வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

வான்காலவியல், கட்டடக்கலையின் சிறப்பு





சிவலிங்கத்தின் நெற்றியில் திலகம் சூரியக்கதிர் வழிபாட்டால் களிப்பு (பரவம்)

திருச்சி:
திருச்சி, கல்லணைச் சாலையில் உள்ள சர்க்கார் பாளையம் விசுவநாதர் கோவில் இலிங்கத்தின் மீது கதிரவன் தன் பொற்கதிர்களால் வழிபாடு நடத்தியது இறையன்பர்களைப் புல்லரிக்கச் செய்தது.

திருச்சி, கல்லணைச் சாலை, காவிரித் தென்கரை சர்க்கார் பாளையத்தில், கரிகாற்சோழனால் கட்டப்பட்ட, பழமை வாய்ந்த காசி விசாலாட்சி உடனுறை விசுவநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் திருவானைக்காவல் சம்புகேசுவரர்-அகிலாண்டேசுவரி கோவிலின் சார்புக் கோவிலாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதம் 7, 8, 9ஆம் நாட்களில், நாள்தோறும் விடியலின்போது மூலவர் காசி விசுவநாதர் சிவலிங்கத்தின் மீது கதிரவன் ஒளி நேரடியாகப் படுவது இக்கோவிலின் சிறப்பு. இந்நிகழ்வைக் கதிரவ வழிபாடு எனத் தொன்ம நூல்கள் தெரிவிக்கின்றன. இப்படிச் சிவலிங்கத்தைக் கதிரவன் வழிபடும்போது நாமும் வழிபடுவது சிறந்த பலன்களைக் கொடுக்கும் என்பது நம்பிக்கை. இந்தாண்டு கோவிலில் கதிரவ வழிபாடு நேற்று தொடங்கி நாளை வரை தொடர்ந்து நடக்கிறது. நேற்று விடிகாலை கதிரவன் எழுந்தபோது கதிர்கள் கோவிலின் முன் மண்டபம் வழியாகப் படிப்படியாக நகர்ந்து, கருவறையில் உள்ள மூலவர் சிலையின் நெற்றியில் பொட்டு வைத்தது போல ஒளிர்ந்தது. இறையன்பர்கள் ஏராளமானோர் இதைத் திருக்கண்டு (தரிசித்து) களிப்பு எய்தினர். தொடர்ந்து இரண்டு நாள் இவ்வழிபாடு நடக்கும். விழா ஏற்பாடுகளைக் கோவில் செயல் அலுவலர் மகேசுவரி, ஓதுவார் சாமிநாதசிவம், கொடையாளர்கள் சுந்தர மீனாட்சி, இராசாராம், ஊர் மக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக