மத்திய அரசின் மெத்தனமே காரணம்: செயலலிதா
தினமணி First Published : 21 Aug 2012 03:11:45 AM IST
சென்னை,
ஆக. 20: தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவத்தை மத்திய அரசு மெத்தனமாக
கையாளுவதால், இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து அச்சமின்றி மீனவர்களைத்
தாக்கியும், துன்புறுத்தியும் வருவதாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு
எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.இது
குறித்து பிரதமருக்கு அவர் திங்கள்கிழமை எழுதியுள்ள கடித விவரம்: கடந்த
18-ம் தேதி இலங்கை கடற்படையினரால் தமிழகத்தைச் சேர்ந்த அப்பாவி மீனவர்கள்
தாக்கப்பட்டும், துன்புறுத்தப்பட்டதுமான துயரமான சம்பவம் குறித்து தங்களின்
கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். நாகப்பட்டினம் மாவட்டம்,
வேதாரண்யத்தை அடுத்த வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த
18 மீனவர்கள் கடந்த 17, 18-ம் தேதிகளில் கண்ணாடி இழையால் செய்யப்பட்ட 5
பிளாஸ்டிக் படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் அனைவரும் கடந்த
18-ம் தேதி வெள்ளப்பள்ளம் அருகே 90 அடி ஆழம் கொண்ட கடல் பகுதியில் மீன்
பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு டி-146 எண் கொண்ட படகில் வந்த
இலங்கை கடற்படையினர் மேற்கூறிய 5 படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த
மீனவர்களைத் தாக்கியுள்ளனர். மேலும், மீனவர்கள் வைத்திருந்த ஐஸ் பெட்டி,
உணவு மற்றும் மீன்பிடி உபகரணங்களைப் பறிமுதல் செய்து கடலில் வீசியுள்ளனர்.
மீனவர்களின் வலைகளையும் வெட்டி எறிந்துள்ளனர்.தாக்கப்பட்ட
மீனவர்களில் ராமையா மகன் குப்புசாமி என்பவர் வலதுகை மணிக்கட்டில் கத்தியால்
வெட்டப்பட்டு காயமடைந்துள்ளார். மேலும் 7 மீனவர்கள் மீது கடற்படையினர்
ரப்பர் தடியால் தாக்கியதில் அவர்களும் காயமடைந்துள்ளனர். காயமடைந்த
மீனவர்கள் கடந்த 19-ம் தேதி கரைக்குத் திரும்பிய பின்பு அனைவருக்கும்
நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.மீன்பிடித்
தொழில் மூலம் குறைவான வருமானம் ஈட்டி வரும் ஏழை, அப்பாவி மீனவர்கள் மீது
இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இப்போதைய
தாக்குதல் அவர்களின் மற்றோர் அக்கிரமமான செயலாகும். இலங்கை கடற்படையினரால்
தமிழக மீனவர்கள் தடையின்றி தாக்கப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டுள்ள இந்தச்
சம்பவம் என்னை மேலும் துயரமடையச் செய்துள்ளது. நான் ஏற்கெனவே, 23.7.2012-ல்
தங்களுக்கு எழுதிய கடிதத்தில், இப் பிரச்னையில் மத்திய அரசு
தலையிடாவிட்டால் வரும் மாதங்களில் தாக்குதல் சம்பவம் தொடர வாய்ப்பு உள்ளது
என்று கூறியிருந்தேன். இப்போதைய இந்தத் தாக்குதல் சம்பவம் எங்களது
சந்தேகத்தை உறுதிப்படுத்தியுள்ளது.தமிழ்நாட்டு மீனவர்கள்
தாக்கப்படும் சம்பவத்தை மத்திய அரசு மெத்தனமாக கையாளுவதால் தைரியம்
கொண்டுள்ள இலங்கை கடற்படையினர் தொடர்ந்து மீனவர்களை அச்சமின்றி தாக்கியும்,
துன்புறுத்தியும் வருகின்றனர்.இரு நாடுகளின் தூதரக அளவிலான
கூட்டத்துக்குப் பின்பு வெளியிடப்பட்ட அறிவிப்பில், "மீனவர்கள் மீது
பலப்பிரயோகம் செய்வதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது' என
கூறப்பட்டது. அந்த அறிவிப்பு இப்போது காகிதத்தில் மட்டுமே உள்ளது. தூதரகப்
பேச்சுவார்த்தை நடைமுறைகளை அலட்சியப்படுத்தி வரும் இலங்கை கடற்படையினர்,
இந்த அறிவிப்பையும் மீறியுள்ளனர்.எனவே, தாங்கள் இப் பிரச்னையை
இலங்கை அரசின் கவனத்துக்கு தீவிரமாக கொண்டு செல்ல வேண்டும். பிழைப்புக்காக
தங்களது பாரம்பரிய கடல் பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது
இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது தடுக்கப்பட வேண்டும். இதற்கு
கடற்படையினர் அடக்கி வைக்கப்படுவதோடு, எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்
சம்பவம் நடைபெறாமல் இருப்பதையும் தாங்கள் உறுதி செய்ய வேண்டும். இது
தொடர்பாக தங்களது விரைவான நடவடிக்கையை எதிர்பார்க்கிறேன் என முதல்வர் தனது
கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக