First Published : 17 Jun 2012 01:14:06 PM IST
தஞ்சாவூர்,
ஜூன்16: தமிழ்ப்பல்கலைக்கழக வளாகத்தில் ஆட்சியரகம் கட்டக்கூடாதென
தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள்
துணைவேந்தர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள்
வலியுறுத்தினர்.தஞ்சாவூரில் ஆயிரம் ஏக்கரில் தமிழ்ப்பல்கலைக்கழகம்
செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழக வளாகத்தில் காலியிடத்தில் மாவட்ட
ஆட்சியரகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டுவதற்கு 61.42
ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு விரைவில் கட்டுமானப் பணி தொடங்குமென
அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு கட்சியினரும் தமிழ்
அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.இந்த வேண்டுகோளை
வலியுறுத்தும் விளக்கப் பொதுக்கூட்டம் தமிழ்ப்பல்கலைக்கழகப் பாதுகாப்பு
இயக்கம் சார்பில் தஞ்சாவூர் ஆபிரஹாம் பண்டிதர் சாலையில் வெள்ளிக்கிழமை
நடத்தப்பட்டது. கூட்டத்துக்கு இயக்க நிர்வாகி அய்யனாபுரம் சி. முருகேசன்
தலைமை வகித்தார்.கூட்டத்தில், தமிழ்ப்பல்கலைக்கழக முன்னாள்
துணைவேந்தர் ம. ராசேந்திரன் பேசியதாவது: தமிழ்ப்பல்கலைக்கழகத்தை மக்கள்
காக்க வேண்டும். பல்கலைக்கழகத்தை செம்மைப்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட
வேண்டும். ஆட்சியரகத்திற்கு இடம் கையகப்படுத்தினால் தமிழுக்காக நிலம்
கொடுத்தவர்களின் எண்ணம் ஈடேறாது என்றார்.சென்னை பல்கலைக்கழக
முன்னாள் துணைவேந்தர் பொற்கோ: பல்கலைக்கழக வளாகத்தில் ஆட்சியரகம் அமைப்பது
தமிழின் பெருமையை சிதைக்கும் செயல் என்றார்.தமிழ்தேசப் பொதுவுடமைக்
கட்சி நிறுவனர் பெ. மணியரசன்: பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு
புலங்கள், ஆய்வரங்கங்கள் முழுமையாக செயல்படவில்லை. அவைகள் முழுமையாக
செயல்படும் போது அதற்கு தற்போதைய இடமே போதுமானது இல்லை.
பல்கலைக்கழகத்திற்கான அச்சுத்துறை வெளியில்தான் உள்ளது என்றார்.இதே
கருத்துக்களை வலியுறுத்தி தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்க முன்னாள்
தலைவர் கு. முருகேசன், பாவாணர் தமிழியக்கத் தலைவர் கு. திருமாறன்,
மே17இயக்க நிர்வாகி திருமுருகன்காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட
செயலர் ரா. திருஞானம், நாம்தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர்
வழக்குரைஞர் அ. நல்லதுரை, விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர்
குடந்தைஅரசன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட அமைப்புக்குழு ஜே. கலந்தர்,
பல்கலைக்கழக பாதுகாப்பு இயக்கம் பா. இறையெழிலன் ஆகியோர் பேசினர்.
பல்கலைக்கழக பாதுகாப்பு இயக்க நிர்வாகி பழ.ராசேந்திரன் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக