வியாழன், 18 அக்டோபர், 2012

சென்னையில் 2 மணி நேர மின்வெட்டு இன்று முதல்




தமிழகத்தின் பிற மாவட்டங்களில், மின்வெட்டு நேரம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் இறங்கியுள்ளனர். சென்னையில் இரண்டு மணி நேர தடையை அமல்படுத்துவதன் மூலம், தமிழகத்தின் பிற பகுதிகளில், மின் வெட்டு நேரத்தை சிறிது தளர்த்த, அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில், சென்னை தவிர பிற பகுதிகளில், 14 முதல், 18 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளது. வெளி மாநிலத்தில் இருந்து, மின்சாரம் வாங்க அனுமதி கிடைத்த போதும், மின் தொகுப்பில் ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாக, போதுமான மின்சாரத்தை பெற முடியவில்லை.நேற்றைய நிலவரப்படி, 7,721 மெகாவாட் அளவிற்கு மட்டுமே, மின்சாரம் கிடைத்துள்ளது. இருக்கும் மின்சாரத்தை பயன்படுத்தி, சென்னைக்கும் மற்ற பகுதிகளுக்கும் மின்வாரியம், மின்சாரத்தை வழங்கி வருகிறது.மின் வெட்டு நேரம் அதிகரித்துள்ளதை எதிர்த்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழில் அமைப்பினரும் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், தமிழகத்தின் மின் நிலைமை குறித்து ஆய்வு செய்வதற்கான கூட்டம், முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நேற்று நடந்தது. அமைச்சர்கள் பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், முனுசாமி, வைத்திலிங்கம், தலைமைச் செயலர், செயலர்கள், மின்வாரிய
Description: http://img.dinamalar.com/data/uploads/V1_16380.jpeg
தலைவர் ஞானதேசிகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழகத்தில் நிலவும் மின் தட்டுப்பாடு குறித்தும், இதை போக்குவதற்கு எடுக்கப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்தும், பணிகள் நடந்து வரும், மின் திட்டங்களை செயல்பாட்டிற்கு கொண்டுவருவது குறித்தும், கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.கூட்ட முடிவில், மின் தட்டுப்பாட்டை விரைவில் போக்கும் வகையில், மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தலைமையில், 10 பேர் அடங்கிய குழு ஒன்றை அமைத்து, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இக்குழுவில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் முனுசாமி,தலைமைச் செயலர் தேபேந்திரநாத் சாரங்கி, நகராட்சி நிர்வாகத் துறை செயலர் ஷீலா பாலகிருஷ்ணன், மின்வாரியத் தலைவர் ஞானதேசிகன் ஆகியோர் உள்ளனர். எரிசக்தித்துறை செயலர் ரமேஷ் குமார் கன்னா, உள்துறை செயலர் ராஜகோபால், நிதித்துறை செயலர் சண்முகம், முதல்வரின், 2ம் நிலை செயலர் ராம்மோகன் ராவ், வேளாண்மை துறை செயலர் சந்தீப் சக்சேனா ஆகியோரும் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இக்குழு, ஒவ்வொரு வாரமும், திங்கள் கிழமையில் கூடி, தமிழகத்தின் மின் நிலைமையை ஆய்வு செய்து, முதல்வரிடம் அறிக்கை அளிக்கும். அறிக்கையை பொறுத்து, முதல்வர் உத்தரவுப்படி, அடுத்தக்கட்ட நடவடிக்கையை, குழு பரிந்துரைப்படி மின்வாரியம்
Advertisement
எடுக்கும் என தெரிகிறது.இதற்கிடையில், தமிழக மின் நிலைமையை சமாளிக்க, சென்னையில் தற்போதுள்ள, மின்வெட்டு நேரத்தை இரண்டு மணி நேரமாக அதிகரிக்க மின்வாரியம் முடிவெடுத்து, இன்று முதல் அமல்படுத்தியுள்ளது.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு விபரம்: சென்னை நகருக்கும், மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு இடையில், மின்தடை நேரங்களில், அதிக வித்தியாசம் இருப்பதால், சென்னை மாநகர் மற்றும் புறநகர்பகுதிகளில், அமல்படுத்தப்பட்டு வரும் ஒரு மணி நேர மின்தடை, இரண்டு மணி நேரமாக உயர்த்த முடிவெடுக்கப்பட்டு, இன்று முதல் அமல்படுத்தப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
500 மெகாவாட் கிடைக்கும்:
சென்னை நகரில், அன்றாட மொத்த உற்பத்தியில், 25 சதவீதம் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. ஏற்கனவே, மாலை, 6:00 மணி முதல், நட்சத்திர ஓட்டல்கள், உணவகங்கள், தனியார் நிறுவனங்களை ஜெனரேட்டர்களை பயன்படுத்தும்படி மின்வாரியம் கேட்டுக் கொண்டது. இதன் மூலம், 300 மெகாவாட் வரையில் மின்சாரம் சேமிக்கப்படுகிறது. தற்போது, இரண்டு மணிநேரம் மின் வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளதால், கூடுதலாக, தினசரி, 200 மெகாவாட் வரை மின்சாரம் சேமிக்கப்படும் என்று கூறப்படுகிறது.- தினமலர் செய்தியாளர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக