமம்(Dysprosium) | உறி(Dy) | 162.50 |
67 | ‘ஓல்மிமம்’(Holmium) | ஓ(Ho) | 164.93032 |
68 | ‘எர்பிமம்’ (Erbium) | எர்(Er) | 167.26 |
69 | வடமம்(Thulium) | வ(Tm | 168.93421 |
70 | ‘எட்டர்பிமம்’(Ytterbium) | எம் (Yb) | 173.04 |
71 | மஞ்சிமம்(Lutetium) | மம் (Lu) | 174.967 |
72 | ‘ஆஃப்னிமம்’(Hafnium) | ஆஃப்(Hf) | 178.49 |
73 | வெம்மம்(Tantalum) | வெம்(Ta) | 180.9479 |
74 | மின்னிழைமம்(Tungsten) | மி(W) | 183.84 |
75 | அரிமம்(Rhenium) | அரி(Re) | 186.207 |
76 | விஞ்சிமம்(Osmium) | விம்(Os) | 190.2 |
77 | உறுதிமம்(Iridium) | உறு(Ir) | 192.217 |
78 | வன்பொன்(Platinum) | வ.பொ.(Pt) | 195.08 |
79 | தங்கம்(Gold) | த(Au) | 196.95654 |
80 | இதள்(Mercury) | இத(Hg) | 200.59 |
81 | சாம்பிமம்(Thallium) | சாம்(Ti) | 204.3833 |
82 | காரீயம்(Lead) | காரீ(Pb) | 207.2 |
83 | நிமிளை(Bismuth) | நிமி(Bi) | 208.98037 |
84 | மஞ்சளம்(Polonium) | மள்(Po) | 208.9824 |
85 | நொறுங்கிமம்(Astatine) | நொறு(At) | 209.9871 |
86 | கதிரம்(Radon) | கர(Rn) | 222.0176 |
87 | ‘விரெஞ்சிமம்’(Francium) | விரெ(Fr) | 223.0197 |
88 | கதிரிமம்(Radium) | கதி(Ra) | 226.0254 |
89 | கதிர்வினைமம்(Actinium) | கவி(Ac) | 227.0278 |
90 | சுடரிமம்(Thorium) | சுட(Th) | 232.0381 |
91 | புறக்கதிரம்(Protactinium) | புற(Pa) | 231.0388 |
92 | விண்ணிமம்(Uranium) | விண்(U) | 238.0289 |
93 | சேண்மிமம்(Neptunium) | சேண்(Np) | 237.0482 |
94 | சேணாமம்(Plutonium) | சேய்(Pu) | 244.0642 |
95 | ‘அமரிக்கம்’(Americium) | அமெ(Am) | 243.0614 |
96 | ‘கியூரிமம்’(Curium) | கியூ(Cm) | 247.0703 |
97 | ‘பெரிக்ளிமம்’(Berkelium) | பெரி(Bk) | 247.0703 |
98 | ‘கலிபோரிமம்’(Californium) | கலி(Cf) | 251.0796 |
99 | ‘ஐன்சுதீனம்’(Einsteinium) | ஐன்(Es) | 252.083 |
100 | ‘வெரிமம்’(Fermium) | வெர்(Fm) | 257.0951 |
101 | ‘மெந்தலீமம்’ (Mendelivium) | மெம் (Md) | 258.10 |
102 | ‘நோபிளம்’(Nobelium) | நோ(No) | 259.1009 |
103 | ‘இலாரன்சம்’(Lawrencium) | இலா(Lr) | 262.11 |
104 | ‘உருத்தரம்’(Rutherfordium) | உரு(Rf) | 261 |
தனிமங்களின் தன்மை, நிறம், கண்டறியப்பட்ட இடம், மிகுதியாய்க்
கிடைக்கும் இடம், அறிஞர் பெயர் முதலியவற்றின் அடிப்படையில் பெயர்
சூட்டப்பட்டவாறே தமிழிலும் தரப்பட்டுள்ளன. எனினும் ஒற்றை மேற்கோளுக்குள்
சாய்வெழுத்துகளில் அடங்கியவை பன்னாட்டு முறையிலேயே அளிக்கப்பட்டுள்ளன. இவை
நம்நாட்டில் கிடைக்கக்கூடிய இடங்களில் பெயர் சூட்டுவது பொருத்தமாக
இருக்கும் எனக் கருதி இவ்வாறு குறிக்கப்பட்டுள்ளன. பிற அறிவியல் தமிழ்
அகராதிகளில் உள்ளவற்றை விடமிகுதியாகத் தமிழில் குறிக்கப்பெற்றுள்ளன. நண்பர்
ஒருவர் புதுச்சேரியில் அறிஞர் ஒருவர் தனிமங்களைத் தமிழில்
குறிப்பிட்டுள்ளாரே. பார்க்கவிலலையா? புதியன ஏன்? என்றார். அக்கையேடு
கிடைக்கவில்லை. எனினும் பின்னர் தமிழ்ப்பல்கலைக்கழக அறிவியல் களஞ்சியத்தில்
உள்ள பட்டியலைப் பார்த்தேன். இப்பட்டியல்தான் தனி நூல் வடிவம்
பெற்றிருக்கும் எனக் கருதுகிறேன். இவ்வட்டவணைக்கும் பல்கலைக்கழக
அட்டவணைக்கும் ஒரு பகுதி ஒற்றுமை உள்ளது. ஆனால், தமிழில் குறிக்க
இயலாதபொழுது அறிவியல் பெயர்களை அயல்மொழி என உணரும் வண்ணமே குறிக்க
வேண்டும். அவ்வாறு இல்லாமல் தமிழ் எனத் தவறாக உணரும் வண்ணம் குறிக்கக்
கூடாது. பல்கலைக்கழக அட்டவணை அவ்வாறுதான் உள்ளது. சான்றாக அலுமினியம்
என்பது அளமியம் எனக் குறிக்கப்பெற்றுள்ளது. இதைப்படிப்பவர்கள் நல்ல
தமிழ்ப்பெயர் என நம்பும் மாயை உள்ளது, உண்மையில் அலுமினியத்திலுள்ள முதல்
நான்கு எழுத்துகள் (ALUM)அளம்; என ஒலிப்பிக்கப்பட்டு அளம் + இயம் =
அளமியம் எனக் குறிக்கப்பட்டுள்ளது. இதுபோல்தான் அப்பட்டியலில்
நாற்பதுக்கும் மேற்பட்ட தனிமங்கள் பெயர்கள் தமிழ் வடிவ ஒலி பெயர்ப்பில்
குறிக்கப் பட்டுள்ளன. எனவே அவை செம்மையை எதிர்நோக்கிய இடைக்கால
ஏற்பாடாகத்தான் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் எனலாம். மேலும் கடோலின்
என்னும் அறிஞர் பெயர் சுட்டப்பெற்ற ‘கடோலின்’ என்பதைக் god - கடவுள் எனக்
கொண்டு கடவுளியம் எனக் கூறியுள்ளதும் பொருந்தாது. எனவே பிற தமிழ் வடிவம்
கண்டு குழம்ப வேண்டா.
இங்கே 104 தனிமங்கள்குறிக்கப்பெற்றுள்ளன. இப்பொழுது 118 தனிமங்களைக்
கண்டறிந்துள்ளனர். எஞ்சியன குறித்துப்பிறிதோர் சமயம் காணலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக