புதன், 19 செப்டம்பர், 2012

கல்வி இருந்தால் அனைத்தையும் புரிந்து கொள்ளலாம்!

சொல்கிறார்கள்

கல்வி இருந்தால் அனைத்தையும் புரிந்து கொள்ளலாம்!


சென்னைப் பல்கலை, அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறைத் தலைவர், பேராசிரியர், ராம.மணிவண்ணன்: இந்தியா போன்ற பின்தங்கிய நாட்டில், கல்வியால் மட்டுமே ஒட்டு மொத்தச் சமூக மாற்றம் சாத்தியம். பொருளாதாரம் மற்றும் ஜாதி ரீதியாகப் பின் தங்கிய, ஒரு கிராமத்து விவசாயியின் மகன் கல்வி பெற்றால், முதலில், "நாம் ஏன் ஏழையாக இருக்கிறோம்' என, சிந்திப்பான். பிறகு, தான் ஏழையாக இருப்பதால், தலித்தாக இல்லை; தலித்தாக இருப்பதால் தான், ஏழையாக இருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்வான். கல்வி என்ற சிறு வெளிச்சம், ஒன்றில் இருந்து ஒன்றாக, அடுத்தடுத்த இருட்டுகளைத் துடைத்து எரியும். இதை, நான் மனதார நம்புகிறேன். ஆனால், எதிர்பாராத விதமாக, நம் ஊர் கல்வி நிலையங்கள், சமூக யதார்த்தத்தில் இருந்து விலகி நிற்கின்றன. ஒரு மாணவன் காணும் புத்தக உலகமும், நடைமுறை உலகமும், வேறு வேறாக இருந்தால், அவன் குழம்பிப் போக மாட்டானா? அதற்காக ஆரம்பப் பள்ளி மாணவர்களிடம், அரசியல் பேச முடியாது; பேசவும் கூடாது. திருவண்ணாமலையில், நான் நடத்தும், "அமைதிப் பூங்கா' பள்ளி மாணவர்கள், மரத்தின் பெயர், பயன்பாடு என, அனைத்தையும், அனுபவ பூர்வமாகச் சொல்வர். பள்ளிக்கு உள்ளேயே, இயற்கை முறையில் விவசாயம் செய்கிறோம். கம்பு, சோளம், கேழ்வரகு, காய்கறிகள், கீரை வகைகள் என, பல வகைப் பயிர்களின் விவசாயம் நடக்கிறது. இவற்றையும் மாணவர்கள் பார்க்கின்றனர். பயிர் வளர்வதையும், அறுவடை செய்வதையும் கவனிக்கின்றனர். இது, இயற்கையோடு இயைந்த கல்வி. பாடப் புத்தகத்தில் சொல்லித் தரப்படாத, மதிப்பெண்களுக்கு அப்பாற்பட்ட கல்வி. இந்தச் சூழலுக்குள் படிக்கும் மாணவர்கள், நாளை வேலைக்குச் செல்லும் போது, கிரானைட் குவாரிகளின் பெயரால், நம் பூமி நாசமாக்கப்படுவதை அனுமதிக்க மாட்டார்கள்; ரசாயன உரங்களைப் போட்டு, நிலத்தை நஞ்சாக்குவதை ஏற்க மாட்டார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக