புதன், 22 ஆகஸ்ட், 2012

கடற்கரைச் சடுகுடுவில் இந்தியாவிற்கு வெற்றி தேடித் தந்தேன்...

சொல்கிறார்கள்


 தினமலர்
"இந்தியாவிற்கு வெற்றி தேடித் தந்தேன்...!'
"பீச்' கபடி விளையாட்டில், சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த மார்ஷல் மேரி: விழுப்புரம் மாவட்டம், சவேரியார்பாளையம் கிராமம் தான், என் சொந்த ஊர். கடுமையான பொருளாதாரச் சிரமத்திலும், என் பெற்றோர், என்னை தொடர்ந்து படிக்க வைத்தனர்.
எங்கள் கிராமத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும், தனித்தனியாக நடக்கும் கபடி போட்டிகளை, ஆர்வமாக பார்ப்பேன். எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, எனக்கும் கபடி விளையாட ஆசை வந்தது. ஆட்ட நுணுக்கங்கள் தெரிந்திருந்தாலும், நான் உயரமாக இருப்பதால், கபடி விளையாட்டு மேலும் எளிதானது.
மாவட்ட அளவிலான போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அங்கு சிறப்பாக விளையாடியதால், தமிழக கபடி அணிக்குத் தேர்வாகி, தேசிய அளவிலான போட்டிகளில், தமிழக அணியின் வெற்றிக்கு காரணமானேன்.
ஆரம்பத்தில், கபடி மட்டும் விளையாடி வந்தேன். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்த போது, பயிற்சியாளர் அறிவுரைப்படி, "பீச்' கபடி விளையாடத் துவங்கினேன். "பீச்' கபடி கடினமானது. மணலுக்குள் கால்களை புதைத்துக் கொண்டு விளையாட வேண்டும்; இதனால், கடும் கால் வலியும், மூச்சிறைப்பும் ஏற்பட்டது. ஆனாலும், மன உறுதியுடன், தினமும் நான்கு மணி நேரம் பயிற்சி செய்கிறேன்.
கடந்த ஆண்டு, இலங்கையில் நடந்த ஆசிய அளவிலான, "பீச்' கபடிப் போட்டியில் விளையாடி, இந்திய அணி தங்கப்பதக்கம் வெல்ல காரணமாக இருந்தேன். அந்தப் போட்டியில், எனக்கு, சிறந்த விளையாட்டு வீராங்கனை என்ற விருது கிடைத்தது.
வெளியூர் போட்டிகளுக்குச் செல்ல, கடன் வாங்கித் தான், என் அப்பா அனுப்பி வைக்கிறார். "பீச்' கபடி விளையாட்டில், சர்வதேச அளவில் விளையாடி, இந்தியாவிற்கு வெற்றித் தேடித் தந்தாலும், இதுவரை, இந்திய அரசோ, தமிழக அரசோ எனக்கு எந்த பரிசுத் தொகையும், எவ்வித உதவிகளும் செய்யவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக