வியாழன், 21 ஜூன், 2012

solkiraarkal : பாம்பு பிடிக்கப் பிடிக்கும்!


சொல்கிறார்கள்

பாம்பு பிடிக்க பிடிக்கும்!


வசிப்பிடங்களில் நுழையும் பாம்புகளை பிடித்து, காட்டில் விடுவதை சேவையாக செய்து வரும் ஜாய் மஸ்காரன்ஸ்: கர்நாடக மாநிலம், மங்களூரு மாவட்டம், மழைக்காடுகள் சூழ்ந்த பகுதி என்பதால், பாம்புகளுக்குப் பஞ்சம் இல்லை. இங்கு உள்ள, பெல்லதங்கடி, மடிகரி, ஆகும்பே பகுதிகளில், ராஜ நாகங்கள் அதிகம் உள்ளன. இங்குள்ள வீடுகளுக்குள், பாம்பு புகுவது வாடிக்கை. இதே சூழலில், பிறந்து வளர்ந்ததால், பாம்புகள் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு விட்டது. நிபுணர்கள், பாம்புகளுடன் நட்பாக பழகும் நிகழ்ச்சிகளை, "டிஸ்கவரி' சேனலில் பார்க்கும் போது, "நாமளும் இப்படி பண்ணலாமே...' என தோன்றும். அந்த நிகழ்ச்சிகளைத் தொடர்ச்சியாக பார்த்தே, பாம்பு பிடிக்க கற்றுக் கொண்டேன். ஒரு உதவியாகத் துவங்கிய இந்த வேலை, சேவையாக இன்று வரை தொடர்கிறது. முதன்முதலாக, வெறும் கையால் பாம்பு பிடித்ததை, மறக்கவே முடியாது. இதுவரை, 1,000க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்திருக்கிறேன். அதில், 60க்கும் மேற்பட்டவை, ராஜ நாகங்கள். இவை அதிகபட்சம், 18 அடி நீளம் வரை இருக்கும்; பார்க்க கம்பீரமாகவும் இருக்கும். தரையில் கூடு கட்டி, முட்டைகளைப் பராமரிக்கும், ஒரே பாம்பு ரகம் இது தான். ஆணும், பெண்ணும் சேர்ந்து, முட்டைகளைப் பாதுகாக்கும்; பெண் பாம்பு தான் உணவுக்காக வெளியே செல்லும். ராஜ நாகத்தின் முக்கிய உணவு, மற்ற பாம்புகள் தான். 70 நாட்களில், முட்டையிலிருந்து குஞ்சு வெளிவரும். ராஜ நாகத்தின் ஆயுட்காலம், அதிகபட்சம், 30 வருடங்கள். பாம்புகளிலேயே ஆபத்தான ரகம், கட்டு விரியன். இந்தப் பாம்பு கடித்தவுடன், அதன் விஷம், ஒரு சில நொடிகளிலேயே, மூளையைச் செயலிழக்க வைத்து விடும். கட்டு விரியன் பாம்பு, இரண்டு முறை என்னைக் கடித்துள்ளது. உடனே மருத்துவமனையில், சிகிச்சை எடுத்துக் கொண்டேன். ஊர் மக்களும், வனத்துறை அதிகாரிகளும், என் பணியைப் பாராட்டினாலும், என் அம்மாவிற்கு இந்த வேலை பிடிக்கவில்லை. ஆனால், சேவை என்று வந்து விட்டால், சில தியாகங்களை செய்ய வேண்டுமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக