தினமலர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தினமலர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 4 செப்டம்பர், 2020

பேராசிரியர் சி.இலக்குவனார், எல்.முருகராசு, தினமலர்

 

பேராசிரியர் சி.இலக்குவனார், தினமலர்



latest tamil news




பேராசிரியர் சி.இலக்குவனார்



தமிழறிஞர்கள் வரிசையில் தனித்தன்மையானவர்.

இலக்குவனார் தஞ்சாவூர் மாவட்டம் வாய் மேடு என்னும் கிராமத்தில் சிங்கார வேலர் – இரத்தினம் அம்மையார் ஆகி யோரை பெற்றோராக கொண்டு எளிய குடும்பத்தில் 17.11..1910இல் பிறந்தார். உள்ளூர் தொடக்கப்பள்ளியில் படித்த அவர் முதுகலை பட்டங்களையும் பெற்றார். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் கற்றுத்தேர்ந்தவர்.

தொல்காப்பியத்தை இவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார் என்பது அசாதாரணமானது. அண்ணாதுரை முதல் அமைச்சராக போப்பைச் சந்தித்த போது இந்நூலினைத்தான் நினைவுப் பரிசாக அளித்தார்.

எழிலரசி உள்ளிட்ட கவிதை நூல்கள், தமிழ்க் கற்பிக்கும் முறை, அமைச்சர் யார், தொல்காப்பிய ஆராய்ச்சிகள், இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல், வள்ளுவர் வகுத்த அரசியல் உள்ளிட்ட ஆய்வு நூல்கள், என் வாழ்கைப்போர், கருமவீரர் காமராசர் எனும் வரலாற்று நூல்கள்.
திருக்குறள் எளிய பொழிப்புரை, தொல்காப்பிய விளக்கம் – தொல்காப்பிய எழுத்ததிகாரம் உள்ளிட்ட உரை நூல்கள் மற்றும்.
தொல்காப்பியம் உள்ளிட்ட ஒன்பது ஆங்கில அரிய நூல்களை எழுதியுள்ளார்.

சங்க இலக்கியம், குறள் நெறி, திராவிடக் கூட்டரசு உள்ளிட்ட ஏடுகளின் ஆசிரியர், திராவிடன் ஃபெடரேசன் என்ற ஆங்கில இதழையும் நடத்தியுள்ளார்.தமிழாசிரியராக, விரிவுரையா ளராக, பேராசிரியராக, துறைத்தலைவராகப் பரிணமித்தவர்.


latest tamil news

திருவாரூரில் தமிழாசிரியராய் பணி யாற்றிய போது அவரின் மாணவராக இருந்தவர்தான் மு.கருணாநிதி .தமிழ் உணர்வுடன் சுயமரியாதைப் பண்பையும் எனக்கு ஊட்டியவர் இலக்குவனார் என்று ‘நெஞ்சுக்கு நீதி’ நூலில் கருணாநதி குறிப்பிட்டுள்ளார்.

கல்லூரிப் பேராசிரியர்கள் சார்பாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் குழு(அகாடமிக் கவுன்சில் ) உறுப்பினராகவும், சென்னைப் பல்கலைக்கழக ஆசிரியர் குழுவின் துணைத் தலைவராகவும், தமிழகப் புலவர்க்குழு செயலாளராகவும் பொறுப்பில் இருந்தவர்.

இந்தி எதிர்ப்புப் போராலும், தமிழ் உணர்வு பெரு நடைப் பயணத்தாலும் இருமுறை சிறைவாசத்தை அனுபவித்தவர்.

தமிழ்நாட்டில் கல்லூரி முதல்வர்கள் குறைந்த அளவேனும் தமிழ்ப்புலமை பெற்றிருக்க வேண்டும். கல்லூரிப் பாடத் திட்டத்தில் தமிழே முதற்பாட மொழியாகவும் ஏனைய மொழிகள் இரண்டாம் பொது மொழியாகவும் இருக்க வேண்டும். தமிழ்ப் பாடத்தேர்வில் திருக்குறளுக் கென்றே தனித்தேர்வுத்தாள் இருக்க வேண்டும் என்பது இலக்குவனாரின் கல்விக் கொள்கை.

இலக்குவனார் பெயரில் அவர் பிறந்த வாய்மேட்டில் நடுநிலைப் பள்ளி உள்ளது.

‘தமிழகத்தின் உணர்வுக்கும் தமிழ்மொழியின் உயர்வுக்கும் உழைப்பதே எனது கடமை, தமிழ்ப் போரே எனது வாழ்க்கைப் போர் என்னும் குறிக்கோளை வாழ்வின் உயிரென ஏற்றுக் கொண்டு செயல்பட்ட இலக்குவனார் இறந்த நாள் இன்று. (3.9.1973)

தமிழர் வரலாற்றிலும் , வாழ்விலும் என்று வாழ்வார்.

-எல்.முருகராசு.

 

வெள்ளி, 24 மே, 2019

வெற்றிப்பரிசாக எழுவருக்கும் விடுதலை வழங்குக! - இலக்குவனார் திருவள்ளுவன்

வெற்றிப்பரிசாக எழுவருக்கும்
விடுதலை வழங்குக!
உலகெங்கும் உள்ள சட்டத்தின் ஆட்சியில் தண்டனை பெற்றவர்களைத் தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பே விடுதலை செய்வதும் ஒரு பகுதியாகும். அண்மையில் இலங்கையில் ‘புத்தபூர்ணிமா’ எனப்படும் வைகாசி விசாகச் சிறப்பு நாளில் 762 தண்டனைவாசிகளை இலங்கை அரசு விடுதலை செய்துள்ளது ஓர் எடுத்துக்காட்டாகும். இதை எல்லாம் அறியாமல் அடிக்கடிச் சிலர் “கொலையாளிகளை விடுதலை செய்யலாமா” என்கின்றனர். எழுவர் விடுதலைக்கு நீதிமன்றம் குறுக்கே நிற்கவில்லை.   ஏனெனில் தண்டனைக்குப் பிறகு விடுதலை செய்வதில் அது தலையிடாது.  அவ்வாறிருக்க ஆளுநர் தமிழக அரசின் முடிவுகளுக்கு எதிராகவும் நீதிமன்ற அறிவுறுத்தலுக்கு முரணாகவும் எழுவர் விடுதலைக்கான கோப்பில் கையாப்பமிடாமல் காலங்கடத்துவது தவறு என்றுதான் எதிர்க்க வேண்டும்.
மேலும் இந்த எழுவரைப் பொறுத்தவரை புலனாய்வுத்துறையினர், காவல் துறையினர், நீதித்துறையினர் என வழக்கு தொடர்பானவர்கள் குற்றம் சாட்டப்பட்ட சாத்தனுக்கு மாற்றாக அப்பாவியான சாத்தனை வழக்கில் சிக்க வைத்தது, இரவிச்சந்திரன் வாக்கு மூலத்தை மாற்றி வைத்தது எனப் பல முறைகேடுகள் நிகழ்த்தியதைக் குறிப்பிட்டு இவர்கள் விடுதலை செய்யப்படவேண்டியவர்கள் எனப் பலமுறை தெரிவித்துள்ளனர். அப்பாவிகளைக் காலத்தை நீட்டித்துச் சிறைகளில் அடைத்து வைத்திருப்பது மனித நேயமல்ல என்ற உணர்வுதான் நமக்கு வரவேண்டும். கொலைக்கு எதிரானவர்கள் போலவும் அறவாணர்கள் போலவும் சட்டம் தெரிந்தவர்கள் போலவும் கொலையாளிகளை விடுதலை செய்யலாமா எனக் கேட்பது அறியாமையும் மனிதநேயத்திற்கு எதிரானதுமாகும்.
அப்பாவிகளான எழுவரும் விடுதலை செய்யப்பெற்றால் உண்மையான குற்றவாளிகளான சு.சா.போன்ற பா.ச.க.வினர் சிக்குவார்கள் எனத்தான் பா.ச.க. விடுதலைக்கு எதிராக இருப்பதாக மக்கள் கருதுவதால் இந்த அவப்பெயரிலிருந்து காப்பாற்றிக் கொள்ளவாவது எழுவர் விடுதலை உடன் நிகழ வேண்டும்.
பா.ம.க. கூட்டணி நிபந்தனைகளில் ஒன்றாக எழுவர் விடுதலைபற்றித் தெரிவித்திருந்ததால், மாபெரும் வெற்றி பெற்றிருக்கும் நரேந்திர(மோடியிடம்) வலியுறுத்தி எழுவர் விடுதலையை அறிவிக்கச் செய்ய வேண்டும். திருவாளர்கள் சுதேந்திரராசா என்கிற சாந்தன்,  சிரீகரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, திருமதி நளினி, இராபர்ட்டு பயசு, செயகுமார், இரவிச்சந்திரன் ஆகியோருக்கு விடுதலையைத் தன் வெற்றிக்குப் பரிசாகப் பா.ச.க. அளிக்கட்டும்!
 அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்,  எழுத்தைக்காப்போம்!  மொழியைக் காப்போம்!  இனத்தைக் காப்போம்!  தமிழேவிழி!  தமிழா விழி!
[கொலையாளிகளை விடுவிப்பது நியாயமா? எனத் தினமலரில் இன்று(வைகாசி 10, 2050 / 24.05.2019) இஃது உங்கள் இடம் பகுதியில் வந்த மடலுக்குமறுமொழி.]

செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

குளங்களின் பாதுகாப்பை உணர்த்தும் ‘நடுகல் சிலை’

குளங்களின் பாதுகாப்பை உணர்த்தும் ‘நடுகல் சிலை‘
 நீர் நிலைகளைப் பாதுகாத்தவர்களுக்கு, நடுகல் சிலை வைத்து அவர்களை வழிபாட்டுக்கு உரியவர்களாக மாற்றி முன்னோர்கள் முதன்மை அளித்துள்ளனர்.
  மன்னர்கள், பாளையக்காரர்கள் ஆட்சிக்காலத்தில்,  பயிர் நிலங்களின் பரப்பை அதிகரிக்க, குளங்கள், தடுப்பணைகள் உருவாக்குவது  முதன்மைப் பணியாக இருந்துள்ளது. நீர் நிலைகளைப் பாதுகாக்க, அவர்கள் அளித்த  முதன்மை, நீர் வழித்தடங்களையும் நீர் நிலைகளையும் அழித்து விட்டு, வறட்சியில் வாடிக்கொண்டிருக்கும் நமக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது.
   மேடான தனது ஆட்சிக்குட்பட்ட பகுதிக்கு, வாய்க்கால் வெட்டித் தண்ணீர் கொண்டு வந்து, தனது ‘வாக்குறுதிப்படி’, அங்கிருந்து வெளியேறிய காலிங்கராயன் உட்பட கொங்கு மண்டலத்தில், ஆறு, வாய்க்கால் ஆகிய அனைத்துக்கும் வரலாறு உள்ளது. பாலாறு, ஆன்பொருநை எனப்படும் அமராவதி, ஏழு குளப் பாசனம், தங்கம்மாள் ஓடை, உப்பாறு ஓடை ஆகிய நீர் நிலைகளைச் சார்ந்தே உடுமலைப் பகுதி இருந்துள்ளது.
   இதில், குளங்களை உருவாக்கிய ஆட்சியாளர்கள், காவலுக்கு ஆட்களை நியமித்து, அவர்களுக்குப் பல்வேறு  நல்கை(மானியங்)களையும் வழங்கியுள்ளனர். குளத்தைச் சேதப்படுத்துதல், தண்ணீரை மாசுபடுத்துதல் கடும் தண்டனைக்குரியதாக இருந்தது. உடுமலைப் பகுதியைப் பசுமையாக மாற்றிய, ஏழு குளங்களைப் பாதுகாக்க, பாதுகாவலர்களைத் தளி பாளையக்காரர்கள் நியமித்துள்ளனர்.
   இதில், பாதுகாவலர் ஒருவர், நீர் நிலையைச் சிறப்பாகப் பாதுகாத்து வந்ததுடன், அப்பணிக்காக போரிட்டு உயிரிழந்துள்ளார். அவரது நினைவாக உடுமலை பெரியகுளம் கரையில், வீரரின் நினைவைப் போற்றும் வகையில், நடுகல் சிலை வைக்கப்பட்டுத் தற்போதும், அச்சிலை வாளவாடி  சாலையில் காணப்படுகிறது.
 பாதுகாவல் வீரனுக்கும் நீர் நிலைகளுக்கும் அப்போதைய ஆட்சியாளர்கள் அளித்த முதன்மை இதனால், வெளியாகிறது. இச்சிலையின் வரலாறு, முழுவதுமாக வெளிப்படாத நிலையில், சுற்றுப்பகுதியைச் சேர்ந்த மக்கள், குறிப்பிட்ட நாட்களில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

செவ்வாய், 17 டிசம்பர், 2013

அரிவாளாலும் சுத்தியலாலும் பிண ஆய்வு - கோவையில் அதிர்ச்சி




http://img.dinamalar.com/data/gallery/gallerye_002549983_874578.jpg

"சுத்தியலால் அடித்து மண்டையைப் பிளந்து... அரிவாளால் வயிற்றைக் கிழித்து... கோவை அரசு மருத்துவமனையில்,  பிணஆய்வு நடக்கிறது...' என்றால், நம்புவதற்குக் கடினமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கலாம்; ஆனால், அதுதான் உண்மை.

கோவை நகரின் மையப்பகுதியில், 18.5 ஏக்கர் பரப்பிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 92தொகுதிகள், 25க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவப் பிரிவுகள் உள்ளன. கோவை, திருப்பூர், நீலகிரி, சேலம், தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த பலஇலட்சம் ஏழை மக்கள், உயர்மருத்துவம் பெறும் இடமாக, இந்த மருத்துவமனை உள்ளது. சென்னையை அடுத்து, அனைத்து நோய்களுக்கும்  மருத்துவம் அளிப்பதற்கான சிறப்புப் பிரிவுகள் இங்கு உள்ளன.  அன்றாடம் வெளிநோயாளிகள் 6,000 பேரும், உள்நோயாளிகள் 1,200 பேரும் மருத்துவம்  பெறுகின்றனர். சாலை  நேர்ச்சிகளில் இறந்தவர்கள், தீ  நேர்ச்சி, மின்  நேர்ச்சி,  நீரில் மூழ்கி இறந்தவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்கள், கொலை செய்யப்பட்டவர்கள், இறப்பில்  ஐயமுள்ளவர்களின் உடல்கள் என,  நாள்தோறும் ஏறத்தாழ  15 உடல்கள்,  பிண ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
பேரிடர் எச்சரிக்கை: இங்குள்ள பிணவறை, கடந்த 1950 இல் கட்டப்பட்டு, 1952 முதல் செயல்படுகிறது.
பிணவறையின் தரைத்தளம் யாரும் நுழைய முடியாத அளவுக்குப் பாழடைந்துள்ளது. அந்த அறை மழைக்காலத்தில், தண்ணீர் தேங்கும் குளமாக மாறி விடுகிறது. பயன்பாட்டில் உள்ள முதல் தளத்தில்  பிண ஆய்வு நடக்கிறது.  உறவற்ற பிணங்களை வைக்கும் குளிர்ப்பதன வசதியுள்ள பெட்டிகளில் 25  சடலங்களை அடுக்கி வைக்க வசதியுள்ளது. வெளி அறையில் ஆறு  சடலங்கள் வைக்க இடமுள்ளது. பிணவறைக் கட்டடம் 20 ஆண்டுகளுக்கு முன்பே உறுதித் தன்மையை இழந்து விட்டதாகப் பொதுப்பணித்துறை சான்று கொடுத்து, கட்டடத்தைப் பயன்படுத்த வேண்டாம் என எச்சரித்துள்ளது.

கொடூர ஆய்வு: வேறு கட்டடம் இல்லாததால், உறுதித்தன்மை இழந்து, உருக்குலைந்த கட்டடத்திலேயே  பிணஆய்வு நடக்கிறது. இங்கு, மருத்துவக்கருவிகளைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, சுத்தியலால் அடித்து மண்டையைப் பிளந்தும், அரிவாளால் வயிற்றைக் கிழித்தும்  பிணவாய்வு நடத்தப்படுகிறது. பிணவறைக் கட்டடங்களுக்கு மிக அருகிலேயே புதுப்பிக்கப்பட்ட உடனடித் தொகுதி செயல்படுகிறது.  நேர்ச்சி, அவசரப்பண்டுவங்களுக்காக மருத்துவமனைக்கு வரும் அனைத்து நோயாளிகளும் இந்தத தொகுதிக்குக் கொண்டு வரப்பட்டு, முதலுதவி வழங்கப்பட்ட பின்னரே  தொகுதிகளுக்கு  மாற்றப்படுகின்றனர். இந்தத் தொகுதியின் அருகிலேயே  பேணுகையற்ற பிணவறை
இருப்பதால்,  தீயநாற்றம் வீசுகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக அனைத்துப் புதிய மருத்துவ வசதிகளும், சிறப்பு மருத்துவப் பிரிவுகளும் கோவை அரசு மருத்துவமனையில் இருந்தாலும்,  பேரிடர் நிலையிலுள்ள பிணவறை அனைத்துப் பெருமையையும் பாழ்படுத்துகிறது.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், "" பிணவறைக்கான புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய கட்டடம் கட்ட, தற்போது சட்டம் சார்ந்த மருத்துவத்துறை செயல்பட்டு வரும் இடம், பழைய  உ.ம.அ.(ஆர்.எம்.ஓ.) குடியிருப்பு ஆகிய இரு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. புதிய கட்டடம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்வதில் குழப்பம் நீடித்துவருவதால் கட்டுமானப்பணிகள்  தொடங்குவதில்  காலத்தாழ்ச்சி ஏற்படுகிறது'' என்றனர்.

1.82 கோடியில் புதிய பிணவறைக் கட்டடம்: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துணைகண்காணிப்பாளர் ஐசக் மோசசு கூறியதாவது: பழுதடைந்த பிணவறைக் கட்டடத்தை இடித்து, அங்குப் புதுமை வசதிகளுடன் பிணவறை கட்ட அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு, அரசு 1.82 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. 2,500 சதுர அடியில் மூன்று அடுக்கு கட்டடம் கட்டப்படுகிறது. மொத்தம் 50  சடலங்கள் வைக்க வசதி செய்யப்படும். புதுமைமருத்துவக் கருவிகள், மின்னாக்கி, மின்ணேணி ஏந்துகளும் ஏற்படுத்தப்படவுள்ளன. வரும் மார்ச்சுக்குள் புதிய கட்டடங்களுக்கான கட்டுமானப் பணிகள்  தொடங்கும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

செய்தி: கு.பிரசாத்து, தினமலர்

செவ்வாய், 10 டிசம்பர், 2013

தேனூர் புதையல் தங்கக்கட்டிகள் கொற்கைப் பாண்டியர்களுடையதா?

தேனூர் புதையல் தங்கக்கட்டிகள் கொற்கைப் பாண்டியர்களுடையதா?

மதுரை மாவட்டம், தேனூரில், 2009 ஆம் ஆண்டு, செல்வம் என்பவரின் வீட்டருகில் இருந்த முதிர்ந்த மரம் ஒன்று, காற்றில் முறிந்து விழுந்தது. அந்த மரத்தை அகற்றுகையில், வேருக்கு அடியில், மண் கலயத்திற்குள், தங்கப் புதையல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த மண் கலயத்தினுள், 661 கிராம் எடை கொண்ட ஏழு தங்கக் கட்டிகள், 21 உத்திராட்ச மணிகள், மணிகளை இணைக்கும் 32 பொட்டுகள், 5.3 கிராம் எடையுள்ள டாலரும் இருந்தன. அவை, மதுரை கருவூலத்தில், பாதுகாப்பாக வைக்கப்பட்டன. அந்தத் தங்கக்கட்டிகளில் எழுத்துக்கள் இருப்பது தெரிந்தும், யாரும் படிக்க அனுமதிக்கப்படவில்லை. கலெக்டர் எல்.சுப்ரமணியன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தங்கக் கட்டிகளில் உள்ள எழுத்துக்கள், மதுரை அரசு மியூசிய காப்பாட்சியர் பெரியசாமி அவர்களால், 2013 ஆம் ஆண்டு படிக்கப்பட்டு, இந்த ஆண்டு அக்டோபர் மாதம், செய்தியாக வெளியானது. தங்கக் கட்டிகளில், தமிழ்-பிராமி எழுத்து முறையில், "போகுல்குன்றக் கோதை' என்று எழுதப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார். அந்தத் தங்கக் கட்டிகள், வரலாற்று முக்கியம் வாய்ந்தவை.
அந்த ஏழு கட்டிகளின் புகைப்படங்களைப் பெற்று படிக்கும் வாய்ப்பு, எனக்குக் கிடைத்தது. அந்தத் தங்கக்கட்டிகள், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக புதையுண்டு இருந்ததால், அக்கட்டிகளின் மேல், அதிக அளவில் மாசு படிந்திருக்கலாம். புகைப் படங்களை எடுக்கும் முன், சரியான முறையில் சுத்தம் செய்தனரா என்று தெரியவில்லை. சரியான முறையில் சுத்தம் செய்து, மீண்டும் புகைப்படம் எடுத்தால், தவறில்லாமல் படிக்க வாய்ப்புண்டு. கிடைத்தப் புகைப்படங்களை வைத்துக்கொண்டு, பல நாட்கள் ஆய்வு செய்தேன். அந்த ஏழு கட்டிகளில், இரண்டு கட்டிகள் தான், ஆய்வுக்கு உதவியாக இருப்பதை உணர்ந்தேன். அதில், முதல் கட்டியின் புகைப்படத்தைக் கீழே கொடுத்துள்ளேன். இந்தக் கட்டியின் எடை, நீளம் மற்றும் அகலம் அறிய முடியவில்லை. இந்தக் கட்டியில் படிக்க முடிந்த எழுத்துக்களை மட்டும், கீழே உள்ள வரைபடத்தில் கொடுத்துள்ளேன். தெரியாத எழுத்துக்கள் உள்ள இடங்களில், சிறு வட்டக் குறியீடு போட்டுள்ளேன். கீழே கொடுத்துள்ள முறையில், முதல் கட்டியில் காணப்படும் "தமிழ்-பிராமி' எழுத்துக்களைப் படித்துள்ளேன். எழுத்து தெளிவில்லாத இடங்களில், 'ணி' வட்டமிட்டு காட்டியுள்ளேன்.
முதல் ஐந்து எழுத்துக்களை "அரசன்கு' என்று படித்துள்ளேன். "கு' எழுத்திற்கு பிறகு, அடைப்புக்குறி போட்டுள்ளேன். பல தெளிவில்லாத எழுத்துக்கள், படிக்க முடியாத நிலையில் உள்ளன. நடுவில் மீன் சின்னம் உள்ளது. மீன் சின்னத்திற்கு இடப்பக்கம், "மா' என்ற எழுத்தும், அதை அடுத்து தெளிவில்லா எழுத்தும், சின்னத்தின் வலப்பக்கத்தில், "ன்' என்ற எழுத்தும் உள்ளது. இதை, "மாறன்' என்று படிக்க வாய்ப்புண்டு.
"ன்' எழுத்திற்குப் பிறகு சில எழுத்துக்கள் தெரியவில்லை. அத்துடன் அடைப்புக்குறி போட்டு முடித்துள்ளேன். அடைப்புக்குறிக்கு பிறகு, இரண்டு எழுத்துக்கள் உள்ளன. அந்த எழுத்துக்களை, "கொற்' என்று படிக்க முடிகிறது.இரண்டாவது கட்டியில் இந்த, "கொற்' எழுத்துக்களின் தொடர்ச்சி இருக்கிறது. இரண்டாவது கட்டியின் புகைப்படத்தையும் கீழே கொடுத்துள்ளேன். இதன் எடை, நீளம், அகலம் அறிய முடியவில்லை. இந்தக் கட்டியின் வலப்பகுதியில், நான்கு எழுத்துக்கள், படிக்கும் நிலையில் உள்ளன. அந்தக் கட்டியின் வரைபடத்தையும், வலப்பகுதியில் உள்ள நான்கு எழுத்துக்களின் வரைபடத்தையும் கொடுத்துள்ளேன்.
கீழே கொடுத்துள்ள முறையில், இரண்டாவது கட்டியில் காணப்படும் தமிழ்-பிராமி எழுத்துக்களைப் படித்துள்ளேன். இரண்டாவது கட்டியில், "கொய் கோன்' என்று படிக்க முடிகிறது. இரண்டு கட்டிகளில் உள்ள தெளிவான எழுத்துக்களை வைத்துப் பார்க்கும்போது, தமிழ்-பிராமி எழுத்து முறையில், "அரசன்கு கொற்கொய்கோன்' என்று தெரிகிறது. இந்தச் சொற்றொடர், "கொற்கொய்யின் அரசன்' என்று பொருள்படும்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, "தாமிரபருணி' ஆறு, கடலில் கலக்கும் இடத்தில், கொற்கைத் துறைமுகம் இருந்தது. கொற்கையை தலைநகராகக் கொண்டு, பாண்டியர்கள் ஆட்சி செய்தனர். அவர்களுக்கும், மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பாண்டியர்களுக்கும் என்ன உறவின்முறை என்று தெரியவில்லை. "பெரிப்ளஸ்' (கூடஞு கஞுணூடிணீடூதண் ணிஞூ tடஞு உணூtடணூச்ஞுச்ண குஞுச்) என்ற நூலில், சேர நாடு குறித்தும், பாண்டிய நாடு குறித்தும் பல செய்திகளைக் காண முடிகிறது. இந்நூல், கி.பி., 60 ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த நூலின் ஆசிரியர் யார் என்று தெரியவில்லை.
குமரியைக் கடந்து கடல் வழியாகச் செல்லும்போது, கொற்கை (ஓணிடூடுடணிடி) இருப்பதாகவும், அந்த ஊர், பாண்டியர்கள் ஆட்சியின் கீழ் இருப்பதாகவும், அக்கொற்கைக் கடலில், குற்றம் செய்து தண்டிக்கப்பட்டவர்களைப் பயன்படுத்தி, முத்துக் குளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
அங்கு விளைந்த முத்துக்கள், பாண்டிய அரசர்களின் கட்டுப்பாட்டில் இருந்திருக்க வேண்டும். கிரேக்க, ரோமானிய வணிகர்கள், அந்த முத்துக்களை வாங்க, தரமான தங்கக் கட்டிகளைக் கொடுத்திருக்கின்றனர் என்று தெரிகிறது. இந்தத் தங்கக்கட்டிகளில் எழுதப்பட்டச் சொற்களை வைத்து பார்க்கும்போது, இவை, கொற்கை மன்னருக்கு உரியது என்பது உறுதியாகிறது. தங்கக் கட்டியின் நடுவில் இருக்கும், "மீன்' சின்னம், பாண்டியர்களது சின்னம் என்பதும், அது ஆதாரமாகி இருப்பதும், இதில் தெளிவாகத் தெரிகிறது.

டாக்டர்.இரா.கிருட்டிணமூர்த்தி, தலைவர் - தென்னிந்திய நாணயவியல் சங்கம்.

திங்கள், 9 டிசம்பர், 2013

தமிழர்கள் இந்தியரல்லரா? கேரள அரசால் ஏதிலிகளாகும் அட்டப்பாடித் தமிழர்கள் – தினமலர்

attappadi dinamalar
கோவை : கேரள மாநிலம், அட்டப்பாடியில், பல தலைமுறைகளாக வாழும் தமிழர்களின் நிலம் முதலான  சொத்துக்களைக் கவர்ந்து,  ஏதிலிகளாக்கி வெளியேற்றும் முயற்சியில், கேரள மாநில அரசு ஈடுபட்டிருப்பதாகக், குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தின் வடகிழக்கில், மன்னார்க்காடு  வட்டத்தில் உள்ளது, அட்டப்பாடி. மேற்குத்தொடர்ச்சி மலையில், அடர்ந்த வனம்சார்ந்த இப்பகுதி சுற்றுலா இடமாகவும் விளங்குகிறது. கேரள மாநிலத்தின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது, அட்டப்பாடியில்தான் ஆதிவாசிகள்  மிகுதியாக வசிக்கின்றனர்; இதன் எல்லை, ஏறத்தாழ 750 சதுரஅயிரைக்கோல்(கி.மீட்டர்). இங்கு இருளர், முடுகா, குரும்பா இனத்தவர் குறிப்பிட்ட அளவில் உள்ளனர். அட்டப்பாடி மலை உச்சியிலுள்ள மல்லேசுவரன் கோவில் மிகவும்   புகழ் வாய்ந்தது;சிவனிரவின்(சிவராத்திரியின்)போது, விழா களைகட்டும்; கணக்கிலடங்காச் சுற்றுலாப் பயணிகள் கூடுவர். அட்டப்பாடிக்கு இன்னொரு முதன்மையும் உண்டு. இங்கு, தமிழர்கள்  பெருமளவில் வசிக்கின்றனர். தலைமுறை, தலைமுறையாக இங்கு வசிக்கும் தமிழர்களுக்கு வீடு,  வேளாண் நிலம்,  வணிகக் கடைகள் உள்ளன.  அண்மைக்காலமாக, இங்கு வசிக்கும் தமிழர்களின் நிலத்தைக் கவர்ந்து, ஓட்டாண்டியாக்கி, ஊரைவிட்டே விரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது, கேரள அரசு. ஆதிவாசிகளின்
நிலங்கள்,  மனைவணிகக் கொள்ளையரிடம் சிக்கியிருப்பதாகவும், வன எல்லைக்குள் விதிமீறிப் பண்ணை மாளிகைகள், ஆடம்பரச் சொகுசு வளமனைகள் கட்டப்பட்டிருப்பதாகவும், அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கையைத் தொடங்குவதாகவும் கூறித், தமிழர்களின்  வேளாண் நிலம், வீடுகளைக் கவரத் திட்டமிட்டு, முனைப்புடன் செயலாற்றி வருகிறது. மன்னார்க்காடு எல்லைக்குரிய கேரள வருவாய்துறை அதிகாரிகள், அட்டப்பாடிவாழ் தமிழர்களுக்கு சமீபத்தில் ஒரு எச்சரிக்கை  அறிவிக்கை கொடுத்தனர்.
அதில், “ஆதிவாசி நிலங்கள், விதிமீறி பிறருக்கு க் கைமாறியுள்ளன. இவற்றைக் கையகப்படுத்தி, மீண்டும் ஆதிவாசிகளுக்கே வழங்க வேண்டியுள்ளது. எனவே, இந்த  அறிவிப்பு கண்டஏழு  நாளுள்,  பயன்பாட்டை அகற்றிக்கொள்ளவேண்டும். இல்லாவிடில்,  பிணையில் வெளிவரமுடியாதவாறு, தகுந்த சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,” எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கை, அட்டப்பாடி வாழ் தமிழர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. “தலைமுறை, தலைமுறையாக வாழ்ந்துவரும் நிலங்களைக் காலி செய்துவிட்டு, சொத்துக்களை அப்படியே விட்டுவிட்டு,  ஒன்றுமில்லா ஏதிலிகளைப் போன்று எப்படி வெளியேற முடியும்; இதற்கு உடன்பட மாட்டோம்” என, எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் குதிக்க  ஆயத்தமாகி வருகின்றனர். இவர்களுக்குச் சார்பாகத் தமிழக அரசியல் கட்சிகள் களமிறங்கியுள்ளன. ஆனால், நில வெளியேற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகளைக் கேரள அரசு மறுத்திருக்கிறது. ஆதிவாசிகளின் வாழ்விடங்கள் குறித்த நில ஆய்வு மட்டுமே தற்போது நடக்கிறது எனவும் தெரிவிக்கிறது.
இது குறித்து, வால்பாறை  இ.பொ.க. ச.ம.உ., ஆறுமுகம் கூறுகையில், “”அட்டப்பாடியில் வசிக்கும் தமிழர்களை நிலவெளியேற்றம் செய்யக்கூடாது. இதற்கான முயற்சி மேற்கொள்ளும் கேரள அரசை, இ..பொதுவடைமைக்கட்சி, வன்மையாகக் கண்டிக்கிறது. கேரள அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளால், இருமாநில நல்லுறவு பாதிக்கும். அட்டப்பாடியில் இருந்து தமிழர்களை வெளியேற்றுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். அட்டப்பாடி வாழ் தமிழர்களுக்குச் சார்பாகப்  போராட்டம் நடத்துவது குறித்து  நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
கேரளத் தமிழர் சங்கம் அரசுக்குக் கோரிக்கை: கேரள வாழ் தமிழர்கள் பாதுகாப்புசுசங்கத்தின் பொதுச்செயலாளர் பேச்சிமுத்து கூறுகையில், “”இந்தச் சிக்கலைத் தமிழர்கள் சிக்கலாகவே பார்க்கக் கூடாது;உழவர்கள்  சிக்கலாகவே பார்க்க வேண்டும். ஏறத்தாழ 100 ஆண்டுகளாகத், தமிழர்கள் அட்டப்பாடியில் வசிக்கிறார்கள். நான்கு, ஐந்து பஞ்சாயத்துகளின் மக்கள் தொகையில் 40 முதல் 80 % மக்கள் தமிழர்கள். இவர்களுக்குரிய  குமுகாய, பொருளாதாரப் பாதுகாப்பைக், கேரள அரசு வழங்க வேண்டும்; நிலத்தைவிட்டு வெளியேற்றக்கூடாது,” என்றார்.

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

கருத்தரங்கக் கூடமாகப் புது சட்டசபை மாற்றம்

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_83049920131019234453.jpg

கருத்தரங்க க் கூடமாக ப் புது சட்டசபை மாற்றம்: சன.17இல் நவீன மருத்துவமனை திறப்பு?



சென்னை அண்ணா சாலையில் கட்டப்பட்டுள்ள புதிய தலைமை செயலகத்தை, மருத்துவமனையாக மாற்றும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. ஜனவரி 17ம் தேதி எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் அன்று, இந்த கட்டடத்தில் அதிநவீன மருத்துவமனையை திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. புது தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபை கட்டடம், அதிநவீன கருத்தரங்க கூடமாக மாற்றப்பட்டுள்ளது. சட்டமேலவை கட்டடம் தற்போது, மருத்துவ ஆய்வரங்கமாக மாற்றப்பட்டு உள்ளது.
புது தலைமைச் செயலகத்தை, பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றும் இந்த பணி, ஜனவரி மாதத்தில் இருந்து நடந்து வருகிறது. பொதுப்பணித் துறை முதன்மை தலைமை பொறியாளர், கோபாலகிருஷ்ணன் தலைமையில், ஏழு உதவி செயற்பொறியாளர் கொண்ட தனிக்குழு, அங்கு முகாமிட்டு, கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது.



வார்டுகள்:

ஒவ்வொரு தளத்துக்கும், ஒரு உதவி செயற்பொறியாளர் வீதம், நியமிக்கப்பட்டுள்ளனர். பெரியதாக கட்டப்பட்ட அறைகள், இரண்டு வார்டுகளாக மாற்றப்படுகின்றன. ஒவ்வொரு தளத்தில் இருந்தும், நோயாளிகளை படுக்கையில் அழைத்துச் செல்ல, சாய்தளம் அமைக்கும் பணி, இரண்டு பக்கங்களிலும், தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது, மூன்று தளங்கள் வரை அமைக்கும் பணிகள் முடிந்து, நான்காம் தளததில் இருந்து, ஐந்தாம் தளத்துக்கு சாய்தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஏற்கனவே, மேலவைக்காக கட்டப்பட்ட கட்டடம், எந்த மாற்றமும் செய்யப்படாமல், சிறப்பு ஆய்வரங்க கட்டடமாகவும், சட்டசபை கட்டடம், கருத்தரங்கு கூட அரங்கமாகவும் மாற்றப்பட்டுள்ளது. பல்நோக்கு மருத்துவமனையில், பேராசிரியர், துறை தலைவர்களுக்கு, 90 கழிப்பறைகள் வீதம், மொத்தமாக, 560 கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன. அனைத்து வார்டுகளிலும், முழுவதுமாக, 'ஏசி' அமைக்கும் பணி, முடியும் தறுவாயில் உள்ளது. அதேபோல், தரைத்தளம் மற்றும் முதல் தளம், புறநோயாளிகள் பிரிவாகவும், இரண்டாவது, மூன்றாவது தளங்கள் நிர்வாகம் மற்றும் அறுவை சிகிச்சை அறைகளாகவும், நான்காம் தளம், அவசர சிகிச்சை பிரிவாகவும், ஐந்து, ஆறாவது தளங்கள் உள்நோயாளிகள் சிகிச்சை வார்டுகளாகவும் மாற்றப்பட்டு வருகின்றன.

500 பேர்:

நவம்பர் மாத இறுதிக்குள் இப்பணிகளை முடிக்க, பொதுப்பணித் துறை திட்டமிட்டு உள்ளது. பத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்களோடு, தினமும், 500க்கும் மேற்பட்ட தொழிலாளர், கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நவம்பர் இறுதிக்குள், கட்டுமானப் பணிகளை முடித்து, அதன் பிறகு, மருத்துவமனைக்கான உபகரணங்கள் அமைத்து, எம்.ஜி.ஆர்., பிறந்த நாளான ஜனவரி, 17ல், பல்நோக்கு மருத்துவமனை செயல்படத் துவங்கும் என, தெரிகிறது.

- நமது செய்தியாளர், தினமலர் -

ஓவிய வடிவில் திருக்குறள் : ஓவியர் நடராசன்

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_830349.jpg

ஓவிய வடிவில் திருக்குறள் தந்துள்ள ஓவியர் நடராசன்
உலகின் மூத்த, இனிய, ஒப்புவமையற்ற மொழியான தமிழ் மொழியில் எண்ணற்ற காப்பியங்கள் இயற்றப்பட்டுள்ளன. இவைகளில் தனிச்சிறப்பு கொண்டது திருக்குறள்.
வாழ்க்கைக்கு தேவையான அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பாலையும் 1330 குறளில் வடித்திட்ட வள்ளுவனின் வார்த்தைகள் இன்றைய காலகட்டத்திற்கும் ஒத்துவருவதுதான் மிகப் பெரிய விஷயம்.
இதன் காரணமாகவே திருக்குறள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உலக பொதுமறையாக போற்றப்படுகிறது. இரண்டாயிரம் வருடங்களை தாண்டியும் இப்போதும் திருக்குறளுக்கு உரை பலரும் எழுதிக் கொண்டுதான் இருக்கின்றனர்.
ஆனால் ஒரே ஒருவர் மட்டும் 1330 குறளுக்கும் ஏற்ப ஓவியம் வரைந்துள்ளார்.
அவர் பெயர் நடராஜன், திருப்பூர் பக்கம் உள்ள நல்லூர் விஜயாபுரத்தில் குடியிருக்கும் இவர் ஒரு நல்லாசிரியர் விருது பெற்ற ஓவிய ஆசிரியராவார். இப்போது பணி ஓய்வு பெற்றுவிட்டாலும் ஓவியப்பணியில் இருந்து ஓய்வு பெறாமல் எப்போதும் தூரிகையும், கையுமாகவே இருப்பவர். பித்தன் சித்ர கூடம் அமைத்து இலவசமாக ஓவிய பயிற்சியளித்து வருபவர்.
சிறு வயது முதலே இயற்கை காட்சிகள், சாமி படங்கள், தேசிய தலைவர்கள், மனித நேயமிக்கவர்களை ஓவியங்களாக வரைந்தவர், யாரும் செய்திடாத ஒரு சாதனையை படைத்திட எண்ணினார்.
அப்போதுதான் இவரை பெரிதும் ஈர்த்திட்ட திருக்குறளை ஏன் ஓவியமாக வரைந்திடக்கூடாது என்று முடிவு செய்து களமிறங்கினார். ஒவ்வொரு குறளுக்கும் ஏ3 பேப்பரில் தத்ரூபமாக குறளுக்கு ஏற்ப ஓவியம் வரைய ஆரம்பித்தார்.
இது பற்றி ஓவியர் நடராஜன் கூறுகையில், "அதிகாலை மூன்று மணிக்கு ஓவியம் வரைய ஆரம்பித்தேன். குறளின் அர்த்தத்தை நன்றாக உள்வாங்கி அதே நேரத்தில் எளிமைப்படுத்தும் விதத்தில் வரைந்தேன். வரைந்தேன் என்பதை விட வள்ளுவரோடு ஓரு வருட காலத்திற்கு மேல் வாழ்ந்தேன் என்றே சொல்லலாம். அதிலும் 250 குறள் மட்டுமே உள்ள இன்பத்து பாலை வரையும்போது அதிகம் கவனம் எடுத்துக்கொண்டேன் காரணம் கோடு கொஞ்சம் மாறினாலும் தவறான அர்த்தத்தையும் கொடுத்து விடுமே. ஆனால் எல்லாம் நல்லபடியாகவே முடிந்தது, காரணம் முன்பே சொன்னது போல வள்ளுவர் துணை நின்றதால்'' என்று சந்தோஷத்துடன் குறிப்பிட்டார்.
அகர முதல எழுத்தெல்லாம் எனும் முதல் குறளில் துவங்கி 1330 குறளுக்கும் ஓவியம் வரைந்து முடித்திட்ட போது அது 13 தொகுதிகளை கொண்டிருந்தது. இதற்கு திருக்குறளோவிய மத நல்லிணக்க தேசிய ஒருமைப்பாட்டு ஓவியப்பேழை' என்ற தலைப்பிட்டுள்ளார்.
இந்த குறளோவிய பேழையை போட்டோ பிரின்ட் மூலமாக கையடக்க புத்தகமாகவும், சிடியாகவும் மாற்றி முதல்வர் மூலமாக வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளார். இந்த முயற்சி வெற்றி பெறுவதை அடுத்து பாரதியார் கவிதைகள் துவங்கி இனியவை நாற்பது வரையிலான பல்வேறு தமிழ இலக்கியங்களையும் ஓவியமாக படைத்திட எண்ணியுள்ளார்.
இவரது எண்ணமும், எழுத்தோவியமும் வெற்றி பெறட்டும்.
இவருடன் தொடர்பு கொள்ள: 
99762 55579, 0421-2375124.
குறளோவியங்களை பார்க்க சிவப்பு பட்டையில் உள்ள போட்டோ கேலரி பகுதியை கிளிக் செய்திடவும்.
- எல்.முருகராசு






சனி, 19 அக்டோபர், 2013

மூளைச்சாவு அடைந்த புதுச்சேரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_82989920131019003229.jpg

விபத்தில் அடிபட்டு மூளைச்சாவு அடைந்த 
புதுச்சேரி மாணவரின் உடல் உறுப்பு தானம்

சென்னை:விபத்தில் காயமடைந்த புதுச்சேரி பொறியியல் மாணவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.புதுச்சேரி, தேங்காய்திட்டைச் சேர்ந்த புகழேந்தியின் மகன் கபில்தேவ், 19. புதுச்சேரி கல்லூரியில், இரண்டாம் இண்டு இன்ஜினியரிங் படித்து வந்தார். 12ம் தேதி, தேர்வு எழுதி விட்டு, வில்லியனூர் பைபாஸ் சாலை வழியாக, டூ வீலரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.அப்போது, லாரி மோதியதில் பலத்த காயமடைந்து, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் முன்னேற்றமின்றி, நேற்று மூளைச்சாவு நிலையை அடைந்ததாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, கபில்தேவின் உடல் உறுப்புக்களை உறவினர்கள் தானம் செய்துள்ளனர். இதன்படி, கபில்தேவின், இரண்டு கண்கள், இரண்டு கிட்னி, கணையம் உள்ளிட்ட, ஏழு உடல் உறுப்புகள் தானம் செயப்பட்டுள்ளன. இதுகுறித்து, கபில்தேவின் அண்ணன் வினோத் கூறுகையில், ""இன்ஜினியராகி, வெளிநாட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டான். அவன் ஆசை நிறைவேறவில்லை. அவனது உடல் உறுப்புக்களாவது, ஏழைகளுக்கு பயன்படட்டும் என, தானம் செய்துள்ளோம். மற்றவர்கள் மூலம் என் தம்பி உயிர் வாழ்வான்,'' என்றார்.

வெள்ளி, 18 அக்டோபர், 2013

அரசு வேலை பெற மலையாளம் கட்டாயம்

அரசு வேலை பெற மலையாளம் அவசியம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் அரசு வேலை பெற மலையாள மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முதல்வர் உம்மன் சாண்டி தலைமையில் இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவின்படி, 10ம் வகுப்பு அல்லது டிகிரி வரை மலையாளம் படிக்காத விண்ணப்பதாரர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களே அரசு வேலையில் சேர தகுதி படைத்தவர்களாவர். அதே நேரத்தில், தமிழ் மற்றும் கன்னடம் மொழி படித்தவர்கள், வேலைக்கு சேர்ந்த பத்து ஆண்டுகளுக்குள் இந்த தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

வியாழன், 17 அக்டோபர், 2013

ஒரே மேடையில் தோன்றிய ஒன்பது திருக்குறள் செல்வர்கள்

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_828284.jpg

ஒரே மேடையில் தோன்றிய
 ஒன்பது திருக்குறள் செல்வர்கள்



காரைக்குடி:காரைக்குடியில்,வள்ளுவர் பேரவை நடத்திய நிகழ்ச்சியில், ஒன்பது திருக்குறள் செல்வர்களுக்கு விருது வழங்கப்பட்டது. தமிழ் வளர்ச்சிதுறை சார்பில், திருக்குறளின் 1330 குறள்களையும், எப்படி கேட்டாலும், அடி பிறழாமல், ஒப்பிப்பவர் "திருக்குறள் செல்வர்' விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களுக்கு, தமிழக அரசால் விருதும், ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்படுகிறது.
இவ்வாறு விருது பெற்ற, 10 பேருக்கு, வள்ளுவர் பேரவை சார்பில், விருது வழங்கும் விழா, காரைக்குடி கண்ண தாசன் மணிமண்டபத்தில் நடந்தது. இதில், தற்போது லயோலா கல்லூரியில் படிக்கும் மாணவர் திலீபன், கலைவாணி பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் நாச்சாள், சுவாதி, சிவரஞ்சனி, ஒன்பதாம் வகுப்பு மாணவி பானுப்பிரியா,10ம் வகுப்பு ஸ்ரீவர்ஷா, ஐந்தாம் வகுப்பு மாணவி சரோஜா, ராஜராஜன் இன்ஜி., கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவி ராம அபிராமி, மதுரை சட்டக்கல்லூரியில் படிக்கும் மணிமேகலை ஆகியோர் ஒரே மேடையில் தோன்றி விருதுகளை பெற்றனர். திருச்சியில் பிளஸ் 1 படிக்கும், நிவேதினி கென்சியா மட்டும் பங்கேற்கவில்லை. எழுத்தாளர் சங்க மாவட்ட தலைவர் அய்க்கண், கிட் அண்ட் கிம் டெக்னிக்கல் இயக்குனர் ராமகிருஷ்ணன் விருதுகளை வழங்கினர். முன்னதாக அதன் தலைவர் செயம்கொண்டான் வரவேற்றார். வள்ளுவர் பேரவை கவுரவ ஆலோசகர் சேவு முத்துக்குமார், ரோட்டரி ஹெரிடேஜ் சங்க தலைவர் முத்துக்குமார், வள்ளுவர் பேரவை செயலாளர் பிரகாஷ் மணிமாறன்,துணை தலைவர் ஸ்டீபன் மைக்கேல்ராஜ் பங்கேற்றனர்.

புதன், 16 அக்டோபர், 2013

இளம் எழுத்தாளர் புக்கர் பரிசுக்குத் தேர்வு

இளம் எழுத்தாளர் புக்கர் பரிசுக்கு த் தேர்வு

இலண்டன்: 2014- ஆம் ஆண்டிற்கான புக்கர் பரிசுக்கு இளம் பெண் எழுத்தாளர் இலினோர் காட்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆண்டு தோறும் இலக்கியத்திற்கான புகழ்பெற்ற புக்கர், பரிசினை பிரிட்டனைச் சேர்ந்த புக்கர் பவுண்டேசன் அமைப்பு வழங்கி வருகிறது. கனடா வாழ் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த இலினோர் காட்டன் (28), தனது படைப்பிற்காக இப்பரிசினை பெறுகிறார். இதன் மூலம் புக்கர் பரிசு பெறும் இளம் வயது எழுத்தாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

சுற்றுலா வந்தபோது இறந்த கணவரின் கண், உடலைத் தானம் செய்த மனைவி

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_82757820131016001605.jpg

சுற்றுலா வந்தபோது இறந்த கணவரின் கண், உடலை த் தானம் செய்த மனைவி
மதுரை : கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த போது, மாரடைப்பால் இறந்த கணவரின் கண்களை, திண்டுக்கல் மருத்துவமனையிலும், உடலை பெங்களூரு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், தானம் செய்தார் மனைவி.

பெங்களூர் சாமந்த்நகரை ச் சேர்ந்தவர் உமேசுகுமார் ராவ், 53. விமானப் படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பின், பெங்களூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தார். இவரது மனைவி சிரீலதா, ஆசிரியை. குடும்பத்துடன் நேற்று முன்தினம், கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர். நள்ளிரவு, 2:00 மணிக்கு, உமேஷ் குமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தபோது, அவர் இறந்தது உறுதி செய்யப்பட்டது.

அழுது புரண்ட குடும்பத்தினர், அந்த இக்கட்டான நேரத்திலும், இறந்தவரின் கண்களை தானம் செய்ய விரும்பினர். இறந்த, 6:00 மணி நேரத்திற்குள் கண்களை தானம் செய்ய வேண்டும் என்பதால், அதற்கான வசதியுள்ள மருத்துவமனை குறித்து விசாரித்தனர். அவர்களுக்கு, திண்டுக்கல் அரவிந்த் கண்மருத்துவமனை குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, உடனடியாக இறந்த உடலுடன், திண்டுக்கல் சென்றனர். அங்கு அவகாச நேரத்திற்கு, அரைமணி நேரத்திற்கு முன், அவரது கண்கள் தானம் பெறப்பட்டன. இதன்பின் உடலுடன் பெங்களூரு சென்றனர். உடலை பெங்களூரு அம்பேத்கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தானம் செய்ததாக, அரவிந்த் மருத்துவமனை மக்கள் தொடர்பு அதிகாரி ராமநாதன் தெரிவித்தார்.
Click Here

வற்றியிராயிருப்பு மாணவனுக்குத் தேசிய விருது

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_82765720131016013454.jpg

வத்திராயிருப்பு மாணவனுக்கு த் தேசிய விருது


மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப கழகம் மற்றும் அதன் இணை நிறுவனமான தேசிய அறிவியல் கண்டுபிடிப்பு நிறுவனத்தின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும், பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகள் தேர்வு செய்யப்பட்டு, ஜனாதிபதியால் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விருதுக்காக, இந்தியா முழுவதும் 20,836 கண்டுபிடிப்புகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவன் டெனித் ஆதித்யா, "அட்ஜஸ்டபிள் எலக்ட்ரிசிட்டி எக்ஸ்டென்சன் போர்டு' என்ற மின்சாதனத்தை கண்டுபிடித்து, சமர்ப்பித்திருந்தார். விருதுக்கான தேர்வு, தேர்வு பெற்ற கண்டுபிடிப்புகளும், அவர்களுக்கான விருதும், நேற்று (அக்.,15) அறிவிக்கப்பட்டது. 38 கண்டுபிடிப்புகள் தேர்வு செய்யப்பட்டதில், வத்திராயிருப்பு மாணவன் டெனித் ஆதித்யாவின் மின்சாதனம், சிறந்த தேசிய கண்டுபிடிப்பாக தேர்வு செய்யப்பட்டு, பரிசும் அறிவிக்கப்பட்டது. தேர்வு பெற்றவர்களுக்கு, நவம்பர் 19 ல் ,அகமதாபாத் ஐ.ஐ.எம். மையத்தில் நடக்கும் விழவில், விருதுகளும், கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையும் வழங்கப்பட உள்ளது. மாணவர் கண்டுபிடிப்பான, "அட்ஜஸ்டபிள் எலக்ட்ரிசிட்டி எக்ஸ்டென்சன் போர்டு' ஒரு வகை பிளக்பாய்ண்ட் . இதில், பேன், மிக்சி, கிரைண்டர், ஓவன் உட்பட அனைத்து அளவு பிளக்குகளையும், இந்த ஒரே சாதனத்தில் பொருத்திக்கொள்ளலாம். அதிகபட்சமாக 17 க்கு மேற்பட்ட பிளக்குகளை பொருத்தலாம். உலக அளவில் 156 நாடுகளில், 8 விதமான பிளக்குகள் நடைமுறையில் உள்ளன. ஒரு நாட்டில் உள்ள பிளக்குகளை, அடுத்த நாட்டில் உள்ள பிளக்குகளில் பொருத்த முடியாது. ஆனால், இந்த மின் சாதனத்தில், உலகத்தில் உள்ள 8 விதமான பிளக்குகளையும், இதில் பொருத்தி, மின்சாரம் பெற்றுக்கொள்ள முடியும்.