செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

அன்றோ கூலித் தொழிலாளி! இன்றோ நிறுவன முதலாளி!




 அன்று  வேளாண்(விவசாய க்) கூலி; இன்று நிறுவன த் தலைவர்!விசா பிரச்னையால் அவதிப்படும் வெளிநாட்டவருக்கு உதவும் நிறுவனத்தை, அமெரிக்காவில் நடத்தி வரும் ஜோதி: ஆந்திராவின் வாராங்கல் மாவட்டத்தில், ஹனுமகொண்டா மண்டலத்தில் உள்ள, நரசிம்மலா கூடம் தான், என் சொந்த ஊர். அம்மா இல்லை; அப்பா விவசாயக் கூலி. 10ம் வகுப்பு முடிக்கும் வரை, பாலசதன் என்ற ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்தேன்.படிப்பைத் தொடர வேண்டும் என்பது என் கனவு; ஆனால், 16 வயதிலேயே எனக்குத் திருமணம் முடிந்தது. புகுந்த வீட்டிலும் வறுமை தான். என் இரு குழந்தைகளையும் காப்பாற்ற சிரமப்பட்டேன். விவசாயக் கூலியாக வேலைக்குச் சேர்ந்த சமயம், எங்கள் கிராமத்தில், வயது வந்தோருக்கு கல்வி போதிக்கும் மையம் ஒன்று உருவானது. அதில் மாதம், 150 ரூபாய் சம்பளத்துடன், பயிற்றுனர் வேலை கிடைத்தது.என் ஆர்வமும், அர்ப்பணிப்பும், ஹனுமகொண்டா மண்டலத்திற்கே என்னைப் பயிற்றுனராகத் தரம் உயர்த்தியது. இதன் மூலம், மீண்டும் படிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. முதுகலைப் பட்டம் பெற்று, பி.எட்., முடித்து, அரசுப் பணியில் ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தேன்.என் உறவினர்களில் ஒருவர், அமெரிக்காவில் இருந்தார். அமெரிக்க வருமானத்தால், அந்தக் குடும்பம் உயர்வதைக் கண்டு, எனக்கும் ஆசை வந்தது. எப்படியோ கஷ்டப்பட்டு, விசா வாங்கி, அமெரிக்கா சென்றேன். நண்பர் மூலம், அங்குள்ள வீடியோ கடையில், வேலை கிடைத்தது. அங்கு வந்த ஓர் இந்திய வாடிக்கையாளர் மூலம், அமெரிக்க கல்வி நிறுவனத்தில் பயிற்றுனர் வேலை கிடைத்தது. ஆனால், அங்கு பணியாற்ற, எச்-1 விசா வாங்கும் படி நிறுவனம் வற்புறுத்தியது. விசா பெறுவதற்காக நான் அலைந்த அலைச்சல் தான், என்னை ஒரு நிறுவனம் துவக்க தூண்டியது.அமெரிக்காவில் விசா பிரச்னைகளால் அவதிப்படும் வெளிநாட்டவருக்கு உதவி, அதன் மூலம், சிறு கமிஷனை பெறும், "கீ சொல்யூஷன்' என்ற நிறுவனத்தை உருவாக்கினேன்; என் பொருளாதாரம் உயர்ந்துள்ளது.ஆண்டிற்கு ஒரு முறை, இந்தியாவிற்கு வருவேன். ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் சென்று உதவுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக