வியாழன், 20 செப்டம்பர், 2012

"சருகுகளாய் மாறிப் போவர்!'





சொல்கிறார்கள் - தரவு - தினமலர்


"சருகுகளாய் மாறிப் போவர்!'

வேலூரைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியர் விசயலட்சுமி

ஒரு டாக்டர், பிரபல பத்திரிகை ஒன்றுக்கு,"மார்பகங்கள் அழகாய் தோற்றமளிக்க, அறுவை சிகிச்சை செய்ய வெட்கப்பட வேண்டியதில்லை... அவை தான் பெண்மையின் அடையாளம்' என, பேட்டி கொடுத்துள்ளார். பெண்களை வளர்ச்சிப் பாதையில் அழைத் துச் செல்லக் கடமைப்பட்டுள்ள படித்த மேதாவிகளே, இப்படி பெண்மையை இழிவுபடுத்தலாமா? இந்தியப் பெண்கள் அனைவரும், ஒன்றை நாடி ஒயில் நங்கையராய், "கேட்-வாக்' செய்யப் போகின்றனரா அல்லது தினம் இரண்டு குத்துப் பாட்டுக்கு, நடனம் ஆட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனரா? பெண்மை என்பது, மார்பகங்களை பொறுத்தல்ல! கண், மூக்கு, கை, கால்கள் போல, அதுவும் ஓர் உடல் உறுப்பு. எல்லா உறுப்புகளுக்கும், வெவ்வேறு பணிகள் இருப்பதைப் போல, மார்பகங்களின் பணி, தாய்மையின் போது பால் சுரத்தல், அவ்வளவே. பெண்மை என்பது புறத்தோற்றத்தில் இல்லை. "அக' அழகு தான் பெண்மையை மிளிரச் செய்வது. "க்ளிவேஜ்' அழகை, "யூ-டியூபிலும், பேஸ் புக்'கிலும் வழிய விடும் ராக்கி சாவந்த்களும், சன்னி லியோன்களும், பூனம் பாண்டேக்களும் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் சருகுகளாய் மாறிப்போவர். ஆனால், அழகை வெறுத்து ஒதுக்கி, ஆன்ம நலம் நாடிய காரைக்கால் அம்மையாரையோ, அழுக்கையும், நோயையும் கூட அழகென்று நேசித்த, அன்னை தெரசாவையோ, ஆண்மையும் பாராட்டிய பெண்மைக்கு சொந்தக்காரராகிய அன்னை இந்திராவையோ, இன்னும் கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் லேட்டஸ்ட் அக்னி புத்ரி டெஸ்சி தாமஸ் போன்றவர்களையோ, யாரும் மறந்து விட முடியுமா? இவர்களை மட்டுமின்றி, நாற்றங்கால்களில் கணுக்கால் தெரிய நாற்று நடும் கண்டாங்கி சேலைகளையும், ஜீவனுக்காக உழைத்து, ஜீரோ சைஸ் ஆகிய கிராமத்து திரிஷாக்களையும், யாரும் எளிதில் மறந்து விட முடியாது. இவர்கள், மக்கள் மனதில், உழைப்பின் வாசனை மாறாமல் ஊன்றி இருக்கும், "வெட்டி வேர்கள்!'


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக