ஞாயிறு, 14 அக்டோபர், 2012

தெருக்களில் 20 ஆயிரம் சூரியசக்தி விளக்குகள்: தமிழக அரசு புது த் திட்டம் - solar street lights

தெருக்களில் 20 ஆயிரம் சூரியசக்தி விளக்குகள்: தமிழக அரசு புது த் திட்டம்

 கிராமப்புறங்களில் உள்ள தெரு விளக்குகளை, சூரிய சக்தியில் இயங்கும் தெரு விளக்குகளாக மாற்ற, உலகளாவிய ஒப்பந்தப் புள்ளியை, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை கோரியுள்ளது. இதையடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும், கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, சூரிய சக்தி தெரு விளக்குகள்பொருத்தப்படுகின்றன.

தமிழகத்தில் நிலவும், கடும் மின் பற்றாக் குறையால், மின் வினியோகம் கடுமையாக பாதித்துள்ளது. மேலும், தெரு விளக்குகளால் ஏற்படும் மின் கட்டணம், உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பெரும் சுமையாக உள்ளது.பல கிராம ஊராட்சிகளுக்கு, தெரு விளக்கு மின் கட்டணத்தைச் செலுத்தக் கூட நிதியில்லை. இந்த, இக்கட்டான நிலையில், மின் சிக்கனம், செலவை குறைத்தல் ஆகியவற்றுக்காக, மாற்று எரிசக்திக்கு, தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்கிறது.இதன் ஒரு கட்டமாக, கிராம ஊராட்சிகளில் உள்ள, ஒரு லட்சம் தெரு விளக்குகள், சூரிய சக்தி தெரு விளக்குகளாக மாற்றும் திட்டம், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. சூரிய சக்தியையும் சிக்கனமாகப் பயன்படுத்த, சதாரண குழல் விளக்குகளுக்கு பதில், எல்.இ.டி., விளக்குகள் பொருத்தவும் முடிவுசெய்யப்பட்டது.

இதையடுத்து, ஆண்டுக்கு, 20 ஆயிரம் தெரு விளக்குகள் என, ஐந்து ஆண்டுகளில், ஒரு லட்சம் தெரு விளக்குகளை, சூரிய சக்தி விளக்குகளாக மாற்ற, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில், 20 ஆயிரம் தெரு விளக்குகள், சூரிய சக்தி விளக்குகளாக மாற்றப்படுகின்றன. இதற்கு, 52.50 கோடி ரூபாயை அரசு ஒதுக்கி உள்ளது.சென்னை நீங்கலாக, 31 மாவட்டங்களிலும், கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 15 தெரு விளக்குகளை ஒரு தொகுப்பாகக் கொண்டு, சூரிய சக்தியை ஈர்த்து, மின்சாரமாக மாற்றும் தகடுகள் அமைக்கப்படுகின்றன. இத்தொகுப்பு, 600 வாட்ஸ் மின்சக்தியை உற்பத்தி செய்வதாக அமைக்கப்படுகிறது.சூரிய சக்தி மின் விளக்குகள் அனைத்தும், "ரிமோட் கன்ட்ரோல்' முறையில், பராமரிக்கும் முறையும் ஏற்படுத்தப்படுகிறது. இதற்காக, தமிழகத்தை தெற்கு, வடக்கு என, இரு மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.

இம்மண்டலங்களில், சூரிய சக்தி தெரு விளக்குகளை அமைக்கும் நிறுவனம், தலைமையகங்களை அமைத்து, பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.சென்னை நீங்கலாக, மீதமுள்ள மாவட்டங்களில், தெற்கு மண்டலத்தில், 16 மாவட்டங்களும், வடக்கு மண்டலத்தில், 15 மாவட்டங்களும் பிரிக்கப்பட்டுள்ளன. அரியலூர், கடலூர், தருமபுரி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நாகபட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர், தஞ்சை, திருச்சி, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர், விழுப்புரம் ஆகிய, 15 மாவட்டங்கள், வடக்கு மண்டலமாகப் பிரிக்கப்பட்டு உள்ளன.

கோவை, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், மதுரை, நாமக்கல், நீலகிரி, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தேனி, திருப்பூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய, 16 மாவட்டங்கள், தெற்கு மண்டலமாகப் பிரிக்கப்பட்டு உள்ளன.

கிராமப்புறங்களில் உள்ள தெரு விளக்குகளை, சூரிய சக்தியில் இயங்கும் தெரு விளக்குகளாக மாற்ற, உலகளாவிய ஒப்பந்தப் புள்ளியை, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை கோரியுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.தமிழகத்தில் தொடர்ந்து வரும் மின்வெட்டால், பெரும்பான்மையான கிராமப் பகுதிகள் இருண்டுள்ளன. இந்நிலையில், சூரிய சக்தி மூலம், தெரு விளக்குகள் அமைக்கும் திட்டத்தின் அவசியம் குறித்து, அரசு உணர்ந்துள்ளதால், இதை விரைந்து செயல்படுத்த, நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.


- நமது சிறப்பு ச் செய்தியாளர், தினமலர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக