வெள்ளி, 22 ஜூன், 2012

மூவரின் மரணத்தண்டனையை விலக்க உறுதியளித்தால் பிரணாப்புக்கு திமுக ஆதரவளிக்கலாம்: சீமான்

பொய்யான வாக்குறுதி கொடுப்பதில் அரசியல்வாதிகளுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. காங்.கிற்குக் கேட்கவே வேண்டா. எனவே, இவ்வாறு சொல்லாமல்,  காங்.அரசு இப்பொழுது மூவர் தண்டனையையும் நீக்கினால் அதன் வேட்பாளரான பிரணாப்பை ஆதரிப்பதாகக்  கூறலாம் எனத் தெரிவிக்கலாம். இப்படியெல்லாம் வெளிப்படையான பேரம் பேசுவது தலைமைக்குப் பழக்கமில்லை. எனவே,  மறைமுகப்  பேரத்தின்அடிப்படையில் பிரணாப்பைத்தான் ஆதரிக்கும்.  எனவே, போக விரும்பாத ஊருக்கு வழிகாட்டிப் பயனில்லை. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

மூவரின் மரண தண்டனையை ரத்து செய்ய உறுதியளித்தால் பிரணாப்புக்கு திமுக ஆதரவளிக்கலாம்: சீமான்

First Published : 22 Jun 2012 12:13:39 PM IST

Last Updated : 22 Jun 2012 12:17:51 PM IST

ராமநாதபுரம், ஜூன் 22: ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனைக் கைதிகளாக சிறையில் உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வதாக உறுதி அளிக்கும் பட்சத்தில் திமுகவும், திருமாவளவனும் பிரணாப் குடியரசுத் தலைவராக ஆதரவு அளிக்கலாம் என்றார் திரைப்பட இயக்குனரும் நாம் தமிழர் இயக்கத் தலைவருமான சீமான்.இன்று ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, திரைப்பட இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் கூறியது...குடியரசுத் தலைவர் தேர்தலில் திமுகவும், திருமாவளவனும் பழங்குடி இனத்தவரான சங்மாவுக்கு ஆதரவு தரவேண்டும். பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு அளிப்பது தமிழர்களுக்கு இழைக்கும் துரோகம். அப்படி இல்லாவிடில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்வேன் என்ற உறுதிமொழியின் பேரில் வேண்டுமானால் ஆதரவு அளிக்கட்டும். இதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும். இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படை பிடித்தால் அவர்களுக்கு 20 வருடங்கள் வரை சிறை அளிக்கும் வகையில் ராஜபட்ச பேசியிருக்கிறார். அப்படி இந்திய எல்லைக்கு வந்து கைதாகும் இலங்கை மீனவர்களையும் 20 வருடங்கள் சிறையில் அடைக்கும்படி நாங்கள் கூறினால் அது இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக வழக்கு போடுவார்கள் என்றனர் இருவரும்.முன்னதாக, ராமேஸ்வரம் பொதுக்கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக சீமான், அமீர் ஆகியோர் மீது வழக்கு போடப்பட்டிருந்தது. அது தொடர்பாக இன்று ராமநாதபுரம் நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராகினர். இந்த வழக்கில் மீண்டும் ஜூலை 20ம் தேதி இருவரும் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
கருத்துகள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக