சனி, 25 ஆகஸ்ட், 2012

தமிழறிஞர்களைப் போற்றும் தொண்டு தொடரும்: பச்சமுத்து

தமிழறிஞர்களைக் கெளரவிக்கும் தமிழ்த் தொண்டு தொடரும்: வேந்தர் டி.ஆர்.பச்சமுத்து



 
தாம்பரம், ஆக. 24: மதுரைத் தமிழ்ச் சங்கம், தமிழ்ப் பல்கலைக்கழகம் போன்று தமிழ் வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொள்வதுடன், தமிழ்மொழிக்குப் பெருமை சேர்க்கும் அறிஞர் பெருமக்களைப் பாராட்டிப் பெருமைப்படுத்தும் தமிழ்த் தொண்டும் தொடரும் என்று எசு.ஆர்.எம் பல்கலைக்கழக வேந்தர் தி.ஆர்.பச்சமுத்து கூறினார்.

சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூர் எசு.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் ‘தமிழ்ப் பேராயம் அமைப்பின் சார்பில் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளுக்கும், தமிழறிஞர்களுக்கும் விருதுகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  விழாவில், ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது தோப்பில் முகம்மது மீரானுக்கும், ‘சி.யு.போப்பு மொழிபெயர்ப்பு விருது க.குப்புசாமிக்கும், ‘பெ.நா.அப்புசாமி அறிவியல் தமிழ் விருது முனைவர்.கோ.அன்பழகனுக்கும், ‘ஆனந்த குமாரசாமி கவின்கலை விருது கிறித்துவக் கல்லூரிப் பேராசிரியர் சா.பாலுசாமிக்கும், ‘முத்துத்தாண்டவர் தமிழிசை விருது நா.மம்மதுவுக்கும், ‘வளர்தமிழ் விருது க.சுந்தரபாண்டியனுக்கும் வழங்கப்பட்டன. இந்த விருதுடன் தலா உரூ.1 இலட்சத்து 50 ஆயிரம் தொகைப்பரிசும் வழங்கப்பட்டது.  பேராசிரியர் செ.வை.சண்முகத்திற்குப் ‘பரிதிமாற்கலைஞர் விருதுடன் தொகைப்பரிசாக உரூ.2 இலட்சமும், முதுமுனைவர் இரா.இளங்குமரனாருக்குப் ‘பச்சமுத்து பைந்தமிழ் விருதுடன் உரூ.5 லட்சம் தொகைப்பரிசும் வழங்கப்பட்டன.  ‘அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது’, ‘பாரதியார் கவிதை விருதுத் தேர்வுக்குத் தகுதியான நூல்கள் இடம்பெறாத காரணத்தினால் நடப்பு ஆண்டில் வழங்கப்படவில்லை.  உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.இலட்சுமணன் பேசும்போது, “காலத்திற்கு ஏற்பக் கணினித் தமிழ்க் கல்வி வழங்கும் பணியையும், தேவாரம், திருவாசகம் ஓதும் தமிழ்ச் சமயக் கல்வியையும் வழங்க முன்வந்துள்ள தமிழ்ப் பேராயத்தின் பணி பாராட்டத்தக்கது என்றார்.  பச்சமுத்து பைந்தமிழ் விருது பெற்ற முதுமுனைவர் இரா.இளங்குமரனார் தனது ஏற்புரையில், “எசு.ஆர்.எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து தன் பிறந்தநாளைத் தமிழுக்குப் பெருமை சேர்க்கும் விழாவாக நடத்துவது பாராட்டத்தக்கது! எனது நூலகத்தில் 150 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட மிகப்பழமையான 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் உள்ளன. தமிழுக்குப் பெருமை சேர்க்கும் பழமை ஆவணங்களாகத் திகழும் அவற்றைத் தமிழ்ப்பேராயம் தமிழ் வளர்ச்சிப் பணிக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

‘சிலம்பொலி செல்லப்பன், குமரி அனந்தன், ‘கவிக்கோ அப்துல் இரகுமான், இந்திரா பார்த்தசாரதி, தெ.ஞானசுந்தரம், அ.மணவாளன், ‘சிற்பி பாலசுப்ரமணியன், எசு.ஆர்.எம் பல்கலைக்கழகத் தலைவர் இரவி பச்சமுத்து, துணைவேந்தர் எம்.பொன்னவைக்கோ, பதிவாளர் என்.சேதுராமன் முதலானோர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக