வறுமையே உனக்கு வறுமை வராதா: இன்று உலக வறுமை ஒழிப்பு நாள்
உலகில் ஏதாவது ஓர் இடத்தில், வறுமையால் யாராவது பாதிக்கப்பட்டால்,
அவர்களது மனித உரிமை மீறப்படுகிறது என்கிறார் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த
ஜோசப் ரெசின்கி. இவர், சிறு வயது முதலே வறுமைக்கு எதிராக போராடினார். இவரது
முயற்சியால் தான், உலக வறுமை ஒழிப்பு தினம் 1987 அக்.,17ல்
உருவாக்கப்பட்டது. பின் ஐ.நா., சபையால், இத்தினம் அங்கீகரிக்கப்பட்டது.
வறுமையை ஒழிக்கவும், அனைவருக்கும் அடிப்படை வசதி கிடைப்பதை உறுதி செய்யவும் நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா., வலியுறுத்துகிறது. "வறுமையால் உருவாகும் வன்முறைக்கு முடிவு: தேவையை பூர்த்தி செய்து அமைதியை உருவாக்குதல்' என்பது இந்தாண்டு மையக் கருத்து.
வறுமையை ஒழிக்கவும், அனைவருக்கும் அடிப்படை வசதி கிடைப்பதை உறுதி செய்யவும் நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா., வலியுறுத்துகிறது. "வறுமையால் உருவாகும் வன்முறைக்கு முடிவு: தேவையை பூர்த்தி செய்து அமைதியை உருவாக்குதல்' என்பது இந்தாண்டு மையக் கருத்து.
எது வறுமை:
அனைவருக்கும் சுத்தமான தண்ணீர், சத்தான உணவு, மருத்துவம், வேலை வாய்ப்பு, சுகாதாரம், கல்வி, உடை, இருப்பிடம் கிடைக்க வேண்டும். இவை இல்லாத அனைவரும், வறுமை நிலையில் இருப்பவர்கள் என கருதப்படுகிறார்கள். பட்டினி, வன்முறைக்கு வறுமை வழிவகுக்கிறது.
129 கோடி பேர்:
உலக மக்கள் தொகையில், 129 கோடி பேர் வறுமை நிலையில் வாழ்கின்றனர். இதில் 40 கோடி பேர் இந்தியாவிலும், 17 கோடி பேர் சீனாவிலும் உள்ளனர். இந்தியாவில் 32.7 சதவீதம் பேர், சர்வதேச வறுமைக் கோட்டுக்கும் கீழே வாழ்கின்றனர். 68.7 சதவீதம் பேர், 100 ரூபாய் வருமானத்தில் வாழ்கின்றனர் என 2008ல "உலக வங்கி' நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏன் இந்த இடைவெளி:
வசதி படைத்தோர் - ஏழைகளுக்கு இடையேயான இடைவெளி அதிகரிக்கிறது. வளராத நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, உலகின் முதல் மூன்று பணக்காரர்களின் சொத்து மதிப்பை விட குறைவு. உலக பணக்காரர்களில், 20 சதவீதம் பேர், உலகின் மொத்த வளங்களில் 86 சதவீதத்தை வைத்துள்ளனர். மீதமுள்ள 80 சதவீத மக்களுக்கு கிடைப்பது 14 சதவீதம் மட்டுமே.
அக்கறையின்மை:
ஏழ்மை நிலையில் மக்கள் தள்ளப்படுவதற்கு அரசியல்வாதிகள், ஊழல், லஞ்சம், கல்வியறிவின்மை, வேலை வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, புதிய தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தாமை போன்ற காரணங்கள் உள்ளன. இருப்பினும், ஏழைகளின் பசியை போக்க எந்த அரசுக்கும் அக்கறை இல்லாததே முக்கிய காரணம். ஆட்சிக்கு வந்தால் அதைத் தருவோம், இதைத் தருவோம் என தேர்தலின் போது அனைத்து கட்சிகளும் வாக்குறுதிகளை அள்ளி விடுகின்றன. ஆனால் ஆட்சியில் அமர்ந்தவுடன், மக்களின் பசியைக்கூட போக்க அவை முன்வருவதில்லை.
என்ன செய்யலாம்:
ஏழைகளை ஒரே நாளில் வசதியானவர்களாக மாற்ற முடியாது. இப்போதிருந்து தொலைநோக்கு திட்டங்களை தீட்டினால், வரும் சந்ததியினரும் வறுமைக் கோட்டில் வசிப்பதை தவிர்க்கலாம். கல்வியறிவே ஒரு நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்கிறது. உலகில் 11 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்வதில்லை என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா, வும், 2015ம் ஆண்டுக்குள், அனைத்து நாடுகளும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறது. அரசுகளுடன் மக்களும் முயற்சி எடுத்தால், ஏழ்மை நிலையை முடிந்தளவு குறைக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக