சனி, 20 அக்டோபர், 2012

மழையும், குழந்தைகளும்! மழை க்காலங்கள்


வெயிலோ, மழையோ, குளிரோ, தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப, நமது உடல் தகவமைத்துக் கொள்ளும் இயல்புடையது. அதேபோல, அந்தந்த தட்பவெப்பத்திற்கேற்ப, வைரஸ், பாக்டீரியாக்களால் நோய்களும் அதிகமாக பரவ ஆரம்பிக்கும். தற்போது, வடகிழக்கு பருவமழை துவங்கி விட்டது. அதற்கு முன்பே, ஆங்காங்கே மழை கொட்டத் துவங்கி விட்டது. நோயின் முன்னோடியாக, "டெங்கு' காய்ச்சல் தமிழகம் முழுதும் பரவலாகி விட்டது. இதேபோல மழைக்காலத்தில், பல்வேறு நோய்களும் நம்மைத் தாக்கும். வெயில் காலத்தில் "எறும்பைப் போல' சுறுசுறுப்பாக செயல்படும் நாம், மழைக்காலத்தில் சோம்பல் நிலைக்கு சென்று விடுவோம். திடீர் மழையில் நனையும் போது சளி, காய்ச்சல் தொந்தரவு ஏற்படும். மழைக்கால நோய்கள், அதிலிருந்து நம்மை பாதுகாப்பது, நோய் வந்தால் எப்படி செயல்படுவதென, "மழைக் காலத் தொடரில்' நிபுணர்கள் ஆலோசனை வழங்க உள்ளனர்.
""வீட்டையும், சுற்றுப்புறத்தையும் கொசு வராமல் சுத்தமாக வைத்துக் கொண்டாலே, வைரஸ், பாக்டீரியா தாக்காமல், குழந்தைகளை பாதுகாக்கலாம்,'' என்கிறார், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை குழந்தைகள் நல தலைமை டாக்டர் ஏ.கண்ணன்.

அவர் கூறியதாவது:மழைக்காலத்தில் பொதுவாக குழந்தைகள் பாதிக்கப்படுவது சளியால் தான். அடிக்கடி மூக்கு ஒழுகும். வைரஸ் காய்ச்சலால் உடல் வலி ஏற்படும். இக்காய்ச்சல் நான்கு முதல் ஏழு நாட்களில் சரியாகிவிடும். அதற்கு மேல் இருந்தால் அது "டைபாய்டு' ஆக இருக்கலாம். அதேபோல் வாந்தி, வயிற்றுப் போக்கு, வயிற்றுக்கடுப்பு, காலராவும் ஏற்படலாம். இதற்கு சுகாதாரமற்ற உணவு, தண்ணீர் தான் காரணம். தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். உடனுக்குடன் தயாரித்த, சூடான உணவுகளை குழந்தை களுக்கு கொடுப்பது நல்லது. வயிற்றுப் போக்கு ஏற்பட்டால், ஒரு லிட்டர் தண்ணீரில் கையளவு சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு கலந்து கொதிக்க வைத்து, கொடுக்க வேண்டும். "கார்பனேட்டட்' குளிர்பானங்களை கொடுக்கக்கூடாது.

கொசுக்களால் தொல்லை: இரவில் கடிக்கும் சாக்கடை கொசுக்களால் மலேரியா காய்ச்சல் பரவும். காய்ச்சலுடன் உடல் நடுக்கம், குளிர் தாங்கமுடியாத நிலை இருந்தால் மலேரியாவாக இருக்கலாம். பகலில் கடிக்கும் கொசுக்களால் டெங்கு பரவிக் கொண்டிருக்கிறது. காய்ச்சலுடன் ரத்தவாந்தி, கறுப்புநிறத்தில் மலம் கழித்தால் "டெங்குவாக' இருக்கலாம். முடிந்தவரை கால்களில் "சாக்ஸ்', முழுக்கை சட்டை அணிந்து, உடலை மறைக்கலாம். எல்லா காய்ச்சலுமே "டெங்கு' எனக் கூறமுடியாது. மழைக்காலத்தில் சாதாரண வைரஸ் காய்ச்சல் வரலாம். அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று, அதற்கேற்ப சிகிச்சை அளித்தால் போதும். வீட்டிலும், சுற்றுப்புறத்திலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது அவசியம், என்றார்.

கொசுவலையில் தூங்க வையுங்கள்:
*காலில் செருப்பு அணியாமல், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்க கூடாது.
*மழையில் குளிக்கவும், தேங்கிய மழை நீரில் விளையாடவும் அனுமதிக்க கூடாது. அருகில் குளம், குழிகளில் மழைநீர் தேங்கி இருக்கும். அவற்றில் இறங்க அனுமதிக்க
க்கூடாது.
*வெளியில் சென்று வந்தால் கை, கால்களை நன்கு கழுவச்செய்யவும்.
*கைக்குழந்தைகளை, கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு அழைத்து செல்லக்கூடாது. "சாக்ஸ்', தொப்பி அணிந்து, வெளியே கொண்டு செல்லவும்.
*கொசுவலையில் குழந்தைகளை தூங்க வைப்பது நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக