வெள்ளி, யூன் 22, 2012
சாயிபாபாவும் நானும் ஒன்றாகவே வித்தை (மேஜிக்) படித்தவர்கள்- பி.சி.சர்க்கார்
நன்றி. தமிழ் 10
உண்மையான அற்புதம் காலத்தைக் கடந்து மனதைத் தாண்டி நிலவுதல் மட்டுமேதான். அத்தகைய நிலை பெற்றவர்கள், பொதுவழக்கில் ‘அற்புதங்கள்’ என்று கருதப்படுகின்றவற்றை மதிப்பதில்லை.
அவர்களைப் பொறுத்தவரை, மிகச் சாதாரணமான சின்னச் சின்ன விஷயங்களிலேயே அற்புதம் பொதிந்துள்ளது. சாதாரண வாழ்வினைப் புத்துணர்வுடன் சந்திக்க கூடிய நுட்ப உணர்வோ உக்கிரமோ அற்றவர்கள்தான், அற்புதங்களைக் கௌரவிப்பார்கள்.
பி.சி.சர்க்கார்
சத்தியசாயி பாபா என்பவர் அற்புதங்களின் மூலம் மட்டுமே பிரசித்திபெற்றவர். இவரைப் பத்திரிகை ஆசிரியர்கள், விஞ்ஞானப் பேராசிரியர்கள், இலங்கையின் ஆபிரகாம் கோவூர் போன்ற பகுத்தறிவுவாதிகள் விமர்சித்திருக்கிறார்கள்.
இவர்களின் விமர்சனத்தின்படி சத்திய சாயிபாபா வெறும் கண்கட்டு வித்தைக்காரர். அற்புதங்கள் என்று எதுவுமே கிடையாது என்ற அளவுக்குப் போனவர்கள் கோவூரும் அவரைப் போலச் சிந்திப்போரும்.
(குளத்துத் தண்ணீரில் சைக்கிள் ஓட்டி மேஜிக்)
இஸ்ரேலின் யூரிகெல்லர், தம்மைத் தெய்வீகச் சக்தி பெற்ற அற்புதமனிதராக விளம்பரம் செய்தவர். நூலில் கட்டித் தொங்கவிடப்பட்ட ஒரு சாவியை, உற்றுப் பார்ப்பதன் மூலம் மட்டுமே வளைப்பது அவரது அற்புதம். இது வெறும் கண்கட்டு வித்தை என்று நிரூபித்தவர் உலகத்தின் மிகப் பெரிய மாஜிக் நிபுணரான பிரதீப் சந்திர சர்க்கார். இவர் ஒரு வங்காளி.
டெலிவிஷன் காமிராக்களுக்கும் விஞ்ஞானப் பிரமுகர்களுக்கும் முன்னிலையில் யூரிகெல்லர் சாவியை ‘உற்றுப் பார்த்து’ ஒரு புறம் வளைத்தபோது அதே சாவியை அதேபோல் ‘உற்றுப் பார்த்து’ எதிர்ப்புறமாக வளைத்தார் பி.சி.சர்க்கார்.
அவரது தீர்ப்பு; ‘தெய்வீக சக்தி மூலமாக இதைத்தாம் செய்ததாக கூறுகிறார் யூரிகெல்லர். நான் இதையே வெறும் மாஜிக் மூலம் செய்துள்ளேன். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு விஷயமறிந்த வட்டாரங்கள், யூரிகெல்லரைப் பற்றிப் பேசுவதே இல்லை.
பி.சி.சர்க்காரின் மூலம்தான், சத்திய சாயிபாபாவின் அற்புதங்களுக்கு கூட அதிர்ச்சித் தாக்குதல் கிடைத்தது. இந்நிகழ்ச்சியை சர்க்கார் விவரித்துள்ளார். ‘சாயிபாபாவும் நானும் ஒன்றாகவே மாஜிக் படித்தவர்கள். நான் அவரிடம் இன்டர்வியூ கேட்டபோது மறுத்துவிட்டார். ஆகவே நான் வேறுபெயரில் மீண்டும் கேட்டு அவரைச் சந்திக்க ரூமுக்குள் காத்திருந்தேன்.
அங்கே மேஜையில் நிறைய ஸ்வீட் வகைகள் இருந்தன. உள்ளே வந்த சாயிபாபா, வெற்று வெளியிலிருந்து எடுப்பது போல ஒரு ஸ்வீட் வரவழைத்து, என்னிடம் கொடுத்தார். ‘நான் எனக்கு அந்த ஸ்வீட் பிடிக்காது. இதுதான் பிடிக்கும்’ என்று வேறு ஒரு வகை ஸ்வீட்டை வரவழைத்துக் காட்டினேன். அவரும் நானும் செய்தது ஒரே மாஜிக்கைத்தான். இருவருமே அதற்காக அதே ரூமிலிருந்த ஸ்வீட்டுகளைத்தான் உபயோகித்தோம்.
உடனே என்னை அடையாளம் கண்டுகொண்டு உணர்ந்த சாயிபாபா ‘ஓ’ என்று கத்தினார். மறுவிநாடி, ரூமுக்குள் குண்டர்கள் புகுந்து என்னை வளைத்து, ‘இங்கிருந்து உயிரோடு வெளியே தப்பிப் போக முடியாது’ என்றனர். ‘என்னால் முடியும்’ என்று பதில் கூறிய நான் அதைச் செய்து காட்டினேன்.
யூரிகெல்லரும் சாயிபாபாவும் மாஜிக்காரர்கள் என்று கூறுகிற பி.சி.சர்க்கார் கருணையின் சிகரத்தில் நிலவியபடி உண்மையான அற்புதங்களை செய்வோரை தாம் சந்தித்திருப்பதாகவும் கூறுகிறார். அத்தகையவர்களைத் தேடிப் போவது அவரது ஆர்வங்களுள் ஒன்று.
- இந்த கட்டுரை எழுதியவர் மறைந்த கவிஞர் 'பிரமிள்'. 1987ல் எழுதியது.
நூலின் பெயர்; பாதையில்லாப் பயணம்-பிரமிள். வம்சி பதிப்பகம்
1likes
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக