வியாழன், 20 செப்டம்பர், 2012

அன்று ஆசிரியை... இன்று ஊராட்சி மன்றத் தலைவி!

அன்று ஆசிரியை... இன்று ஊராட்சி மன்றத் தலைவி!



திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவி சுமதி பாலமுருகன். அதுமட்டுமல்ல, அவர் இப்போது ஆராய்ச்சி மாணவியும் கூட. 10ஆம் வகுப்பு படிக்கும் மகனுக்கும், 6ஆம் வகுப்பு படிக்கும் மகளுக்கும் தாயான இவருக்குப் படிப்பில் அவ்வளவு ஆர்வம். தான் மட்டும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், தன்னைச் சுற்றியுள்ளவர்களும் படிக்க வேண்டும் என்பதற்காக அவர் செய்து வரும் உதவிகள் அதிகம். அவரைச் சந்தித்துப் பேசினோம்.""நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். ராணி மேரி கல்லூரியில் பொருளாதாரத்தில் எம்.ஏ.வரை படித்தேன். காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் எம்.பில். அதற்குப் பின்பு ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 7 ஆண்டுகள் பள்ளி ஆசிரியையாக  பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது ரயில் நிலையத்தில் மாலதி என்ற இளம்பெண் பூக்களைக் கட்டி வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.  அவரிடம் பேசியபோது, ஆங்கிலத்தில் அவருக்கு நல்ல அறிவு இருப்பதைத் தெரிந்து கொண்டேன். ஏன் படிக்கவில்லை என்று கேட்டேன். படிக்க வசதியில்லை என்று வருத்தத்துடன் சொன்னார். எனக்கு மனதுக்குக் கஷ்டமாகிவிட்டது.  அவர் கல்வியைத் தொடர என்னால் முடிந்த உதவிகளைச் செய்தேன். இன்று அவர்  சென்னையில் பல் மருத்துவர்.பின்னர் திண்டுக்கல் தனியார் கலை, அறிவியல் கல்லூரி ஒன்றில் உதவிப் பேராசிரியையாக வேலை செய்தேன்.  நகரங்களில் உள்ளவர்களுக்குப் படிப்பின் அருமை தெரிந்துவிடுகிறது.  கிடைக்கிற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். நல்ல வேலையும் கிடைத்துவிடுகிறது. கிராமங்களில் உள்ள மாணவர்களுக்குப் படிக்க வசதியில்லை. போக்குவரத்து வசதிகளும் குறைவு. ஒரு வீட்டில் நான்கைந்து குழந்தைகள் இருந்தால் அந்த வீட்டில் பிறக்கும் குழந்தை  8ஆம் வகுப்பைத் தாண்ட முடிவதில்லை. கிராமத்தில் உள்ள மாணவர்களின் படிப்புக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஆசிரியையாக இருந்து தொண்டு செய்வதைவிட ஏதாவது பொறுப்புக்கு வந்து தொண்டு செய்தால் நிறையப் பேர் பயனடைவார்கள் என்று நினைத்தேன். இதை என்னுடைய கணவர் பாலமுருகனிடம் சொன்னேன். அவர் உள்ளாட்சித் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடச் சொன்னார்.  போட்டியிட்டு வெற்றி பெற்றேன். இருந்தாலும் படிப்பில் எனக்கிருந்த ஆர்வம் குறையவில்லை. எம்.பில் படிப்புக்குப் பிறகு காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட மாணவியானேன். "இலவச திட்டங்கள் மூலம் பொருளாதார மேம்பாடு' என்பதுதான் ஆராய்ச்சிக்குரிய தலைப்பு.   அதன்பின்பு, எங்கள் கிராமத்தில் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்ட மாணவர்களிடம் பேசினேன். ஏன் தொடர்ந்து படிக்கக் கூடாது என்ற கேள்வியை அவர்களுடைய மனதில் எழுப்பினேன். இப்போது பலர் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்து வருகிறார்கள். எம்.ஏ. பட்டம் பெற்று அதிக மதிப்பெண்களை கிராமத்து மாணவர்கள் எடுத்தாலும், அவர்களால் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச முடிவதில்லை. இதனால் வேலைக்கான நேர்முகத் தேர்வுகளில் தோல்வியடைந்து, வேலையும் கிடைக்காமல் மனதில் விரக்தியுடன் வாடுகிறார்கள். இந்த நிலையை மாற்ற, தினமும் புதிய இருபது,இருபத்தைந்து ஆங்கில சொற்களை அன்றாட வாழ்க்கையில் பேசிப் பயன்படுத்தும் பயிற்சியை அளிக்கிறோம். அதுமட்டுமல்ல, நாள்தோறும் ஆங்கில நாளிதழ்களை வாசித்து மொழியறிவை வளர்க்கும் பழக்கத்தையும் அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.   நானே முனைவர் பட்டம் பெறப் படிக்கும் ஆராய்ச்சி மாணவியாக இருப்பது, கிராமத்து மாணவர்களுக்கு அதிக உற்சாகம் அளிக்கிறது. படிப்புக்கு மட்டுமல்ல, ஊரின் பல பிரச்னைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறேன்.குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் தவித்து வந்தார்கள். அதற்கு தீர்வு கண்டிருக்கிறோம். எங்களது கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி மாவு அரைத்துத் தரும் ஓர் இடத்தில் வேலை செய்து வந்தார். அவருக்கு  இலவச கிரைண்டர் கிடைக்க ஏற்பாடு செய்தோம். அதுமட்டுமல்ல, காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக மாணவர்கள் 10 பேருக்கு காலை சிற்றுண்டி தயார் செய்து தரும் ஆர்டரை வாங்கித் தந்தேன். இன்று அவர் மாதம் ரூ.10ஆயிரம் ஊதியம் சம்பாதிக்கிறார்'' என்கிறார் மகிழ்ச்சியாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக