அப்புக்கல்லு தொல்லியல் அகழாய்வு
அப்புக்கல்லு தொல்லியல் அகழாய்வு
பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி
அப்புக்கல்லு வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டுப் பகுதிக்கு அருகில் இடம்
கொண்டுள்ளது. இத்தளம் அணைக்கட்டில் இருந்து 7 அயிர் மாத்திரி (kilo meter)
தொலைவில் கிடக்கின்றது. இது சிறு குன்றுகளாலும், நெல்வயல்களாலும் அதோடு ஒரு
கால்வாயாலும் சூழப்பட்டு உள்ளது. இது குன்றின் அடிவாரத்தே அமைந்த ஒரு
செழிப்பான சிற்றூர். புதியகற்காலக் குடியேற்றங்கள் மலையைச் சுற்றிலும்
இருந்தன. புதிய கற்கால மக்கள் வழக்கமாக குன்றின் அடிவாரத்திலோ அல்லது
குன்றுகளின் உச்சி மீதோ வாழ்ந்தனர். அவர்கள் தம் குடியிருப்பிடத்தை
ஊன்றுவதற்காக குன்றின் உச்சியில் ஒரு இடத்தைத் தெரிவு செய்வர்.
இக்குன்றுகள் சரிவாகவும் கால்களால் ஏறத்தக்கனவாகவும் இருக்கும்.
இங்கு 1977 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பண்டை வரலாறு மற்றும்
தொல்லியல் துறையினால், முனைவர் கே.வி. இராமன் தலைமையில் முனைவர் சா.
குருமூர்த்தி மற்றும் ஏ. சுவாமி ஆகியோர் இணைந்த ஒரு குழுவால் குன்றின்
உச்சியில் உள்ள பாறைத்துண்டங்களில் (debris) அகழிகளைத் தோண்டி தொல்லியல்
அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த அகழாய்வுகள் அரை மணிக்கல் மணிகள்
போன்ற தொல்பொருள்களையும், ஒரு சில புதியகற்கால கோடாரித் துண்டுகளையும்
ஈட்டித் தந்தன. இத்தளத்தின் மட்கலத்தொழில் புதியகற்கால நாகரிகத்திற்கே
தனிக்கூறாய் உரிய மட்கலங்களான மங்கிய சிவப்புநிற மட்கலங்களையும் சாம்பல்நிற
மட்கலங்களையும் அதிகளவில் கொண்டிருந்தது. இந்த அகழாய்வுகள் சிறு அளவான
மட்கலங்களையும், தொல்பொருள்களையுமே ஈட்டித் தந்தன; இது வேலூர் மாவட்டத்தில்
புதிய கற்காலக் குடியேற்றங்கள் நிலைப்பட்டிருந்ததை சுட்டுகின்றது.
அப்புக்கல்லு தமிழ்நாட்டின் இரண்டாவது புதியகற்காலத் தளம் ஆகும்,
பிறிதொரு தளம் நீண்ட காலத்திற்கு முன்னீடு இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்
துறையால் (ASI) அகழாய்வு நடத்தப்பட்ட பய்யம்பள்ளி ஆகும்.
மட்கலங்களின் வடிவங்கள், வகைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இத்தளம்
சற்றொப்ப கி.மு 2,000 காலத்தது என நாள்குறிக்கலாம். பொதுவாக,
தமிழ்நாட்டில் புதியகற்கால நாகரிகம் கி.மு. 4,000 க்கு முன்பில் இருந்தே
நாள்குறிக்கப்படுகின்றது. இருந்தபோதிலும், இந்த தளத்திற்கு கிட்டும் கரிமம்
14 (C 14) காலக் கணக்கீடு கி.மு.380 க்கு வருகின்றது என்பதால் இது
புதியகற்கால நாகரிக்த்தைத் தொடர்ந்து வரும் இரும்புக் காலத்தைச்
சார்ந்ததாகலாம்.
இச்செய்திகளைத் தொகுத்து வழங்கியவர் பேராசிரியர் முனைவர் சா.
குருமூர்த்தி, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக்
கழகம் (ஓய்வு). தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடான ‘அருங்கலைச் சொல்
அகரமுதலி’ உதவியுடன் இதைத் தமிழாக்கி தட்டச்சு செய்தவர் சேசாத்திரி
சேசாத்திரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக