தொழிலின் நெளிவு, சுளிவு தெரிந்தால் போதும்! அவல், பொரிகடலை
தொழிலில் ஈடுபட்டுள்ள ஜீவரத்தினம்: லாரி டிரைவராக வேலை பார்த்துக்
கொண்டிருந்த என் கணவர், உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். இரு
பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்க வேண்டும் என்பதற்காக, மில் வேலைக்குச்
சென்றேன். ஒரு கட்டத்தில், வேலையை விட வேண்டிய சூழ்நிலை ஏற்பட, அதை விட்டு
விட்டேன். பின், "கிராமியம்' என்ற, தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில்,
எய்ட்ஸ் விழிப்புணர்விற்கான, "புரா ஜெக்ட்டில்' வேலை கிடைத்தது.
கிராமங்களில் எயிட்சால் பாதிக்கப்பட்டவர்களை, சிகிச்சைக்காக, அரசு
மருத்துவமனைக்கு அழைத்து வருவது தான் வேலை. மாதம், 300 ரூபாய் சம்பளம்;
அதோடு, அரசின் விதவைகள் உதவித் தொகை, 200 ரூபாய் என, 500 ரூபாய்
வருமானத்தில், குடும்பம் நடத்தினேன். ஒரு கட்டத்தில், கிராமியத்தின் ஐந்து
ஆண்டு எய்ட்ஸ் புராஜெக்ட் முடிந்து விட, வீட்டு வேலை செய்து, பிள்ளைகளைக்
காப்பாற்றினேன். கொஞ்ச நாளில், சுய உதவிக் குழுப் பெண்களுக்கு, தொழில்
பயிற்சிகள் கொடுப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதற்காக, அவல், பொரி
தயாரிப்பதற்கு, நான் பயிற்சி எடுத்தேன். ஒவ்வொரு குழுவிற்கும், அந்தத்
தொழிலை கற்றுக் கொடுக்கும் போது, அதில் உள்ள நெளிவு, சுளிவுகளை கற்றுக்
கொண்டேன். நெல்லை சுத்தம் செய்து, ஊற வைத்து, காய வைத்து, மில்லில்
அரைக்கக் கொடுத்தால், நெல்லும் அரிசியும் பிரிந்துவிடும். அரிசியை ரோஸ்டர்
இயந்திரத்தில் போட்டால், பொரிந்து, பொரியாக வரும். கவரில் பத்திரப்படுத்தி,
மூட்டையாகக் கட்டி விடுவோம்; வியாபாரிகள் வாங்கிச் செல்வர். அவல்
தயாரிப்பதற்கும், நெல்லை வாங்கி, ஊறப் போட வேண்டும். ரோஸ்டரில் அந்த
நெல்லைக் கொட்டினால், வெப்பத்தில், ரோஸ்டரின் மற்றொரு பாகத்தில், தவுடு
பிரிந்து, அவல் கொட்டும். பிரிந்து விழும் தவுடு, மாட்டிற்கு
தீவனமாகிவிடும். எல்லா செலவுகளும் போக, மாதம், 3,500 ரூபாய் லாபம்
கிடைக்கிறது. மற்றொரு பக்கம், இந்தத் தொழிலை, பல பெண்களுக்கும் கற்றுத்
தரும் பயிற்சியாளர் வேலையால், 4,000 ரூபாய் வருமானம் வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக