செவ்வாய், 16 அக்டோபர், 2012

அரசின் மதுக் கடைகளை மூட முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு- Tamac : supreme court verdict

அரசின் மதுக் கடைகளை மூட முடியாது:  உச்ச நீதிமன்றம்  அதிரடி உத்தரவு
 தினமலர்

புதுடில்லி : தமிழக அரசு நடத்தும், "டாஸ்மாக்' மதுபான கடைகளை மூட வலியுறுத்தி, "டிராபிக்' ராமசாமி தொடர்ந்த வழக்கை, சுப்ரீம் கோர்ட் நேற்று, தள்ளுபடி செய்தது.

சென்னையைச் சேர்ந்த, "டிராபிக்' ராமசாமி, சென்னை ஐகோர்ட்டில், ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், "தமிழக அரசே, "டாஸ்மாக்' என்ற பெயரில், மதுபான கடைகளைத் திறந்து, பொதுமக்களுக்கு, மதுபானங்களை விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும்' என, கோரியிருந்தார்.அந்த வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், அவர், பொதுநலன் கோரும் மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கு, நீதிபதிகள், டி.கே.ஜெயின் மற்றும் மதன் லோகர், ஆகியோர் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள், எம்.என்.கிருஷ்ணமணி மற்றும் ராஜா ராமன் ஆஜராகினர்.

மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், தங்கள் தீர்ப்பில் கூறியதாவது: அரசியல் அமைப்புச் சட்டத்தின், பிரிவு 47ஐ மேற்கோள் காட்டி, "டிராபிக்' ராமசாமி தொடர்ந்துள்ள வழக்கு, தள்ளுபடி செய்யப்படுகிறது. அரசின் கொள்கைக்கு எதிராக, பொதுமக்களின் உடல் நலத்தைக் கெடுக்கும் விதத்தில், அரசே, கடையைத் திறந்து, மதுபானம் விற்கிறது என்பது மனுதாரரின் வாதம்.அரசின் கொள்கை படி, நாம் சென்றால், அரசு ஊழியர்கள் ஒருவர் கூட, மதுபானம் அருந்தக் கூடாது. அவ்வாறு செய்ய முடியுமா? அந்த விதிமுறைகள், பின்பற்ற வேண்டியவற்றைக் கூறுகின்றன; மது விலக்கு பற்றி கூறவில்லை.

அரசு ஊழியர்கள் யாரும் மதுபானம் அருந்தக் கூடாது என்ற விதியை, நடைமுறை படுத்த முடியுமா? அவ்வாறு செய்தால், பொதுத்துறை நிறுவனங்கள் செயல்படத் தான் முடியுமா? ஆகவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.மதுபானம் அருந்துவதால், ஏராளமானோர் இறப்பதாக, மனுதாரர் கூறுகிறார். அதை விட, தினமும், சாலைகளில் நடக்கும் விபத்துகளில் ஏராளமானோர் இறக்கின்றனர். அவர்கள் மீது மனுதாரர் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக