நாஞ்சில் நாடு காட்டிய வழியில் தமிழகம் ஒருங்கிணைந்து போராட வேண்டும்: வைகோ
“நாஞ்சில் நாடு காட்டிய வழியில் தமிழகம் ஒருங்கிணைந்து போராட வேண்டும்” என்று ம.தி.மு.க பொதுச்செயலர் வை.கோ பேசினார்.
கலை இலக்கிய மேம்பாட்டு உலகப் பேரவை விழா நாகர்கோவிலில் நடந்தது. ‘திருவிதாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு’ எனும் நூலை எழுதிய நூலாசிரியர் உயோகீசுவரன், ‘சோழர் காலச் செப்பேடுகள்’ எனும் நூலை எழுதிய இராசேந்திரன் ஐ.ஏ.எசு ஆகியோருக்குத் ‘தினமலர்’ நாளிதழ் நிறுவனர் இடி.வி.இராமசுப்பையர் விருது வழங்கப்பட்டது.
விழாவில் வைகோ பேசியதாவது: நாஞ்சில் மண்ணின் உரிமை காக்க நடந்த போராட்டக் களங்களில் தோள் கொடுத்துத் துணை நின்று மக்கள் மன்றத்துக்குச் செய்திகளை எடுத்துச் சென்று அரும்பணி ஆற்றிய ‘தினமலர்’ நாளிதழின் நிறுவனர், மேதகு.இடி.வி.இராமசுப்பையர் பெயரால் வழங்கப்படுகின்ற விருதைத் ‘திருவிதாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு’ என்னும் நூலைத் தந்த நூலாசிரியர் உயோகீசுவரனுக்கு வழங்கியுள்ளனர்.
மகடூஉ முன்னிலை
தாயம்மாள் அறவாணனின் ‘மகடூஉ முன்னிலை’ என்கின்ற நூலில், இலக்கியப் பாடல்களை வடித்த பெண்பாற்புலவர்களைப் பற்றி, அந்தப் பாடல்களுக்கு உரிய அரிய விளக்கங்களோடு தந்துள்ளார். சங்க இலக்கியங்களைப் படைத்த புலவர்கள் 473 பேர் எனில், அதில் 45 பேர் பெண்பாற்புலவர்கள். இது வியப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் இது பெண் உரிமை பேசுகின்ற காலம் அல்லவா? எனவே நூலைப் படைத்தவர் அந்த எண்ணிக்கை குறைவு என்று தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அந்தக் காலத்தில், அரசனையே எதிர்த்துத் “தேரா மன்னா! செப்புவது உடையேன்” என்று கூறிப் பாண்டியன் அரசவையில் எரிமலையின் சீற்றமாகத் தன்னுடைய உணர்ச்சியைக் கொட்டினாளே கொங்கற் செல்வி குடமலையாட்டி, கண்ணகிப் பெருந்தேவி? அவள், அள்ளூர் நன்முல்லையார், ஆதிமந்தியார், ஒக்கூர் மாசாத்தியார், ஔவையார், காக்கைப் பாடினியார், நச்செள்ளையார், காவற்பெண்டு, குறமகள் இளஎழினி, குறமகள் எயினி, பேய்மகள் இளஎயினி, பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப் பெண்டு, பொன்முடியார், பொன்மணியார், நெறி பாடிய காமக்கண்ணியார் இவர்கள் எல்லாம் பெண் பாற்புலவர்களே. ஔவையார் எத்தனையோ அரிய பாக்களைத் தந்தார்.
சோழர் காலச் செப்பேடுகள்:
‘சோழர் காலச் செப்பேடுகள்’ வரலாற்று நூலை நான் பார்த்தேன். கி.பி., 846ஆம் ஆண்டிலே விசயாலய சோழன், முத்தரைய அரசர்களை வென்று பிற்காலச்சோழப் பேரரசுக்கு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தான்.
அவனது வழியிலேதான் பராந்தகச் சோழன், அவன் மகன் இராசாதித்தியச் சோழன் -அவன் தக்கோலப் போரிலே வீழ்ந்துபட்டான். ஆயினும் போரில் புலிக்கொடி வென்றது- அடுத்து அரிஞ்சயச் சோழன், அழகுமிக்க சுந்தரச் சோழன், அவன்தம் மூத்த மகன் ஆதித்த கரிகாலன் படுகொலை செய்யப்பட்டது வரை சொல்லி, அவன்தம் இளவல்தான் அருள்மொழிவர்மன் என்ற முதலாம் இராசராசசோழன் அவர்தம் சித்தப்பா மதுராந்தகச் சோழன் வரையிலான வரலாற்றுச் செய்திகளையெல்லாம் தொகுத்து முனைவர் இராசேந்திரன் நூலாகத் தந்து இருக்கிறார். வஞ்சி மூதூரில், கரூரிலே சேர மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் -அதுவும் தமிழர்களின் ஆட்சிதான்- அங்கே உரோமர்களுடைய, உரோமப் பேரரசரின் காசுகள் கண்டெடுக்கப்பட்டன. அகசுடசுக் காலத்துக் காசுகள், இடைபீரியசுக் காலத்துக் காசுகள் ஆகிய அவற்றை வெளிக் கொண்டு வந்த பெருமை ‘தினமலர்’ நாளிதழின் இன்றைய ஆசிரியர் கிருட்டிணமூர்த்தி அவர்களைச் சாரும்.
திருவிதாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு
‘திருவிதாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு’ நூலை நான் முழுமையாகப் படித்தேன். அதன் விளைவாகத்தான் கூர் தீட்டப்பட்ட போர்க்கருவியாகக் களத்துக்கு வந்துள்ளேன். எப்படியெல்லாம் தலைவர்கள் இந்தக் குமரி மண்ணிலே போராடினார்கள் என்பதைப் பார்க்கின்றபோது, சாதி, சமயம், கட்சிகளைக் கடந்து போராடிய அந்த வீரவரலாற்றைப் பார்க்கின்றபோது, அவர்கள் இந்த நாஞ்சில் நாட்டுக்காக மட்டும் போராடவில்லை. தமிழகத்திற்காகப் போராடினார்கள். கேரள வல்லாதிக்கத்திலிருந்து இந்த மண்ணை -அவர்களுடைய பார்வை மிக, மிகப் பரந்து இருந்தது. தேவிகுளம், பீர்மேட்டையும்- மீட்பதற்காகப் போராடினார்கள் என்பதை அறிந்த போது வியந்து போனேன். இந்தக் குமரி மாவட்ட மக்கள், குமரி மாவட்டத்தை மட்டும் மீட்பதற்காக இன்றித் தமிழகத்துக்காகப் போராடினார்கள். அதுதான் எனக்கு வியப்பையும், மகிழ்ச்சியையும் தருகிறது. எனவே முல்லைப் பெரியாறா? அது தென்பாண்டி மண்டலத்துக்கு மட்டும்தான் சிக்கல் எனக் கருதி விடக் கூடாது. சிறுவாணியா? கீழ்ப்பவானிப் பாசனப்பகுதியா? அமராவதிச் சிக்கலா? அது கொங்கு மண்டலத்துக்குத்தானே எனக் கருதி விடக் கூடாது. ஒட்டு மொத்தத் தமிழகமும் ஒன்றாக இணைந்து போராட வேண்டும். இவ்வாறு வைகோ பேசினார்.
நன்றி:-
- தினமலர் செய்தியாளர்
http://www.natpu.in/?p=28038
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக