புதன், 17 அக்டோபர், 2012

நேர்மைக்குப் பரிசா? பிழைக்கத் தெரியாதவருக்குப் பாடமா? சோனியா வதேராவுடன் மோதியவருக்கு அரசு தந்தது.




சண்டிகார்:காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா, டி.எல்.எப்., ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு, 3.5 ஏக்கர் நிலம் விற்பனை செய்ததை, அரியானா மாநில ஐ.ஏ.எஸ்., அதிகாரி, அதிரடியாக ரத்து செய்த விவகாரம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக, அந்த அதிகாரி புகார் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் ஆளும், அரியானா மாநிலத்தைச் சேர்ந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, அசோக் கெம்கா. நில ஆவணங்களை கையாளும் பிரிவின், இயக்குனராக பணியாற்றி வந்தார். கடந்த வாரம், திடீரென அவரை, விதை மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனராக, பணிமாற்றம் செய்து, மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இதையடுத்து, அரியானா தலைமைச் செயலர், பி.கே.சவுத்ரிக்கு, அசோக் கெம்தா கடிதம் எழுதினார்.
அதில், கூறப்பட்டிருந்ததாவது:




இதுவரை, 43 முறை என்னை பணிமாற்றம் செய்துள்ளனர். கடைசியாக, நில ஆவணங்களை கையாளும் பிரிவில் பணியாற்றினேன். அப்போது, உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலங்கள், முறைகேடாக, ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட தகவல்களை, வெளிச்சத்துக்கு கொண்டு வந்தேன். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டேன்.இதனால், ஆத்திரமடைந்த ஆட்சியாளர்கள், விதை மேம்பாட்டு கழகத்துக்கு, என்னை பணிமாற்றம் செய்துள்ளனர்.இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியிருந்தார்.
காங்., தலைவர் சோனியாவின் மருமகன், ராபர்ட் வதேராவுக்கும், டி.எல்.எப்., ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கும் இடையே நடந்த, நிலப் பரிமாற்ற விவகாரம், பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அசோக் கெம்காவின் கடிதம், அந்த பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நில ஆவணங்களை கையாளும் பிரிவிலிருந்து, அசோக் கெம்கா நேற்று முன்தினம் வெளியேறினார். அதற்கு முன், ராபர்ட் வதேராவின் நிறுவனம், டி.எல்.எப்., நிறுவனத்துக்கு, நிலம் விற்பனை செய்ததை, அதிரடியாக அவர் ரத்து செய்தார். அந்த நிலத்தின் மதிப்பு, 58 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அசோக் கெம்கா நேற்று கூறியதாவது:



முறைகேடு நடக்கிறது என்று தெரிந்தும், நடவடிக்கை எடுக்காமல், அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, என்னால் முடியாது. ராபர்ட் வதேராவின் நிறுவனம், டி.எல்.எப்., நிறுவனத்துக்கு
Description: http://img.dinamalar.com/data/uploads/V1_16366.jpeg
நிலம் விற்பனை செய்ததை ரத்து செய்த, என்னுடைய முடிவு சரியானதே. இதற்கு சில ஆதாரங்களை தெரிவிக்க விரும்புகிறேன். வதேராவுக்கு சொந்தமான, "ஸ்கை லைட் ஹாஸ்பிடாலிட்டி' நிறுவனம், 2008 பிப்ரவரியில், அரியானாவின் மானேசர் என்ற இடத்தில், 7.5 கோடி ரூபாய்க்கு, 3.5 ஏக்கர் நிலத்தை வாங்கியது. அடுத்த நாளே, இந்த நிலம் தொடர்பான, வருவாய் துறை ஆவணங்கள் உட்பட, அனைத்து ஆவணங்களும், ராபர்ட் வதேரா நிறுவனத்தின் பெயரில் மாற்றப்பட்டன .அடுத்த ஒரு மாதத்திற்குள், அந்த நிலத்தில், வீடுகள் கட்டும் திட்டத்தை செயல்படுத்த, வதேரா நிறுவனத்துக்கு, அரியானா அரசு ஒப்புதல் அளித்தது. இதனால், அடுத்த மூன்று மாதங்களில் அந்தநிலத்தின் மதிப்பு உயர்ந்தது.இதைத் தொடர்ந்து, அதே ஆண்டு ஜூனில், அந்த நிலம், ராபர்ட் வதேராவின் நிறுவனத்திடமிருந்து, டி.எல்.எப்., நிறுவனத்துக்கு, 58 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன்மூலம், மூன்றே மாதங்களில், ராபர்ட் வதேராவின் நிறுவனத்துக்கு, 51 கோடி ரூபாய் லாபம் கிடைத்தது.டி.எல்.எப்., நிறுவனம், இந்த தொகையை, தவணை முறையில் அளித்தது. இந்த நிலம், முறைப்படி, இந்தாண்டு ஜூனில் தான், டி.எல்.எப்., நிறுவனத்தின் கைகளுக்கு வந்தது.

இந்த நிலப் பரிமாற்றம், சட்ட விரோதமாக நடந்துள்ளது. வரி, முத்திரை தாள் கட்டணம் ஆகியவற்றுக்கு பணம் செலுத்துவதை தவிர்க்கும் வகையில், நடப்பு சந்தை விலையை விட, குறைந்த விலையில், இந்த நிலத்தை பத்திர பதிவு செய்துள்ளனர். இந்த சட்ட விரோத நிலப் பரிமாற்றம் குறித்து விசாரிக்க உத்தரவிட்டதற்காகவும், பரிமாற்றத்தை ரத்து செய்ததற்காகவும், என்னை பணிமாற்றம் செய்துள்ளனர். என் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது; கொலை மிரட்டல்கள் வருகின்றன.நேர்மையான அதிகாரியான என்னை, பணிமாற்றம் செய்தது, மனித தன்மையற்ற செயல். அரசின் செயல்பாடு, என்னுடைய பணி ஆர்வத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளது.இவ்வாறு அசோக் கெம்கா கூறினார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த, அரியானா முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, பூபிந்தர் சிங் ஹூடா, ""அசோக் கெம்காவின் பணிமாற்றம், நிர்வாக வசதிக்காக செய்யப்பட்டது. அவரை தண்டிப்பதற்காகவோ, பழிவாங்குவதற்காகவோ, நடந்த மாற்றமல்ல,''என்றார்.
Advertisement
அரியானா அரசு மறுப்பு:


அசோக் கெம்காவின் குற்றச்சாட்டை, அரியானா அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. அரியானா தலைமைச் செயலர், பி.கே.சவுத்ரி கூறியதாவது:அசோக் கெம்காவை, பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்துடனோ, வேறு எந்த தீயநோக்கத்துடனோ, அவரை பணிமாற்றம் செய்யவில்லை. அரியானா ஐகோர்ட் உத்தரவுப்படி தான், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; அவரை துன்புறுத்தும் எண்ணமும் இல்லை.நில விற்பனை விவகாரத்தில், விதிமுறை மீறப்பட்டதா என்பது குறித்து விசாரிக்க, கூடுதல் தலைமைச் செயலர் தலைமையில், மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்படும். இந்த குழு, ஒரு மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்.இவ்வாறு பி.கே.சவுத்ரி கூறினார்.
""
ராபர்ட் வதேராவின் சட்ட விரோத நிலப் பரிமாற்றம் குறித்து, விசாரிக்க உத்தரவிட்டதற்காக, ஐ.ஏ.எஸ்., அதிகாரியை, அரியானா மாநில காங்., அரசு, பணிமாற்றம் செய்துள்ளது. இதை ஏற்க முடியாது. இதுபற்றி, நாட்டு மக்களுக்கு, அரியானா முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும்.
-
அரவிந்த் கெஜ்ரிவால்,ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் உறுப்பினர்.
""
காங்கிரஸ் கட்சியினர், அடுத்தடுத்த ஊழல் குற்றச்சாட்டுகளால், நொந்து நூலாகியுள்ளனர். அதனால் தான், நேர்மையான ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு எதிராக, நடவடிக்கை எடுத்துள்ளனர். வதேராவின் நிலப் பரிமாற்றம் விவகாரம் குறித்து, சுதந்திரமான, நேர்மையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
-
பிரகாஷ் ஜாவேத்கர்,பா.ஜ., செய்தி தொடர்பாளர்.
 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


வதேரா நில பேரம்: அதிகாரி அதிரடி இடமாற்றம்

First Published : 17 October 2012 04:25 AM IST
காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா, டி.எல்.எஃப். நிறுவனத்துக்கு 3.5 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்தது குறித்து விசாரிக்க உத்தரவிட்ட ஹரியாணா மாநில அரசு அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியாணாவில் மானேசர்-ஷிகோபூர் பகுதியில் உள்ள 3.5 ஏக்கர் நிலத்தை வதேரா, டி.எல்.எஃப். நிறுவனத்துக்கு ரூ.58 கோடிக்கு விற்பனை செய்தார்.
இந்த நில பேரத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக தெரிய வந்ததைத் தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தும்படி அந்த மாநில பதிவுத்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அசோக் கெம்கா கடந்த 12ஆம் தேதி உத்தரவிட்டார். வதேராவுக்குச் சொந்தமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் உள்ள நிலங்களின் உண்மையான மதிப்பைக் கண்டறியுமாறு நான்கு துணைப் பதிவாளர்களுக்கு அவர் உத்தரவு பிறப்பித்தார்.
ஒருவேளை, சம்பந்தப்பட்ட நிலங்கள் மதிப்பு குறைத்துக் காட்டப்பட்டிருந்தால் அவற்றின் மீது உரிய முத்திரைத் தீர்வையை வசூலிப்பதற்காக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தியிருந்தார். இதற்காக முறைப்படியான கடிதத்தை அவர் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், பதிவுத்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் பதவியில் இருந்து அசோக் கெம்காவை ஹரியாணா மாநில அரசு அதிரடியாக நீக்கியுள்ளது.
அவரை ஹரியாணா விதைகள் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக நியமித்துள்ளது. வதேராவின் நில பேரங்கள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டதாலேயே அவர் வேறு துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதனிடையே, தனது பணியிட மாற்றம் குறித்த தகவல் கிடைத்ததும், வதேரா 3.5 ஏக்கர் நிலத்தை டி.எல்.எஃப். நிறுவனத்துக்கு விற்பனை செய்ததை கெம்கா அதிரடியாக ரத்து செய்தார். இது இந்த விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து, 1991ஆம் ஆண்டில் தேர்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான அவர், மாநில தலைமைச் செயலாளர் பி.கே.செüத்ரிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:எனது 20 ஆண்டு கால பணிச்சேவையில் இது 43ஆவது இடமாற்றமாகும்.
நில பேரத்தில் நடைபெற்ற மோசடி அம்பலமாவதால் பாதிக்கப்பட்டுள்ள அரசியல்-நிர்வாக அதிகாரவரிசையில் உள்ள சில சுயநல சக்திகளுக்காக என்னைத் தண்டிப்பது கெட்ட நோக்குடைய நடவடிக்கை. சில நாள்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சில நூறு கோடி மதிப்பிலான பஞ்சாயத்து நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. குறைத்து மதிப்பீடு செய்யப்பட்ட காரணத்தால் பஞ்சாயத்துகள் ஏராளமான நிலங்களை இழந்துள்ளன. என்னை அவமானப்படுத்துவதற்காக மாதந்தோறும் இடமாற்றம் செய்யப்போவதாகவும் நான் மிரட்டப்படுகிறேன்.
மேற்கண்ட விவகாரங்கள் உரிய முறையில் விசாரிக்கப்பட்டால் என்னுடைய முடிவுகள் சரி என்று நிரூபணமாகும்.
மேலும், சுயநல சக்திகளிடம் இருந்து அச்சுறுத்தல் இருப்பதால் எனக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் கெம்கா குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, அதிகாரி கெம்காவுக்கு தொலைபேசி மூலம் மிரட்டல்கள் வருவதாக அவரது நண்பரும், பிரபல வழக்குரைஞருமான அனுபம் குப்தா தெரிவித்துள்ளார். ""கெம்காவை இடமாற்றம் செய்ததில் தனக்கு கெட்ட நோக்கம் ஏதும் இல்லை என்றும், அவர் எழுப்பிய விவகாரங்கள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும்'' ஹரியாணா மாநில அரசின் தலைமைச் செயலாளர் பி.கே.செüத்ரி தெரிவித்துள்ளார்.

கேஜரிவால் விமர்சனம்

ராபர்ட் வதேராவின் நில பேரங்களை சமீபத்தில் அம்பலப்படுத்திய சமூக ஆர்வலர் அரவிந்த் கேஜரிவால், கெம்காவை இடமாற்றம் செய்த ஹரியாணா அரசை விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ""கெம்கா ஏன் இடமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறித்து ஹரியாணா முதல்வர் ஹூடா, நாட்டுக்குப் பதிலளிக்க வேண்டும். வதேரா குறித்து விசாரணை நடத்தியதாலேயே ஓர் அதிகாரியை மாற்ற முடியுமா?'' என்று கேள்வி எழுப்பினார்.

பா.ஜ.க. வலியுறுத்தல்

கெம்கா இடமாற்றத்தை விமர்சித்து பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவடேகர் கூறுகையில், ""தானாக முன்வந்து நிலபேரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்ட ஒரு நேர்மையான அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பதற்றமடைந்துள்ள காங்கிரஸ், வதேராவைக் காப்பாற்ற முயற்சிக்கிறது. வதேரா நில பேரம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். கெம்கா எடுத்த நடவடிக்கை மீது மேல் நடவடிக்கை எடுப்பதற்குப் பதில், ஹரியாணா அரசு அவர் மீதே பழிவாங்கும் நடவடிக்கையை எடுத்துள்ளது'' என்றார்.

சி.பி.எம். கோரிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சீதாராம் யெச்சூரி கூறுகையில், ""கெம்காவை இடமாற்றம் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து ஹரியாணா அரசு பதிலளிக்க வேண்டும்.
நில பேர முறைகேடுகள் பற்றியும், அதை விசாரிக்க உத்தரவிட்ட அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டது பற்றியும் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று எங்கள் கட்சி விரும்புகிறது'' என்று தெரிவித்தார்.

பழிவாங்கவில்லை: காங்கிரஸ்
இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலர் ஹரிபிரசாத் கூறுகையில், ""கெம்கா இடமாற்றம் குறித்து கூறப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. இது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. அந்த அதிகாரியின் நேர்மையை நாங்கள் சந்தேகிக்கவில்லை. எந்த அதிகாரியையும் இடமாற்றம் செய்வது என்பது அரசுக்குள்ள பிரத்யேக உரிமையாகும். இந்த இடமாற்றத்தின் பின்னால் உள்ள காரணங்கள் குறித்து தலைமைச் செயலாளரால் விளக்க முடியும்'' என்றார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக