வியாழன், 23 ஆகஸ்ட், 2012

செந்தூரான் உயிரிழந்தால் அதற்குத் தமிழக அரசுதான் பொறுப்பு. - வைகோ

கரூர் மாநாடு மதிமுகவுக்கு ப் புதிய எழுச்சியை உருவாக்கும் :வைகோ



 கரூர், ஆக. 22: இந்திய அரசியலில் மதிமுகவுக்கு புதிய எழுச்சியை உருவாக்கும் வகையில், கரூர் மாநாடு அமையும் என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.  கரூரில் செப்டம்பர் 15 ஆம் தேதி திராவிட இயக்க நூற்றாண்டு விழா மற்றும் மதிமுக மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி, சேலம் - கரூர் சாலையில் மாநாடு நடைபெறவுள்ள இடத்தை புதன்கிழமை பார்வையிட்ட பின்னர், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:  கரூரில் செப்டம்பர் 15-ல் நடைபெறவுள்ள மதிமுக மாநாட்டுக்கு கிளியநல்லூர் இரா. நடராஜன் பெயரும், மாநாட்டுப் பந்தலுக்கு கரூர் சாமியப்பன் பெயரும், நுழைவுவாயிலுக்கு தொழிற்சங்கவாதி மூர்த்தி பெயரும் சூட்டப்படும். இந்த மாநாட்டில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும், விவசாயிகளின் உரிமைகள், மீனவர்கள் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தியும், தமிழகத்தின் நீராதாரங்களை தடுக்கும் அண்டை மாநிலங்களை கண்டிக்காத மத்திய அரசைக் கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.  கரூர் மாநாடு இந்திய அரசியலில் மதிமுகவுக்கு புதிய எழுச்சியை ஏற்படுத்தும். திராவிட இயக்கத்தை எதிர்ப்பவர்களுக்கு பதில் சொல்லும் வகையில் இந்த மாநாடு அமையும். 
 பூந்தமல்லி அகதிகள் முகாமில் உண்ணாவிரதமிருந்து வரும் செந்தூரான் உயிரிழந்தால் அதற்குத் தமிழக அரசுதான் பொறுப்பு. இலங்கைத் தமிழர் பிரச்னையில் சரியான அணுகுமுறையை பின்பற்றி வரும் தமிழக அரசு, இந்தப் பிரச்னையிலும் அதேபோன்று அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்றார் வைகோ. பேட்டியின் போது, ஈரோடு மக்களவை உறுப்பினர் அ. கணேசமூர்த்தி, மாவட்டச் செயலர் பரணிமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக