இரு விழிகளில் பலருக்கு க் கிடைக்கும் வழி: இன்று கண்தான விழிப்புணர்வு நாள்
ஒவ்வொருவரும் கண்கொடை செய்தால் நம் நாட்டில் பார்வை
இல்லாதவர்களே இருக்க மாட்டார்கள்! இது குறித்துக், கண்கொடை செய்தவர்கள், பெற்றவர்கள், கண்கொடை அளிப்பது
குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்கள் ஆகியோரின்
கருத்துகள்:
மருத்துவர்.சீனிவாசன்:
வாழும் காலத்தில் நாம் எத்தனையோ கொடை, அறம், உதவிகள் செய்கிறோம்.
அவற்றையெல்லாம் விட, வாழ்ந்து முடித்த பிறகு பிறருக்குச் செய்யும் கண்கொடைதான்
மிகச்சிறந்த கொடை.
கண்கொடை செய்ய வயது வரம்பு இல்லை.
ஒருவர் இறந்த ஆறு மணி நேரத்திற்குள் கண்கொடை செய்ய வேண்டும்.
இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வை வேண்டிக் காத்திருக்கின்றனர்.
ஒருவர், தனது கண்களைக் கொடையாக அளிப்பதன் மூலம் இரண்டு பேர் பார்வை பெறுகின்றனர். இரண்டு குடும்பங்களுக்கு
நம்பிக்கையும், மகிழ்ச்சியும் கிடைக்கிறது. கண்கொடை செய்வதை வாழ்க்கையில் ஒவ்வொருவரும் கடமையாக ஏற்க வேண்டும்!
செகதீசன் (சமூக சேவகர்):
கடவுள் படைத்த உறுப்புகளில் கண்தான் மிக உயர்ந்த உறுப்பு.
மனிதன் உடலிலிருந்து உயிர் பிரிந்தாலும் கண்களிலிருந்து உயிர் பிரிவதில்லை. வாழும்போது குருதிக்கொடை, வாழ்ந்த பிறகு கண்கொடை என்பதை ஒவ்வொருவரும் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும்! கொடையாக
வழங்கப்பட்ட கண்கள் மூலம், இறந்தவர் மீண்டும் இந்த உலகத்தைக்
காண்கிறார். கண்கொடை பெற்றுத் தருவதை ஒரு சேவையாக நான் செய்து வருகிறேன். இறந்தவர்களிடமிருந்து கண்களைக் கொடையாகப்
பெற்று இது வரை 1056 பேருக்குப் பார்வை கிடைக்க உதவி இருக்கிறேன்.
கண்கொடை அளிக்கவும் பெறவும் விரும்புவோர் 9443263868 எனும் எண்ணில்
தொடர்பு கொள்ளலாம்.
நாகரத்தினம்:
கண்கொடை அளிப்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. என் கணவர் இறந்தபோது, கண்கொடை கேட்டுச் சமூக
சேவகர் ஒருவர் என்னை அணுகினார். நான் துக்கத்தை அடக்கிக்
கொண்டு, என் கணவரின் கண்களைக் கொடுக்க ஒப்புக்
கொண்டேன். அதன் பிறகுதான் கண்கொடை அளிப்பது குறித்த விழிப்புணர்வு எனக்கு ஏற்பட்டது. எங்கள்
குடும்பத்தில் மட்டும் இதுவரை ஐந்து பேர் கண்கொடை அளித்துள்ளனர்.
அதன் மூலம் 10 பேருக்குப் பார்வை கிடைத்துள்ளது.
வழக்குரைஞர்.சந்தானம்
(இயற்கை வழக்கறிஞர்கள் சங்கச் செயலாளர்):
மனித வாழ்க்கையில்
ஏற்படும் மிகப்பெரிய துக்கம், இறப்பு மட்டும்தான். அந்தத் துக்கத்தில் ஒரு நன்மை இருக்கிறது
என்றால் அஃது, இறந்தவர் தன் கண்களைக் கொடையாக
அளிப்பதுதான். இறந்தவர்களுக்குச் செய்யும் சடங்குகளைப் போலக் கண்கொடை அளிப்பதையும்
ஒரு சடங்காக எண்ணிக் கண்களைக் கொடையாக
அளிக்க வேண்டும். இயற்கை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், கண்கொடை, குருதிக்கொடை
அளிப்பது பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி
வருகிறோம்.
கணேசன் (வாழ்நாள் காப்பீட்டு முகவர்):
நான் ஈருருளியில் போகும்போது, நச்சு வண்டு தாக்கி என் இடது கண் பார்வை
போய் விட்டது. என் எதிர்காலமே இருண்டு விட்டது என்ற
எண்ணத்தோடு வாழ்ந்த எனக்கு, இறந்தவர் ஒருவர் தன் கண்களைக் கொடையாகக் கொடுத்ததால், இழந்த பார்வை
மீண்டும் கிடைத்தது. அந்த நல்ல உயிரைப் போல் அனைவரும் கண்கொடை
செய்தால், நம் நாட்டில் பார்வை இல்லாதவர்களே இருக்க மாட்டார்கள்.
சிவராம் (அரசு ஊழியர்):
இறந்தவரின் கண்கள் மூலம் இன்னொருவர் இந்த உலகத்தைப் பார்க்க முடியும் என்றால் அதைக் கொடுத்து செல்வதில் தவறில்லை. வாழும்போது நாம் மற்றவர்களுக்கு வழங்க முடியாத ஒன்றை இறந்த பிறகு வழங்க முடிகிறது என்றால், அவை கண்கள்
மட்டும்தான்.
சுபா:
கண்கொடை அளிப்பது பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவை. எங்கள் வீட்டில்
மூன்று பேர் கண்கொடை அளித்துள்ளனர். ஆறு பேருக்குப் பார்வை கிடைத்திருக்கிறது.
இன்றைக்கு ஆறு குடும்பங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறன. கண்கொடையை விடச் சிறந்த நல்வினை (புண்ணியம்) வேறு எதுவும் இல்லை.
உசா:
என் கணவர், இளம் வயதில் மாரடைப்பால் இறந்து விட்டார். அந்தத் துயரமான நேரத்தில், பிறருக்குப் பயன்பட
வேண்டும் என்ற நோக்கத்தோடு அவரது கண்களைக் கொடையாக அளிக்க ஒப்புக் கொண்டேன்.
இன்று என் கணவர் இல்லை எனும் வருத்தம் இருந்தாலும், அவரது கண்கள் யாரோ ஒருவருக்குப்
பார்வை கொடுத்துக் கொண்டு இருக்கின்றன என்பதால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக