சொல்கிறார்கள லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சொல்கிறார்கள லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 13 ஜனவரி, 2013

சாவுக்கு அல்ல; வாழ்வுக்கானது பறை இசை

பறை இசையைக் குறிப்பிட்ட  வகுப்பிற்கான அல்லது குறிப்பிட்ட  இசைக்கான கலையாக இளைஞர்கள் கருதுவதில்லை. நான் மதுரையில் மாவட்டக்கலைமன்றச் செயலராக இருந்த பொழுது பறைஇசைக்கான பயிற்சிப்பட்டறைகள் நடத்தினேன். அரசு விழாக்களின் தொடக்க நிகழ்ச்சியாகப் பறை இசையையும் அடுத்துப் பெருவங்கிய(நாதசுர) இசையையும் வைத்தேன். நல்ல வரவேற்பு இருந்தது. கலைபண்பாட்டுத்துறையின் துணை இயக்குநராகப் பொறுப்பேற்ற பொழுது பிற மண்டலங்களிலும் பறை இசைப்பயிற்சிப் பட்டறைகளுக்கு ஏற்பாடு செய்தேன்.ஆர்வமுடன் சிறுவர்களும் இளைஞர்களும் பங்கேற்றனர்.  விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக ப் பறை இசையைப் பரபபினேன்.  பறை இசை தங்களுக்கு உரியது என எண்ணிக் கொண்டிருப்பவர்கள்தாம்  சாவுப்பறையாக நடத்துகின்றனர். பிறர்  பொதுவான இசையாகத்தான் கருதுகின்றனர். பறை இசை என்பது தமிழர்களின் தொல்லிசைகளில் ஒன்று.  இவ்விசையை நன்கு அறிந்த மக்கள் கல்வியறிவிலும் மேம்பட வேண்டும் . குடிப்பழக்கத்தைத் தவிர்த்துக் க்ல்வியில் கருத்து செலுத்தினால் மட்டுமே மேம்பாடு காண முடியும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்!இனத்தைக் காப்போம்!/

சொல்கிறார்கள்


சாவுக்கு அல்ல; வாழ்வுக்கானது பறை இசை!
"கும்கி' திரைப்படத்தின், "சொய்ங்... சொய்ங்...' பாடல் பாடியுள்ள, மகிழினியின் கணவரும், "புத்தர் கலைக் குழு'வை நடத்தி வருபவருமான, மணிமாறன்: பறை இசை, தமிழருடைய ஆதி கலை வடிவம். சாவுக்கு மட்டுமே இசைக்கக் கூடிய, அமங்கலமான விஷயங்களுக்கு மட்டும் என, இது மாறி விட்டது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மட்டும் தான் இசைக்க வேண்டும் என, நிர்பந்திக்கப்பட்ட ஒன்றாக மாற்றப்பட்டு விட்டது. ஆனால் இது, நம் வாழ்க்கையின், கொண்டாட்டத்தின், வெற்றியின், நல்ல செய்தியைச் சொல்ல பயன்படுத்தும் இசை. ஒரு முறை இதன் சுவையை அனுபவித்தவர்கள், இதை உளமார நேசிக்கத் துவங்கி விடுவர். இதை, அனைவருக்குமான கலையாக, தமிழர்களின் இசையாக மாற்றுவது தான், எங்கள் குழுவின் நோக்கம். பறையிசையில், சாவுக்கு ஒரு தாளம், திருமணத்துக்கு ஒரு தாளம், மாடு பிடிக்கு ஒரு தாளம் என, தனித் தனி தாளம் உள்ளது. தமிழ் இசையில் இசைக் குறிப்புகள் இருப்பது போல, பறையிசைக்கும் இசைக் குறிப்புகளை உருவாக்கி உள்ளோம். குடிப் பழக்கம் தான், பறையிசைக் கலைஞர்களை, இத்தனை ஆண்டுகளும் அடிமையாக, சமூகத்தில் எந்த அங்கீகாரமும் இல்லாதவர்களாக வைத்திருந்தது. அதை மாற்ற வேண்டும்; பறையிசைக் கலைஞர்கள், கல்வி கற்க வேண்டும் என்பது, எங்கள் நோக்கம். இறந்தவர்களை வழியனுப்ப பறையிசைக்க வேண்டியது தான். ஆனால் அதை, தலித் சமூகத்தினர் மட்டும் தான், காலம் காலமாக செய்கின்றனர். கல்வியில்லாமல் குடியில் மூழ்கி, இதையே தொழிலாகச் செய்து, எந்த முன்னேற்றமும் இன்றி இருக்கின்றனர். இதை உணர்ந்த பிறகு தான், சாவுக்கு பறை வாசிப்பதில்லை என, முடிவெடுத்தோம். கோவில், திருவிழாக்களில், குடும்ப நிகழ்ச்சிகளில், கட்சி நிகழ்ச்சிகளில், அரசியல் கூட்டங்களில், பறை இசைக்கிறோம். எல்லா மேடைகளிலும், "எம் பறை ஒலி, சாவுக்கானது அல்ல; வாழ்வுக்கானது! எம் பறை முழக்கம், சாமிகள் ஆடுவதற்கல்ல; ஆதிக்கம் ஆட்டம் காண்பதற்கு! ஓங்கி அடிப்பதில் கிழியட்டும்... பறைகள் அல்ல, இந்திய ஜாதிகள்!' என, சொன்ன பிறகு தான், நிகழ்ச்சியை தொடங்குவோம்.இந்த பறையின் மூலமாக, ஜாதி வேறுபாடுகளை அகற்றணும். அது தான் எங்களுடைய இப்போதைய இலக்கு.

"எண்ணெய் தேய்த்துக்குளியுங்கள்!':ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஆயூர்வேத கல்லூரி டீன், ஆயுர்வேத டாக்டர் சுவாமிநாதன்: கடுமையான வேலை, டென்ஷனுக்குப் பின், நம்ம உடம்பை ரிலாக்ஸ் பண்றதுக்கு ஒரு சிறந்த தீர்வு, எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கறது தான். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது, வெயில் காயணும்; தண்ணீர் காயணும்; சீயக்காய் சுடுதண்ணியில கரைச்சு வெதுவெதுப்பா இருக்கணும்.சூரிய வெளிச்சம் வர்றதுக்கு முன்னாடியே, எண்ணெய் குளியல் எடுக்கக் கூடாது. சூடு எண்ணெயின் வீரியத்தால், உடம்பின் உட்புற குழாய்களில் உள்ள, அழுக்குகள் நெகிழும். சுடுதண்ணீரை உடம்பில் ஊத்தும் போது, அது கரைந்து, மலம், சிறுநீர், வியர்வை மூலமா, வெளியேறத் தொடங்கும்.இரும்புக் கரண்டியில் நல்லெண்ணெயுடன், மிளகு, சீரகம் போட்டு பொரித்து, அந்த மிளகு, சீரகத்தை, அப்படியே வாயில் போட்டு மென்று, எண்ணெய் வெதுவெதுப்பாக இருக்கும்போதே தேய்க்கணும். இரும்புடன் எண்ணெய் சேரும் போது, நரம்புகளை வலுப்படுத்தும் தன்மை அதிகரிக்கும். உச்சி முதல் பாதம் வரை, எண்ணெயை ஊற வைத்து, 20 நிமிடம் வரை, மசாஜ் பண்ணலாம். அதிகபட்சம், 45 நிமடங்கள் வரை, எண்ணெய் ஊறலாம்.எண்ணெய் தேய்க்கும் போது, மேலிருந்து கீழாக தேய்ப்பதே சரியான முறை. சில பேருக்கு வயிற்றில், வாயுத் தொல்லை இருக்கும். அவர்கள் வலது பகுதியில் இருந்து, இடது பகுதிக்கு உருட்டி உருட்டி, தேய்க்க சரியாகும். இடுப்பு வலி இருந்தால், விளக்கெண்ணெய் சூடு பண்ணி, அந்த பகுதியில் தேய்த்துக் குளிக்கலாம். மலச் சிக்கலும் போகும்.தலையில் நல்லெண்ணெயை அரக்கித் தேய்க்கும் போது, மூளை நரம்புகள் வலுப் பெறும். மூளையில் உள்ள ஹைபோதாலமஸ், பிட்யூட்டரி கிளாண்ட் சரியாய் இயங்கும். பிட்யூட்டரி சீராய் இயங்க, உடம்பில் அத்தனை சுரப்பிகளும் சீராகும். ஆனால், முடி கொட்டுறவர்கள் தலையை அரக்கித் தேய்க்க கூடாது. அது முடி உதிர்தலை மேலும் அதிகரிக்கும். அவங்க எண்ணெயை பஞ்சில் முக்கி உச்சந்தலையில் வைக்க, எண்ணெயோட வீரியம் அப்படியே தலையில் இறங்கும். அதுவே அவர்களுக்கு போதுமானது.மாதவிடய் காலங்களில், உடம்பில் ஏகப்பட்ட ஹார்மோன்ஸ் மாற்றங்கள் இருக்கும். அன்று, எண்ணெய் குளியல் கூடவே கூடாது. எப்போதும் குளித்த பிறகு, தலைக்கு எண்ணெய் தடவக் கூடாது. அப்படி தடவினால், கை, கால் வலி வர வாய்ப்புண்டு.

ஞாயிறு, 28 அக்டோபர், 2012

மனநிறைவு கிடைக்கிறது

சொல்கிறார்கள்

"ஆத்ம த் திருப்திகிடைக்கிறது!'

 

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில், "கருணை இல்லம்' என்ற பெயரில், ஆதரவற்றோர் இல்லம் நடத்தி வரும், நியூசிலாந்தை சேர்ந்த ஜீன் வாட்சன்: நான் முதன் முதலில், 1984ம் ஆண்டு, இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்தேன். கன்னியாகுமரி பகுதி, எனக்கு மிகவும் பிடித்துப் போனதால், மீண்டும், 1986ம் ஆண்டு இங்கு வந்து, அப்பகுதி மக்களிடம் பழக ஆரம்பித்தேன். அங்குள்ள குழந்தைகள் இல்ல நிர்வாகி ஒருவர் மூலம், நிலக்கோட்டை பகுதிக்கு வந்தேன். முதன் முதலாக என்னைப் பார்த்த அந்த ஊர் மக்கள், நான் ஒரு மருத்துவர் என நினைத்து, தங்கள் குழந்தைகளுக்கு வைத்தியம் பார்க்கச் சொல்லி, என்னிடம் வேண்டுகோள் வைத்தனர்.அவர்களுக்கு என்னால் உதவ முடியவில்லை. அதற்காக மிகவும் வருந்தினேன். அந்த எண்ணம் தான், கருணை இல்லமாக உருமாறியுள்ளது.

போதிய மருத்துவ வசதிகளின்றி தவிக்கும் இப்பகுதி மக்களுக்கு, என்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என, முடிவெடுத்தேன். மீண்டும் நியூசிலாந்திற்கே சென்றேன். கருணை இல்லம் துவங்க, நிதி திரட்ட முயற்சி செய்தும், போதிய நிதி கிடைக்கவில்லை. நியூசிலாந்தில் உள்ள எங்களின் பூர்வீக வீட்டை விற்று, கொஞ்சம் பணத்தை ஏற்பாடு செய்தேன்.

கையிலிருந்த சொற்ப தொகையுடன், இந்தியா வந்து, ஏழு குழந்தைகளுடன் கருணை இல்லத்தை துவங்கினேன். ஆரம்பத்தில் எவ்வித அடிப்படை வசதியும், கருணை இல்லத்தில் இல்லை. கையிலும் போதிய நிதி இல்லாததால் செய்வதறியாது திகைத்தேன். அப்போது, என் நண்பர்கள் சிலர் உதவ முன்வந்தனர். பல இடையூறுகள், சிக்கல்கள் அனைத்தையும் சமாளித்து, கருணை இல்லம் அறக்கட்டளை துவங்கி, நிதி திரட்டினோம்.

குழந்தைகளின் ஏழ்மை நிலை, நன்கு ஆராயப்பட்ட பின்பே, அவர்களுக்கு கருணை இல்லத்தில் இடம் அளிக்கப்படுகிறது. கருணை இல்லத்தில் சேராத மாணவர்களுக்கும், உதவி செய்கிறோம். என் கனவு, அக்கறை, சகலமும் இந்தப் பிள்ளைகளின் நல்வாழ்வு தான். அது, நான் எதிர்பார்த்ததை போன்றே, நிறைவேறி வருவதில், எனக்கு கிடைக்கும் ஆத்மதிருப்தியை சொல்ல வார்த்தையே இல்லை.

திங்கள், 22 அக்டோபர், 2012

"அயராத உழைப்பால் நிமிர்ந்தது வாழ்க்கை!'



சொல்கிறார்கள்


"அயராத உழைப்பால் நிமிர்ந்தது வாழ்க்கை!'


முதலீடாக, 500 ரூபாயில் துவங்கி, பலகாரங்கள் விற்பனையில், இன்று மாதம் நான்கு லட்சம் ரூபாய் வியாபாரம் பார்க்கும் இன்பவள்ளி: என் கணவர் மளிகைக் கடை வைத்திருந்தார். எதிர்பாராத விதமாக அதில், நஷ்டம் ஏற்பட, கடன் ஒரு புறம், மகன்களின் படிப்பு மறுபுறம் என, இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மீள முடியாமல், தவித்தேன். தஞ்சையிலிருந்து, பிழைப்புத் தேடி திருச்சி வந்தோம். அங்கு, கணவருக்கு கிடைத்த மிகக் குறைவான ஊதியம் மூலம், மாதம் முழுவதும் சிக்கன வாழ்க்கை நடத்தினேன்.அப்போது, எங்கள் பகுதியில் துவங்கிய மகளிர் சுய உதவிக் குழுவில் நானும் உறுப்பினராக சேர்ந்தேன். தெரிந்தவர்கள் மூலம், 500 ரூபாய் கடன் வாங்கி, காய்கறிகளைக் கொண்டு, 10 வகையான ஊறுகாய்களை தயார் செய்தேன். ஒரு முறை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குள் நடந்த போட்டியில், என் தயாரிப்பான, பாகற்காய் ஊறுகாய்க்கு பரிசு கிடைத்தது. பின், ஆங்காங்கே ஸ்டால்கள் அமைத்ததன் மூலம், நல்ல பெயர் கிடைத்தது.ஒரு முறை தெரிந்தவருக்கு, தேன் குழல் முறுக்கு செய்து கொடுத்தேன். அது அவருக்கு பிடித்துப் போக, செட்டிநாட்டுப் பலகாரங்கள் செய்து விற்பனை செய்தால், நல்ல லாபம் பார்க்க முடியும் என, யோசனை கூறினர். நானும் ஒரு ஆர்வத்தில், பலகாரங்கள் செய்ய துவங்கினேன்.மகளிர் தொழில் முனைவோர் சங்கம் மூலம், 25 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று, பலகாரம் செய்ய மிஷின் வாங்கினேன். என் தயாரிப்பின், சுவையும், தரமும் நன்றாக இருந்தாலும், மார்க்கெட்டிங் செய்வதில் தயக்கம் இருந்தது. திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் மூலம், மாணவர்களிடம் விற்பனை செய்தேன்.வியாபாரம் வளரத் துவங்கியது. பல ஸ்வீட் கடைக்காரர்கள், டிபார்ட்மென்ட் ஸ்டோர் முதலாளிகள் பலருக்கும் என் கை பக்குவம் பிடித்ததால், ஆர்டர் கொடுத்தனர். மாவு வறுப்பது, அரைப்பது, இடிப்பது என, அனைத்து வேலைகளையும் நானே கவனமாக செய்வேன். 10க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இன்று மாதத்திற்கு, நான்கு லட்சம் ரூபாய்க்கு மேல் வியாபாரம் செய்கிறேன்.






ஞாயிறு, 21 அக்டோபர், 2012

ஓய்வு நேரத்திலும் ஆதாயம் பார்க்கலாம்!'

சொல்கிறார்கள்


"கொலு வைப்பதேதொழில் தான்!'
திருமணம், நிச்சயம் போன்ற நிகழ்ச்சிகளில், அதற்குரிய சடங்குகள், சம்பிரதாயங்கள் போன்றவற்றை, கொலு பொம்மைகள் மூலம் காட்சிக்கு வைக்கும் கவிதா, ஜெயஸ்ரீ, அஞ்சனி, சத்தியபாமா:கவிதா ஆசிரியராக வேலை பார்த்துக் கொண்டிருந்த பள்ளியில் தான், எங்களின் குழந்தைகள் படிக்கின்றனர். அங்கு தான், நான்கு பேரும் அறிமுகமானோம். கவிதாவிற்கு, கை வேலைப்பாடுகளில் அதிக ஆர்வம். ஓய்வு நேரங்களில், கிராப்ட் வேலைகள் செய்ய ஆரம்பித்து விடுவார். அதில், ஆர்வமாகி பாராட்டியதுடன், கற்றுக் கொள்ளவும் துவங்கினோம்.பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு, வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்காமல் ஏதாவது தொழில் செய்யலாம் என, தீர்மானித்தோம். அப்போது தான், திருமணத்திற்கான ஆரத்தி, அலங்காரங்கள், கொலு பொம்மைகள் என, "கான்செப்ட்'டிற்கு ஏற்ப செய்து கொடுப்பதையே, நாமும் ஒரு தொழிலாக எடுத்து செய்யலாம் எனத் தோன்றியது.சென்னை, மேற்கு மாம்பலத்தில், ஒரு, "பிளாட்'டை வாடகைக்கு எடுத்தோம். சுப விசேஷங்களுக்கான, ஆரத்திகள் மற்றும் சீர்தட்டுகள், மண்பானை அலங்காரங்கள், விழா அரங்கில் கொலு பொம்மைக் காட்சி என, மூன்றும் செய்து தருகிறோம் என, தெரிந்தவர்களிடம் வாய்ப்பு கேட்டோம். இந்த புதுமையான யோசனைக்கு, பலர் தயங்கினாலும், சிலர் ஆர்வமாயினர்.மாப்பிள்ளை அழைப்பு, நிச்சயம், முகூர்த்தம், முளைப்பாரி, மோதிர விளையாட்டு என, சுபசடங்குகளை, நாங்கள் கொலுவாக வைப்பதை பார்ப்பவர்கள் ரசித்ததுடன், வாய்ப்பும் கொடுத்தனர்.ஒரே மாதிரியான, கொலு பொம்மைகளையே அனைத்து விசேஷங்களிலும் வைக்காமல், ஒவ்வொரு, "ஆர்டரு'க்கும், புதிதாக ஏதாவது யோசித்து செய்வோம். விழா நடத்துபவர்களின் விருப்பங்கள், அவர்களின் சமுதாயப் பழக்கம் அனைத்தையும், கொலுவில் கொண்டு வருவோம். இப்போது, பல, வி.ஐ.பி., வீட்டு விசேஷங்களுக்கும் எங்களுக்கு ஆர்டர் வருகிறது.தினமும் காலை, 10:00 மணிக்கு அலுவலகத்திற்கு வருவோம். ஆர்டர்கள், கணக்கு வழக்கு அனைத்தையும், ஒவ்வொருத்தரும் பகிர்ந்து செய்வோம். 1:00 மணிக்கு, வீட்டிற்கு கிளம்பி விடுவோம். இந்த நான்கு ஆண்டாக, குடும்பமும், தொழிலும் ஒன்றை ஒன்று தொந்தரவு செய்யாமல் போகிறது.
"ஓய்வு நேரத்திலும் ஆதாயம் பார்க்கலாம்!'
 இல்லத்தரசிகள் பங்குச் சந்தையில் ஈடுபடுவது பற்றி வகுப்பெடுக்கும் தர்மஸ்ரீ: திருமணத்திற்குப் பின், கணவரின் வேலை காரணமாக, மும்பையில் இருந்த போது, ஓய்வு வேளையில், "ஷேர் மார்க்கெட், கமாடிட்டி மார்க்கெட், கரன்சி மார்க்கெட்' என, பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். ஐந்து ஆண்டுகளுக்கு முன், பங்குச் சந்தை நேரடி வர்த்தகத்தில் ஈடுபட ஆரம்பித்தேன். துவக்க காலத்தில் பங்குச் சந்தையில் உள்ள ஏற்ற இறக்கங்கள் சரிவர புரியாமல் நிறைய நஷ்டங்கள்.நஷ்டம் வருவதற்கான காரணம் குறித்து ஆராய்ந்ததில், எந்த வித அடிப்படை அறிவுமின்றி, மனம் போன போக்கில் செய்த முதலீடுகள், அதிகபட்ச நஷ்டத்தை தந்திருப்பது புரிந்தது. தவிர, நிபுணர் கருத்துக்களை மட்டுமே நம்பி முதலீடு செய்ததாலும், நஷ்டம் ஏற்பட்டதை உணர்ந்தேன். இந்த அனுபவத்தின் மூலம், மெல்ல மெல்ல, சந்தையின் போக்கைக் கவனிக்க ஆரம்பித்தேன்.இதில் நான் கற்றுக் கொண்டதை, நண்பர்களிடம் பகிர்ந்து கொண்ட போது, இதையே மற்றவர்களுக்கு வகுப்பாக எடுத்தால், மற்ற பெண்களுக்கு பிரயோஜனமாக இருக்கும் என, யோசனை கூறினர். அது எனக்கு சரியென பட, கணவரின் ஒப்புதலுடன் பங்குச் சந்தை பற்றிய வகுப்பெடுக்க ஆரம்பித்தேன்.மொத்தம் ஐந்து வகுப்புகள். பங்குச் சந்தை என்றால் என்ன, அடிப்படை விஷயங்கள், பங்குகளை ஆன்-லைன் மூலம், வாங்குவது, விற்பது, நாள் வர்த்தகத்தில் ஈடுபடும் முறைகள், நல்ல நிறுவனங்களை கண்டுபிடிப்பது எப்படி என, படிப்படியாக சொல்லிக் கொடுப்பேன். சில சமயம், வெளியூர்களுக்கும் சென்று வகுப்பெடுப்பேன்.பங்குச் சந்தையில் முன் அனுபவமே இல்லாதவர்கள், முன் அனுபவம் இருந்தும் நஷ்டப்பட்டவர்கள் என, பல தரப்பட்டவர்களையும், இந்த வகுப்பின் மூலம் சந்திக்க முடிகிறது. இந்த துறையில், பெண்கள் குறைவாகத் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு காரணம், பங்குச் சந்தை என்றாலே, "சூதாட்ட களம்' என்ற மாயை தான்.வீட்டில் ஒரு கம்ப்யூட்டரும், குறைந்தபட்சம், 10 ஆயிரம் ரூபாய் முதலீடும் இருந்தாலே போதும். பங்குச் சந்தை பற்றிய நெளிவு, சுளிவுகளைக் கற்று, ஓய்வு நேரத்தில், நல்ல லாபம் பார்க்கலாம்!

திங்கள், 15 அக்டோபர், 2012

பக்குவமாய்ச் சொல்லுங்கள்!



சொல்கிறார்கள்

"பக்குவமாய்ப் பதில் சொல்லுங்கள்!'

குழந்தைகள் மன நல நிபுணர் கண்ணன்: பொதுவாக, 14 வயது வரையுள்ள குழந்தைகள் தான், அதிகமாக கேள்விகள் கேட்பர். எல்லா குழந்தைகளும், தன் பெற்றோர் மூலமாகவே, அதிக விஷயங்களைக் கற்றுக் கொள்கின்றனர். எனவே, குழந்தைகளிடமும், அவர்கள் முன், மற்றவர்களிடமும் எந்தெந்த விஷயங்கள் பேசலாம், அவர்கள் முன்னிலையில், "டிவி'யில் என்னென்ன விஷயங்கள் பார்க்கலாம் என்பதில், வீட்டினர் கவனமாக இருக்க வேண்டும்.பெற்றோர் தவிரவும், உறவினர்கள், நண்பர்கள், சினிமா என, குழந்தைகள் தங்களைச் சுற்றி உள்ள உலகத்தில், நல்லது, கெட்டது என, அனைத்தையும் கடக்க வேண்டியுள்ளது. உதாரணமாக, "நாப்கின்னா என்னம்மா?' என்று கேட்டால், அதிர்ந்து விடாதீர்கள். ஏதோ ஒரு சூழலில், குழந்தைக்கு, அந்த வார்த்தை அறிமுகமாகியிருக்கிறது. அந்தப் புதிய வார்த்தைக்கு அர்த்தம் தெரியாததால், கேட்கிறது என்பதை, பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும்.சிறு குழந்தைகளுக்குத் தேவை, தான் அறிந்த அந்த புதிய சொல்லைப் பற்றிய விளக்கம் தான். அதற்கு மேல், அதைப் பற்றி அவர்கள் ஆராய மாட்டார்கள். இதுவே, "அடி பின்னிடுவேன், ஒழுங்கா படி...' என, எதிர்மறையாக நடந்து கொண்டால், அந்த வார்த்தைப் பற்றிய குறு குறுப்பு அதிகரிக்கும்.குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு, அவர்களின் வயதைப் பொறுத்து, விவரம் சொல்ல வேண்டியது அவசியம். பொதுவாக, 15 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள், பாடப் புத்தகங்கள், இணையம், நண்பர்கள் என, விரிந்திருக்கும் அவர்களின் வட்டத்திலேயே, தங்களுக்கு தெரியாத விஷயங்கள் பற்றி, விளக்கங்கள் பெற முயல்வர்.பெற்றோரிடம், பர்சனலான கேள்விகள், அதிகம் கேட்பதில்லை. ஒருவேளை கேட்டால், அதற்கான உண்மையான விளக்கத்தை, நாகரிகமான வார்த்தைகளில் சொல்ல வேண்டும். நீங்கள் சொல்லும் பதில், அவர்களை தெளிவுபடுத்துவதுடன், உங்கள் மேல், மரியாதை வரும்படியும் இருக்க வேண்டும்.


வியாழன், 4 அக்டோபர், 2012

"விளையாட்டால் புத்துணர்ச்சி கிடைக்கிறது!'

சொல்கிறார்கள்


"விளையாட்டால் புத்துணர்ச்சி கிடைக்கிறது!'


டேபிள் டென்னிஸ் வீராங்கனை ஐஸ்வர்யா: என் அம்மா, வாலிபால் விளையாட்டில், தேசிய அளவில் சாம்பியனாக இருந்தவர். மாநில அளவிலான போட்டிகள் பலவற்றிலும் பங்கேற்று, கோப்பைகள் வென்றிருக்கிறார். அது தான் எனக்கு, விளையாட்டில் ஆர்வத்தை ஏற்படுத்தியது. ஆனால், சிறு வயதிலேயே, கண் கண்ணாடி போடும் நிலை, எனக்கு ஏற்பட்டு விட்டது. அதற்கேற்ற வகையில், ஒரு விளையாட்டை தேர்வு செய்யும் போது, என் அம்மா எனக்கு, டேபிள் டென்னிசை தேர்வு செய்தார்.ஐந்தாம் வகுப்பிலிருந்து, டேபிள் டென்னிஸ் விளையாடத் துவங்கினேன் என்றாலும், எட்டாம் வகுப்பிலிருந்து தான், என் உற்சாகம் வேகமெடுத்தது. பள்ளிகளுக்கு இடையேயான பல போட்டிகளிலும் பங்கேற்கத் துவங்கினேன். 2002 முதல், 2006 வரை, தொடர்ந்து மாநில அளவிலான போட்டிகளில் பரிசுகள் பெற்றிருக்கிறேன். அனைத்திற்கும், என் பெற்றோர் மற்றும் பயிற்சியாளர் தான் காரணம்.இந்த விளையாட்டில், விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான், வீரர்கள் உள்ளனர். மற்ற விளையாட்டுகளுக்கு எப்படி, "ஸ்பான்சர்' கிடைப்பதில்லையோ, அது போலத் தான், டேபிள் டென்னிசுக்கும், "ஸ்பான்சர்' கிடைப்பது சிரமம்.ஒரு, "பேட்' வாங்க வேண்டுமானாலும் கூட, நிறைய செலவாகிறது. பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இந்த விளையாட்டை ஊக்கப்படுத்த வேண்டும்.பெரும்பாலான பெற்றோர், பிள்ளைகள் பிளஸ் 2 வந்தவுடன் பாட்டு, நடனம், விளையாட்டு என, அனைத்தையும் ஒதுக்கி விட்டு, படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என, எதிர்பார்க்கின் றனர். பள்ளிகளில் நடக்கும் எல்லா விளையாட்டுகளிலும் கலந்து கொண்டபடியே தான், நான் படித்தேன். பத்தாம் வகுப்பில், 500க்கு, 475 மதிப்பெண்கள் பெற்றேன். கணிதப் பாடத்தில், 100 மதிப்பெண் பெற்றேன். விளையாடி விட்டு வந்தால், மனதிற்குப் புத்துணர்ச்சி கிடைக்கிறது. 

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

"இசைக் கலைஞனாக வெல்வேன்.!'



சொல்கிறார்கள்


"இசைக் கலைஞனாக  வெல்வேன்.!'
ஒன்றரை அடி உயரம் கொண்ட, பதினாறு வயது இளைஞர், பெரிய சாமி: சேலம் மாவட்டம், நாயக்கன்பட்டி கிராமம் தான் என் ஊர். பெற்றோர் கூலி வேலை செய்கின்றனர். நான், 10ம் வகுப்பு வரை படித்தேன். சக நண்பர்கள், என் உயரக் குறைவை கிண்டல் செய்ததால், மேற்கொண்டு படிப்பை தொடரவில்லை.எனக்கு இசையின் மீது ஆர்வம் அதிகம். "டிவி'யில் ஒளிபரப்பாகும் பாடல்களுக்கு தகுந்தவாறு, ஏதாவது டப்பாவிலோ, காலிக் குடத்திலோ தினமும் தாளம் அடித்துக் கொண்டிருப்பேன்.நண்பன் மூலமாக, சேலத்தில், அரசு இசைப்பள்ளி இயங்குவதைக் கேள்விப்பட்டேன். அங்கு சேர விரும்பிய நான், வசதியில்லாத காரணத்தால், என் அம்மாவுடன், மக்கள் குறை தீர்க்கும் நாளன்று, கலெக்டர் மகாபூஷணத்தைச் சந்தித்து, மனு கொடுத்தேன்.என் இசை ஆர்வத்தைப் புரிந்து கொண்ட கலெக்டர், உடனடியாக, சேலம் இசைப் பள்ளியின்  தலைமை ஆசிரியர் சங்கர்ராமனை, சில இசைக் கருவிகளோடு வரவழைத்து, என் ஆர்வத்தை சோதிக்கச் சொன்னார்.அவர், மிருதங்கம் எடுத்து வந்து, கலெக்டர் அலுவலகத்திலேயே வாசிக்கச் சொன்னார்; நானும் வாசித்தேன். என் வாசிப்பில், தாளலயம் இருப்பதை உணர்ந்த பள்ளி முதல்வர், என்னை மிருதங்க வகுப்பில் சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறினார். உடனே கலெக்டர், என் ஏழ்மை நிலையைக் கருதி, மூன்று ஆண்டு மிருதங்க வகுப்பில், கட்டணமில்லாமல் சேர்த்துக் கொள்ளவும், இலவச உணவுடன் ஹாஸ்டலில் தங்கிக் கொள்ளவும், மாதம், 400 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கவும் உத்தரவிட்டார்.இந்த இசைப் பள்ளியின் சூழ்நிலையே, ரம்மியமாக இருக்கிறது. என் குறையைப் பார்க்காமல், என் ஆர்வத்திற்கு மட்டுமே மதிப்பு கொடுக்கிற தலைமை ஆசிரியர்  மற்றும் ஆசிரியர்களுக்கு, நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.உடன் பயில்கிற மாணவர்களின் இசை ஆர்வம், என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது. நிச்சயம் ஓர் இசைக் கலைஞனாக, எதிர்காலத்தில் ஜெயிப்பேன். 

சனி, 22 செப்டம்பர், 2012

"மனிதனாக இருக்கிறானா...!'

சொல்கிறார்கள்

"மனிதனாக இருக்கிறானா...!'
கலைமாமணி வீ.கே.டி.பாலன்: ஒரு மனிதன் கல்வி கற்கிறானா, இல்லையா என்பது முக்கியமில்லை; அவன் மனிதனாக இருக்கிறானா என்பது தான் முக்கியம். கல்வி, அதிகமாகவே மனிதர்களை உருவாக்கியிருக்கிறது. ஆகவே, கல்வி கற்றல், மனித சமூக வளர்ச்சிக்கு மிக முக்கியமானது என்பதை மறுப்பதற்கு இல்லை. என் மகளுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வர, பேசிய பின், ரிசீவரை கீழே வைத்த அவள், "ஓ...'வென, அழத் தொடங்கி விட்டாள். காரணம் கேட்க, "என்னுடன் படிக்கும் மாணவி, கெரசின் ஊற்றி, தற்கொலை செய்து கொண்டாள்' என்றாள். காரணம் உடனடியாகத் தெரியாத போதும், மறுநாள் தெரிய வந்தது. அந்த ஆண்டு நடைபெற்ற தேர்வுகளில் எல்லாம் நல்ல மதிப்பெண்கள் பெற்ற அப்பெண், கடைசித் தேர்வில், மதிப்பெண்ணில் கொஞ்சம் பின்தங்கி விட்டாள். அதற்காக, அவள் தாயும், தந்தையும் திட்டியதன் பொருட்டு, இந்தத் தற்கொலை முடிவுக்கு வந்திருக்கிறாள். இந்த சம்பவத்தால், "பெற்றோரே... உங்கள் குழந்தைகளை வெறும் மதிப்பெண்கள் பெறும் இயந்திரங்களாகத் தான் பார்க்கிறீர்களா?' என்று கேட்கத் தோன்றுகிறது. அதே வேளையில், கண்டிக்கும் அதிகாரம் உங்களுக்கு இல்லை என்பதுமில்லை. அமைதியாக அமர்ந்து, நிதானமாக, உங்களின் வாரிசுகளின் வருங்காலத்தை நிமிர்த்த, அவர்களின் சிக்கல்களை, உங்களுக்குள் அவிழ்த்துக் கொள்வது தான் வாழ்க்கை. அகம்பாவம் கொள்வது, அடாவடி நடவடிக்கைகளுடன் உயிரையே துச்சமாக மதிக்கும் முடிவை எடுத்துக் கொள்வது மாணவப் பருவத்தினருக்கு ஏற்புடையதாகுமா? கல்வி கற்றல் நல்லது என்பது உண்மையோ, இல்லையோ... அது குறிக்கோள் உடையதாக இருக்க வேண்டும் என்பது நிதர்சனம். குறிக்கோள் இல்லாத கல்வி, பாமரத்தனத்தை விட மோசமானது.

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

பதுக்க விடக் கூடாது!'



சொல்கிறார்கள்

பதுக்க விடக் கூடாது!' 

 இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்: கடந்த, 1969ல், பசுமை புரட்சி ஏற்பட்ட காலத்தில் இருந்தே, தமிழகம், உணவுப் பற்றாக்குறை மாநிலமாகத் தான் இருக்கு. பஞ்சாபில் இருக்கிறவங்க, அரிசியே சாப்பிடறதில்லை. தமிழகத்துக்கு ஏற்றுமதி பண்றதுக்காகவே, அவங்க அரிசி உற்பத்தி பண்றாங்க. ஆந்திராவில் இருந்து பொன்னி வருது. கர்நாடகத்தில் இருந்து டீலக்ஸ் பொன்னி வருது. இந்தியா முழுதும் நல்லா இருந்தா, நாம அதைப் பத்தி கவலைப்படாம, இறக்குமதி பண்ணிருவோம். இந்தியா முழுதும், இன்னிக்கு, 28 சதவீதம் மழை குறைவுன்னு அரசே சொல்லுது. தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள்ல, நாலரை லட்சம் ஏக்கர்ல, நெல் பயிர் பண்றோம். அறுவடையின் போது தான், நெல் பற்றாக்குறை வரும். ஆனா, விதைக்கும் போதே பற்றாக்குறைன்னு சொல்றாங்க. இது எப்படி? இது முழுக்க முழுக்க பதுக்கல்! விலை உயர்வுக்கு, பதுக்கல் மிக முக்கியக் காரணம். உணவுப் பொருளை அரசு பதுக்க விடக் கூடாது. இரண்டாவதா, பருவ மழை பெய்யலியே தவிர, அங்கங்கே கொஞ்சமா மழை பெய்துட்டு தான் இருக்கு. புன்செய் பயிர்களுக்கு, இந்த மழை போதும். நெல்லுக்கு தேவையான தண்ணீர்ல, பத்துல ஒரு பங்குக்கும், குறைவா இருந்தா போதும். இந்த தானியங்கள் நல்லா விளையும். புன்செய் பயிர்களான கேழ்வரகு, கம்பு, சோளம் போன்ற, சத்துள்ள தானியங்களை பயிரிட, மக்களிடையே ஆர்வத்தை, அரசு தூண்ட வேண்டும். மூன்றாவதாக, ஒற்றை நாற்று சாகுபடி மூலம், நெல் விளைச்சலை, இரண்டு பங்கு கூட்ட முடியும். அரசாங்கம் நடத்தின பல, "மாதிரி வயல்'களிலேயே, விளைச்சல் இரட்டிப்பாகி, இது உறுதிபடுத்தப்பட்டிருக்கு. அரசு அதிகாரிகளுக்கு, போதிய பயிற்சி கொடுத்து, எங்கெல்லாம் நெல் பயிராகுதோ, அங்கெல்லாம், இந்த ஒற்றை நாற்று சாகுபடி முறையை அறிமுகப்படுத்தினா, குறைஞ்ச இடத்திலேயே, இரண்டு பங்கு நெல் உற்பத்தியை பெருக்க முடியும். இந்த மூன்றையும் செஞ்சாலே, உணவுப் பொருள் பற்றாக்குறையால் ஏற்படுகிற விலைவாசியை கட்டுப்படுத்தலாம். 

சனி, 15 செப்டம்பர், 2012

தொண்டு இணையர்

சொல்கிறார்கள்

"சேவை த் தம்பதி!'
பிச்சைக்காரர்களின் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் உமா: நானும், என் கணவரும், 10 வயதிலிருந்தே நண்பர்கள். மற்றவர்களுக்கு உதவும் குணம், சின்ன வயதில் இருந்தே எங்கள் இருவருக்கும் உண்டு. கல்லூரிப் படிப்பு முடிந்த பிறகும் அது தொடர, தொண்டு அமைப்பை துவங்கி, அதன் மூலம் உதவி செய்யலாமே என, நண்பர்கள் கூறினர். அப்படி, 13 ஆண்டுகளுக்கு முன் உருவானது தான், "சுயம்' தொண்டு அமைப்பு. ஒரு கட்டத்தில் வாழ்க்கையிலும், இணைந்து விட்டோம்.கல்வி மற்றும் மருத்துவம் பற்றிய விழிப்புணர்வை, ஏழை மக்களுக்கு ஏற்படுத்துவது தான் முதல் கடமையாக எடுத்து செயல்பட்டோம். நூற்றுக்கணக்கான பேருக்கு கல்வி, மருத்துவ உதவிகள் பெற வழிவகை செய்தோம்.பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆளுமை திறன் பயிற்சி கொடுக்கிறோம். சிந்தாதரிப்பேட்டை அரசுப் பள்ளியில், 57 சதவீதமாக இருந்த தேர்ச்சி விகிதம், எங்கள் பயிற்சிக்குப் பின், 87 சதவீதமாக உயர்ந்துள்ளது.

முத்துராம்: கீழ்ப்பாக்கம், பிளாட்பார பகுதியில் உள்ள, பிச்சைக்கார குடும்பங்களின் வாழ்க்கையை, "நடைபாதை பூக்கள்' எனும் பெயரில், குறும்படமாக எடுத்தோம். கல்வி கிடைக்காததால், குழந்தைகள் பிச்சை எடுக்கும் அவலத்தை சுட்டிக் காட்டினோம். பலரிடம் இருந்து, நிதி உதவி கிடைத்தது. அதைக் கொண்டு, 20 குழந்தைகளை படிக்க வைத்தோம். ஆனால், தினமும் பள்ளி முடிந்ததும், அவர்கள் பிச்சை எடுக்கத்தான், செய்தனர். உண்டு, உறைவிடப் பள்ளியைத் துவங்கினால் தான், முழுமையாக மாற்ற முடியும் என தீர்மானித்து, பெரும் போராட்டத்திற்குப் பின், 2003ம் ஆண்டு, 30 குழந்தைகளுடன், "சிறகு மாண்டிசோரி' பள்ளி ஆரம்பமானது.தற்போது, 20 ஆசிரியர்களுடன், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு படிக்கின்றனர். இதில், 150க்கும் மேற்பட்ட மாணவர்கள், பிச்சைக்காரர்களின் குழந்தைகள். இனி, பிச்சைக்காரர்களின் குழந்தைகளும், டாக்டர், இன்ஜினியர், கலெக்டர் ஆவர்.

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

ஆங்கிலத்தில் சாதித்துக் காட்டினேன் !

சொல்கிறார்கள்


 ஆங்கிலப் பேச்சாற்றலில், சர்வதேச அளவில், தங்க விருது பெற்ற தமிழ்ப் பெண், ஸ்ருதி: லண்டன், "கேம்ப்ரிட்ஜ்' பல்கலைக் கழகம் சர்வதேச அளவில் நடத்திய போட்டி அது. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், போட்டிக்கான நடைமுறைகள் துவங்கி விட்டன. அதன்படி, உலகம் முழுவதும் ஒவ்வொரு துறையிலும், ஆங்கிலத்தின் ஆதிக்கம், தொடர்பு மொழியாக அதன் விரிந்த பயன்பாடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து, சென்னையில், "டெஸ்ட்' எழுதினேன்.இப்படி அடுத்தடுத்த நிலையில் நிறைய தேர்வுகள். அனைத்து தேர்வுகளிலும், பாசான பிறகு, லண்டனில் இறுதித் தேர்வு நடந்தது. உலகம் முழுவதுமிருந்து, 100 பேர் கலந்து கொண்டனர். ஆங்கிலத்தை, "ஸ்டைலாக' பேசுவது, வேகம், உச்சரிப்பு என, போட்டியின் விதிமுறைகளில் கடுமை அதிகம். முதலில், கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். நான், மக்கள் தொடர்புத் துறையில் (பி.ஆர்.,), முதுகலை முடித்துள்ளேன். அதனால், அந்தத் துறையில், தொடர்பு மொழியாக, ஆங்கிலத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பதை விளக்கக் கூறினர். என்னோடு, ஆசிய, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் போட்டியிட்டனர். நடுவராக, "கேம்ப்ரிட்ஜ்' பல்கலையின் ஆங்கிலப் பேராசிரியர் சைமன் ரைட் அமர்ந்திருந்தார். பேசி முடித்து, நான் மேடையை விட்டுக் கீழே இறங்கிய போது, கைதட்டி ரசித்தவர், என் அருகே வந்து, "எக்சலென்ட்' என்று தட்டிக் கொடுத்தார். இது, மிகப்பெரிய கவுரவம். அப்போதே, என் வெற்றி உறுதியாகி விட்டது. இங்கிலாந்தில் உள்ள பத்திரிகைகள், "ஆசிய நாடுகளின் மிகச் சிறந்த இளம் ஆங்கிலப் பேச்சாளர்' என, எனக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டிருந்தன. உலகப் புகழ் பெற்ற, "லண்டன் ஸ்கூல் ஆப் பிசினஸ்' நிறுவனத்தில், எம்.பி.ஏ., படிக்க வேண்டும் என்ற என் கனவும், இந்தப் போட்டியின் மூலம் நிறைவேறி இருக்கிறது. இதற்கு, "கேம்ப்ரிட்ஜ்' பல்கலையே ஸ்பான்சரும் செய்கிறது!

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

"படப்பொறி அருங்காட்சியகம் அமைக்கப் போகிறேன்!'

சொல்கிறார்கள்
அமைக்கப் போகிறேன்!'

ஒளிப்படப் பொறிகளை ச் சேகரிக்கும், ஓவியர் சிரீதர்: எனக்கு சிறு வயதிலிருந்தே ஓவியத்தில் அளவற்ற ஈடுபாடு உண்டு. ஓவியத்தை தாண்டி என் பொழுதுபோக்குகளில் ஒன்று, மாறுபட்ட பழைய பொருட்களைச் சேகரிப்பது. ஒரு முறை மும்பையில் ஓவியக் கண்காட்சியை நடத்தி விட்டு திரும்பும் முன், பழைய பொருட்கள் விற்கும் கடையில் பார்த்த பிரமாண்ட கேமரா தான், அவற்றை சேகரிக்கும் ஆர்வத்தின் துவக்கம். கடந்த எட்டு ஆண்டுகளில், 1,000த்திற்கும் மேற்பட்ட கேமராக்களை சேகரித்துள்ளேன். பாக்கெட் கடிகாரத்தில், கைக்கடிகாரத்தில், மறைத்து வைக்கப்பட்டிருக்கும் துப்பறியும் கேமராக்கள், ஜேம்ஸ் பாண்ட் காலம் வருவதற்கு முன், மார்க்கெட்டில் விற்கப்பட்டிருக்கின்றன. நீருக்குள் மூழ்கிப் படமெடுக்கும், உலகின் முதல் கேமரா, "3டி' கேமரா என, அபூர்வங்களை மட்டுமில்லாமல், பல மாடல் கேமராக்களையும் வைத்துள்ளேன்.கடந்த, 1885லிருந்து, 2000ம் ஆண்டு வரை வெளி வந்த எல்லா கேமராக்களையும் சேர்ப்பது என் திட்டம். உலகின் முதல் பெரிய கேமராவை வைத்திருப்பதால், எது மிகச் சிறியது என, கேட்பவர்களுக்காக, "மினி எச்டி 720' என்ற கேமராவை இணையதளத்தில், "ஆர்டர்' செய்திருந்தேன். சரியாகக் கண்காட்சிக்கு ஒரு நாள் முன்னதாக அது வந்தது. வெளிநாட்டில் நடத்தும் ஓவியக் கண்காட்சியில் கிடைக்கும் பணத்தில், கேமராக்களை வாங்கி சேகரிக்கிறேன். இன்று, "ஆட்டோமேட்டிக் டிஜிட்டல்' கேமராக்களால், குழந்தைகள் கூட படமெடுக்குமளவிற்கு எளிதாகிவிட்ட புகைப்படத் தொழில்நுட்பத்திற்குப் பின் உள்ள ஒரு நீண்ட சரித்திரத்தையும், கேமராக்களின் பரிமாண வளர்ச்சி எப்படி அந்தத் துறையை மாற்றிவிட்டது என்பது பற்றியும் பள்ளிக் குழந்தைகளுக்குச் சொல்ல, ஒரு அமைப்பை துவங்கியுள்ளேன். அடுத்த ஆண்டு, ஊட்டியில், கேமரா அருங்காட்சியகம் அமைக்கப்போகிறேன். இந்தியாவின் முதல் கேமரா அருங்காட்சியகம், உலக தரத்தில் சுற்றுலாப் பணிகளைக் கவரும் வகையில் இருக்கும்

திங்கள், 10 செப்டம்பர், 2012

பட்டை தீட்டியதுவறுமை!


பட்டை தீட்டியதுவறுமை!
வறுமையை வென்று, ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக தன் கனவை நனவாக்கியுள்ள கோவிந்த் ஜெய்ஸ்வால்: நெருக்கடி மிகுந்த, உ.பி., மாநிலம், வாரணாசி பகுதியில், சிறிய அறை கொண்ட வீட்டில், என் இள வயது கழிந்தது. சைக்கிள் ரிக்ஷா ஓட்டுனரான என் அப்பா, என் கல்விக்கு உறுதுணையாக இருந்தார். வறுமையுடன், ஐ.ஏ.எஸ்., கனவும் வளர்ந்தது.வீட்டைச் சுற்றியுள்ள, விசைத்தறி சத்தம், தொழிற்சாலை களின் புகை, 14 மணி நேர மின்வெட்டு என, பல பிரச்னைகள், என் கனவிற்கு முட்டுக் கட்டை போட்டாலும், அவற்றை வென்று, என் கனவை நனவாக்கினேன்.சிறு வயதில், மற்ற பிள்ளைகளைப் போல் விளையாடுவது, அரட்டை என, எதுவும் இல்லாமல், படிப்பதில் மட்டுமே, கண்ணும் கருத்துமாக இருந்தேன். நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போதே, மற்ற மாணவர்களுக்கும், மாலை வேளையில், "டியூஷன்' சொல்லிக் கொடுத்து, அதில் வரும் வருமானத்தில், என் குடும்பத்திற்கு உதவினேன்.ஐ.ஏ.எஸ்., படிக்க, டில்லி செல்ல திட்டமிட்டிருந்த போது, என் தந்தைக்கு திடீரென, உடல் நலக்குறைவு ஏற்பட்டு, படுக்கையில் முடங்கினார். நான் துவண்டிருந்த நேரத்திலும், என் தந்தை எனக்கு ஊக்கம் அளித்து, என் அக்காவின் திருமணத்திற்காக வாங்கிய இடத்தை விற்று, என்னை, டில்லிக்கு படிக்க அனுப்பினார். என் குடும்ப நிலையை எண்ணி, கடுமையாக படித்தேன். 2006ம் ஆண்டு நடந்த, ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றேன்.அப்துல் கலாம் தான், என், "ரோல் மாடல்!'என் சிறுவயது காலம், கஷ்டமானதாக இல்லாமல் போயிருந்தால், நான், ஐ.ஏ.எஸ்., ஆகியிருக்க வாய்ப்பில்லை. வறுமையும், கஷ்டங்களும் தான், என் வைராக்கியத்தை அதிகப்படுத்தி, பொறுப்புடன் படிக்க காரணமாகின.ஐ.ஏ.எஸ்., தேர்வில் அனைத்துப் பாடங்களையும், என் தாய்மொழி, இந்தியிலேயே எழுதினேன். தாய்மொழியில் தேர்வு எழுதுவது பிரச்னையில்லை. கற்றதை, தெளிவான முறையில், எப்படி தேர்வில் நாம் வெளிப்படுத்துகிறோம் என்பது தான் முக்கியம். தளராத நம்பிக்கை இருந்தால், எந்தத் தடையையும், நம்மால் வெல்ல முடியும்!