ஞாயிறு, 14 அக்டோபர், 2012

தொடரிப் பெட்டிகளில் எலி, கரப்பான், மூட்டை ப்பூச்சி ஒழிப்பு : Fumigative chamber for eradicatiing rats in train coaches


தொடரிப் பெட்டிகளில் எலி, கரப்பான், மூட்டை ப்பூச்சி ஒழிப்பு : நவீன எந்திரம் அறிமுகம்

இரயில் பெட்டிகளில் எலி, கரப்பான் மற்றும் மூட்டை பூச்சிகளை ஒழிக்க, நவீன எந்திரம், சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. "இதன் மூலம், ரயில் பெட்டிகள் சோதனை செய்யப்பட்டால், மூன்று மாத காலத்திற்கு மீண்டும் மூட்டை பூச்சி, கரப்பான் பூச்சி, எலி இப்பெட்டிகளுக்கு வராது' என்று, அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரயில் பெட்டிகள், முறையாக பராமரிக்கப் படாததால், ரயில்களில் எலி, மூட்டைபூச்சி, கரப்பான் பூச்சி தொல்லை இருப்பதாகவும், ஏ.சி., பெட்டிகளில் இவைகள் அதிகம் உள்ளதாகவும், பயணிகள் மூலம் ரயில்வே நிர்வாகத்திற்கு தொடர்ந்து ,புகார் விடுக்கப்பட்டு வந்தது. ரயில்வே யார்டுகளில், பெட்டிகள் சுத்தம் செய்யப்படும்போது, மூட்டை பூச்சி, கரப்பான் பூச்சிகளை கொல்வதற்கு விஷ மருந்து அடித்தும், எலிகளுக்கு விஷ மாத்திரைகளும் வைக்கப்பட்டு கொல்லப்பட்டன. தற்போது. பெட்டிகளில் சிறிய இடம்கூட, இடைவெளி விடாமல்,முழுவதிலும் விஷ வாயு செலுத்தப்பட்டு, எலி, கரப்பான் பூச்சி, மூட்டை பூச்சிகளை ஒரே நேரத்தில் ஒழிப்பதற்கு நவீன அமைப்பு, எந்திர வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக, தெற்கு ரயில்வேயின், சென்னை பேசின் பாலம் அருகில் உள்ள ரயில் இன்ஜின் மற்றும் ரயில் பெட்டிகள், பராமரிப்பு மையத்தில் இப்புதிய வசதி துவங்கப்பட்டுள்ளது. இப்பிரிவில், 80 மீட்டர் நீளம்,12 அடி அகலம் மற்றும் 15 அடி உயரத்திற்கு கண்ணாடி தடுப்பு சுவருடன் கூடிய செவ்வக வடிவ கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.
இப்பிரிவிற்குள், ஒரே நேரத்தில் மூன்று ரயில் பெட்டிகள் கொண்டு செல்லப்படுகிறது. உட்புற இருக்கைகள், கழிவறைகள் உட்பட அனைத்து இருக்கைகளின் அடிப்பகுதிகளும்,ஏ.சி., அமைப்புகளிலும் இடைவெளிகளிலும், வாயுவை அனுப்பும் சிறிய பிளாஸ்டிக் குழாய்கள் பொருத்தப்படுகின்றன.
அதன் பிறகு கதவுகள் அனைத்தும் மூடப்பட்டு, இப்பெட்டிகளின் வெளிப்புறத்தில், பிரமாண்ட தார்ப்பாய் கொண்டு மூடப்படுகிறது. தார்ப்பாய், பெட்டிகளிலிருந்து விலகாமலிருக்கவும்,வெளியில் இருந்து காற்று ஏதும் உள்ளே சென்று விடாமலிருக்கவும், ஏதுவாக தரை பகுதியில் தார்ப்பாயின் மீதுமணல் மூட்டைகள் வரிசையாக அடுக்கப்படுகின்றன. இதன் பிறகு, ரயில்வே பராமரிப்பு ஊழியர்கள் மூலம், பெட்டிகளின் உட்பகுதியில்,"மெத்தேல் புரோமைடு' என்ற திரவ வடிவிலான வாயு செலுத்தப்படுகிறது. இந்த விஷ வாயு, பெட்டிகளின் அனைத்து பகுதிகளிலும் பரவுகிறது. பெட்டிகளின் உள்ளே உள்ள மூட்டை பூச்சி, கரப்பான் பூச்சி மற்றும் எலிகள் செத்து விடுகின்றன. பெட்டிகளில் விஷவாயு செலுத்தப்பட்டு, 24 மணி நேரம் கழித்து, கண்ணாடி கூண்டிலிருந்து மூன்று பெட்டிகளும் வெளியே காற்றோட்டமான பகுதிக்கு கொண்டு வரப்படுகின்றன. அதன் பிறகு பெட்டிகள் மற்றும் கழிவறை கதவுகள் திறக்கப்படுகின்றன. பராமரிப்பு பிரிவு ஊழியர்கள். கவச உடைமற்றும் கையுறைகள் அணிந்து கொண்டு, பெட்டிகளில் ஏறி, இருக்கைகள் மற்றும் கழிவறைகளில் செத்து கிடக்கும், மூட்டை பூச்சி,எலி, கரப்பான் பூச்சிகளை அப்புறப்படுத்துகின்றனர். மேலும், 24 மணி நேரம் வரை பெட்டிகள் அங்கேயே நிறுத்தி வைக்கப்படுகிறது. பெட்டிகள் முழுவதும், மீண்டும் ஒரு முறை சுத்தமாக சுத்தம் செய்யப்படுகிறது. அதன் பிறகு பயணிகள் பயன்பாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. "இப்புதிய வசதியின் மூலம், தினசரி மூன்று, ஏ.சி., பெட்டிகள் சுத்தம் செய்யப்படுகிறது. இவ்வசதி தெற்கு ரயில்வேயில் மட்டுமல்லாது. இந்தியாவில் உள்ள அனைத்து ரயில்வேக்களிலும் அறிமுகம் செய்யவும் ஆலோசிக்கப்பட்டு வருவகிறது' என, பராமரிப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக