சொல்கிறார்கள்
"பக்குவமாய்ப் பதில் சொல்லுங்கள்!'
குழந்தைகள் மன நல நிபுணர் கண்ணன்: பொதுவாக, 14 வயது வரையுள்ள குழந்தைகள் தான், அதிகமாக கேள்விகள் கேட்பர். எல்லா குழந்தைகளும், தன் பெற்றோர் மூலமாகவே, அதிக விஷயங்களைக் கற்றுக் கொள்கின்றனர். எனவே, குழந்தைகளிடமும், அவர்கள் முன், மற்றவர்களிடமும் எந்தெந்த விஷயங்கள் பேசலாம், அவர்கள் முன்னிலையில், "டிவி'யில் என்னென்ன விஷயங்கள் பார்க்கலாம் என்பதில், வீட்டினர் கவனமாக இருக்க வேண்டும்.பெற்றோர் தவிரவும், உறவினர்கள், நண்பர்கள், சினிமா என, குழந்தைகள் தங்களைச் சுற்றி உள்ள உலகத்தில், நல்லது, கெட்டது என, அனைத்தையும் கடக்க வேண்டியுள்ளது. உதாரணமாக, "நாப்கின்னா என்னம்மா?' என்று கேட்டால், அதிர்ந்து விடாதீர்கள். ஏதோ ஒரு சூழலில், குழந்தைக்கு, அந்த வார்த்தை அறிமுகமாகியிருக்கிறது. அந்தப் புதிய வார்த்தைக்கு அர்த்தம் தெரியாததால், கேட்கிறது என்பதை, பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும்.சிறு குழந்தைகளுக்குத் தேவை, தான் அறிந்த அந்த புதிய சொல்லைப் பற்றிய விளக்கம் தான். அதற்கு மேல், அதைப் பற்றி அவர்கள் ஆராய மாட்டார்கள். இதுவே, "அடி பின்னிடுவேன், ஒழுங்கா படி...' என, எதிர்மறையாக நடந்து கொண்டால், அந்த வார்த்தைப் பற்றிய குறு குறுப்பு அதிகரிக்கும்.குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு, அவர்களின் வயதைப் பொறுத்து, விவரம் சொல்ல வேண்டியது அவசியம். பொதுவாக, 15 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள், பாடப் புத்தகங்கள், இணையம், நண்பர்கள் என, விரிந்திருக்கும் அவர்களின் வட்டத்திலேயே, தங்களுக்கு தெரியாத விஷயங்கள் பற்றி, விளக்கங்கள் பெற முயல்வர்.பெற்றோரிடம், பர்சனலான கேள்விகள், அதிகம் கேட்பதில்லை. ஒருவேளை கேட்டால், அதற்கான உண்மையான விளக்கத்தை, நாகரிகமான வார்த்தைகளில் சொல்ல வேண்டும். நீங்கள் சொல்லும் பதில், அவர்களை தெளிவுபடுத்துவதுடன், உங்கள் மேல், மரியாதை வரும்படியும் இருக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக