ஞாயிறு, 14 அக்டோபர், 2012

களக்காடு பகுதியில் இருமுறை நில அதிர்வு

களக்காடு பகுதியில் இருமுறை நில அதிர்வு

First Published : 14 October 2012 05:14 AM IST
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு மற்றும் அதன் சுற்று வட்டாரக் கிராமங்களில் சனிக்கிழமை பிற்பகல் அடுத்தடுத்து இரண்டு முறை லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி வீதிக்கு வந்தனர்.
களக்காடு, தம்பித்தோப்பு, கருவேலன்குளம், கீழப்பத்தை, மஞ்சுவிளை, பத்மனேரி,  சிதம்பரபுரம், படலையார்குளம் உள்ளிட்ட சுற்று வட்டாரக் கிராமங்களில் பிற்பகல் 3.32 மணி முதல் 3.35 வரை 3 நிமிடங்களுக்குள் இருமுறை லேசான நில அதிர்வு ஏற்பட்டதை மக்கள் உணர்ந்துள்ளனர்.
நில அதிர்வால் வீடுகளில் இருந்த பொருள்கள் கீழே விழுந்தன. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறினர். நில அதிர்வு ஏற்பட்டதை போலீஸôரும் உறுதி செய்தனர்.
இது குறித்து கீழப்பத்தையைச் சேர்ந்த த.ஐயப்பன் கூறுகையில், சுமார் 3.30 மணிக்கு குண்டு வெடித்ததுபோல சப்தம் கேட்டது. பூமியில் அதிர்வு ஏற்பட்டு, எனக்கு லேசான  தலைசுற்றல் ஏற்பட்டது. வீடுகளில் பாத்திரங்கள் உருண்டன என்றார்.
பத்மனேரியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் கூறுகையில், நான் வீட்டில் தூங்கிக்  கொண்டிருந்தபோது திடீரென ஏதோ இடிந்து விழுந்ததைப் போன்ற பலத்த சப்தம்  கேட்டது என்றார்.
இந்த நில அதிர்வால் களக்காடு நினைத்ததை முடித்த விநாயகர் கோவில் அருகேயுள்ள உணவகத்தின் சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக