திங்கள், 17 செப்டம்பர், 2012

தமிழ் இலக்கிய அமைப்புக்களின் மாநாடு-2012

தில்லி மாநாடு-செய்தி

தி.அரப்பாதமிழன்
நட்பு - பதிவு செய்த நாள் : 17/09/2012

15-09-2012 அன்று -காலை தில்லி தமிழ்ச்சங்கமும் தினமணி நாளிதழும் இணைந்து தில்லி தமிழ்ச்சங்க வளாகத்தில்”அகில இந்திய தமிழ் இலக்கிய அமைப்புக்களின் மாநாடு-2012”தொடங்கியது.மாநாட்டை இந்திய குடியரசின் முன்னாள் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் தொடங்கி வைத்தார்.தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் தொகுப்புரை வழங்க,கவிஞர் வைரமுத்து சிறப்பு விருந்தினராகவும்,நல்லி குப்புசாமி செட்டி வாழ்த்துரையும் வழங்கினர்.பெங்களுரு,மைசூர்,மும்பை,நவி மும்பை,ஐதராபாத், திருவனந்தபுரம்,ஆகிய மாநில தமிழ்ச்சங்கங்கள்,மலேசிய எழுத்தாளர்கள் சங்கம்,தலைநகர் தமிழ்ச்சங்கம்,உலகத்தமிழர் பேரமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் அறிமுக உரை ஆற்றினர்.மதிய உணவுக்குப்பின் கருத்தரங்கு நடைபெற்றது.தமிழறிஞர் தமிழண்ணல் தலைமையில் திருவாளர்கள்:இரா.செல்வகணபதி,இராம.குருநாதன்,தெ.ஞானசுந்தரம்,சொ.சோ.மீ.சுந்தரம்,திருப்பூர் கிருஷ்ணன்,சந்திரசேகரன் ஆகியோர் பல்வேறு தலைப்புக்களில் உரையாற்றினர்.
திருக்குறளை தேசிய நூலாக மத்திய அரசு அறிவிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிகழ்ச்சி தொடர்பாக…
பேசிய அனைத்து அமைப்புக்களும் மகாகவி பாரதிக்கு ஆண்டுதோறும் விழா எடுப்பதாக சொன்னார்கள்.ஆனால் அவர்கள் பேசத்தொடங்கும் போது “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு”என்ற பாரதிதாசனின் வரிகளைச் சொல்லிவிட்டு, பாரதிதாசனைப் பற்றி ஒரு வரிகூட சொல்லாமல் இருந்தது ஒருதலைப்பட்ட அமைப்புக்களின் கூட்டமாக இருக்குமோ எனும் சந்தேகம் உண்டானது.”பல தமிழறிஞர்களின் பேச்சில் பல சமஸ்கிருத வார்த்தைகள் கலந்து இருந்தன.சென்னை மற்றும் பிற பகுதிகளில் இருந்து வந்திருந்த தமிழறிஞர்கள் கவனிப்பாரற்று இருந்ததையும் அவர்கள் வருத்தப்பட்டதையும் காணமுடிந்தது.நடிகர் ராஜேஷ் உட்கார முடியாமல் நின்றதும்,குன்றக்குடி அடிகளார் மதிய உணவுக்கு அதிக நேரம் கவனிப்பாரற்று இருந்ததும் உதாரணங்கள்.தமிழகத்தின் தென் மாவட்டங்களிலிருந்து மிகச்சிலரே வந்திருந்தனர்.அழைப்பே இல்லாத மாநாடு இதுதான் என பலர் விமர்சித்ததைக் காணமுடிந்தது.அதிலும் தமிழகத்தின் தென் மாவட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு பேச வாய்ப்பளிக்கப்படவில்லை.வழக்கம்போல் “வடக்கு வாழ்வதும் தெற்கு தேய்வதும்”இந்த மாநாட்டிலும் எதிரொலித்தது.கவிஞர் வைரமுத்து வழமை போல்”கலைஞர்”துதிபாடினார்.வள்ளல் பாண்டித்துரைத்தேவர் தொடங்கிய மதுரைத்தமிழ்ச்சங்கம்,தமிழவேள் உமாமகேசுவரனார் தொடங்கிய கரந்தை தமிழ்ச்சங்கம் போன்ற உண்மையான, பழமையான சங்கத்தின் பிரதிநிதிகள் எவரும் கலந்துகொள்ளவில்லை.
புதிதாக கேட்ட செய்திகள்….
சிலப்பதிகாரம்…”கனிகை ஒருத்தி கற்புக்கரசி ஆனதும்
கற்புக்கரசி ஒருத்தி கடவுளானதும்”
கனவு காணச்சொன்ன அப்துல்காலாம்….
”கனவு என்பது உறக்கத்தில் வருவதல்ல…
உன்னை உறங்கவிடாமல் செய்வதே கனவு”

பகவத் கீதை…”கடவுள் சொல்ல மனிதன் கேட்டது”
திருவாசகம்…”மனிதன் சொல்ல கடவுள் கேட்டது”
திருக்குறள்…”மனிதன் சொல்ல மனிதன் கேட்டது”
தில்லியிலிருந்து…..-தி.அரப்பாதமிழன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக