மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழிகள், கொற்கையிலுள்ள
ஒரு குளக்கரையில், சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக, ஆக., 23,
"தினமலர்' நாளிதழில் செய்தி வெளிவந்திருக்கிறது. சங்க காலத்தில், சேர, சோழ,
பாண்டிய மன்னர்கள், தமிழகத்தை ஆண்டனர். அவர்களில், பாண்டியர்களே தொன்மைக்
குடியினர் என்று, பல வரலாற்றுச் சான்றுகள் மூலம் அறிகிறோம். அதில்
முதன்மையானது, சங்க காலப் பாண்டியர்கள் வெளியிட்ட, வெள்ளி முத்திரை
நாணயங்களைக் குறிப்பிடலாம்.
மவுரியர்கள் வெளியிட்ட வெள்ளி முத்திரை நாணயங்களைப் போல்,
பாண்டியர்களும் வெளியிட்டனர். அவர்கள் வெளியிட்ட வெள்ளி முத்திரை
நாணயங்களின் பின்புறம், கோட்டு வடிவ மீன் சின்னம் இருப்பதைக் காணலாம்.
சேரர்களோ, சோழர்களோ, இதுபோன்ற வெள்ளி முத்திரை நாணயங்கள் வெளியிட்டதாக,
இதுவரை சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. சங்க காலத்திற்கு முன்பே
பாண்டியர்கள், இப்போது தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும், கொற்கையைத்
தலைமை இடமாகக் கொண்டு, ஆட்சி செய்ததாகக் கருதப்படுகிறது. மன்னார் வளைகுடா,
முத்து விளையும் கடல் பகுதியாக, நெடுங்காலமாக இருந்து வந்துள்ளது.
துறைமுகப் பட்டினமாகவும் இருந்துள்ளது. மேலை நாட்டினரும், நம் நாட்டின் பல
பகுதி வணிகர்களும், கடல் வழியாக கொற்கை வந்து, பாண்டியர்களிடம் முத்துக்களை
வாங்கிச் சென்றிருக்கின்றனர். இதனால், பாண்டியர்கள் செல்வச் செழிப்புடன்
இருந்தனர். தாமிரவருணி ஆற்றில் பெரு வெள்ளம் வந்து, திசை மாறிச் சென்றதால்,
கொற்கை மணல் மேடிட்டு, தன் செல்வாக்கை இழந்தது. தாமிரவருணி திசை
மாறியதால், அந்த ஆறு முன்பு ஓடிய பகுதிகளில், பெரிய பெரிய ஏரிகள் உருவாகின.
கோரம்பள்ளம் ஏரியும், அதன் காரணமாகத் தான் தோன்றியிருக்க வேண்டும்.
தமிழகத் தொல்பொருள் துறையினர், 30 ஆண்டுகளுக்கு முன், கொற்கையில்
அகழாய்வு செய்த போது, பல வரலாற்றுச் சான்றுகளைக் கண்டுபிடித்தனர். நீர்
அதிகமாக வெளிப்பட்டதால், ஆழமாகச் சென்று ஆய்வு செய்ய முடியவில்லை. இப்போது
இருக்கும் குளப் பகுதிகள், தொன்மைக் காலத்தில் கிடைத்த முதுமக்கள் தாழியை
வைத்துப் பார்க்கும் போது, அப்பகுதி மக்கள் வாழ்ந்த பகுதிகளாக
இருந்திருக்கலாம். பல தொன்மை வரலாற்று இடங்கள், எதேச்சையாக, இயற்கை
மாற்றங்களினாலும், பெரும் மழையினாலும், வெளிப்பட்டுக்
கண்டுபிடிக்கப்பட்டவை. கொற்கைப் பகுதியை மீண்டும் தீவிரமாக ஆய்வு செய்தால்,
தமிழனின் தொன்மையும், பெருமையும் வெளிவரும். கொற்கை துறைமுகம் மூலம் தான்,
அக்காலத்தில் இலங்கைக்கு சென்றதாக, வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
இப்பகுதியை புல்டோசர் கொண்டு, சுயநலமிகள் தோண்டி எடுப்பதை, தமிழக அரசு
உடனடியாக தடை செய்ய வேண்டும். அரசு, அப்பகுதிக்கு பாதுகாப்பு போட வேண்டும்.
இந்த அரசின் ஆட்சிக் காலத்தில், புதிய சான்றுகள் வெளிப்பட்டால், தமிழனின்
தொன்மையை, முதல்வர் செயலலிதா ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்ததாக, வருங்கால
வரலாறு கூறும்.
- பெருவழுதி - தினமலர்
http://www.natpu.in/?p=28042
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக