சனி, 20 அக்டோபர், 2012

திராவிடப் பல்கலைக்கழகம் : துளு மொழிக்கு ச் சான்றிதழ், பட்டயப் படிப்பு

திராவிடப் பல்கலைக்கழகம்  : துளு மொழிக்கு ச் சான்றிதழ், பட்டயப் படிப்பு

First Published : 20 October 2012 03:24 PM IST
திராவிட மொழிகள் குறித்து மேல் படிப்பு பயிலவும், ஆராய்ச்சிக்காகவும் ஆந்திர மாநில அரசால் தோற்றுவிக்கப்பட்டது திராவிடப் பல்கலைக்கழகம். இப்பல்கலைக்கழகம் மூலம் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தங்கள் அறிவைப் பெருக்கி கொண்டது அல்லாமல் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பையும் பெற்றுச் சிறந்து விளங்குகின்றனர்.
திராவிடப் பல்கலைக்கழகமானது ஆந்திர மாநில அரசின் அனுமதியுடன் கடந்த 1997-ம் ஆண்டு துவங்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் ஆந்திர மாநிலம், குப்பம் நகரின் அருகே 5 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீனிவாசவனம் என்னும் பகுதியில் அமைந்துள்ளது. நல்ல காற்றோட்டமான, அமைதியான இயற்கைச் சூழலில் 1,100 ஏக்கர் பரப்பளவில் அமையக்கப்பட்டுள்ளது இப்பல்கலைக்கழகம். திராவிட மொழிகளில் உள்ள 27 மொழிகளை மேம்படுத்தும்
வகையில் உருவாக்கப்பட்டதுதான் இந்த பல்கலைக்கழகத்தின் சிறப்பு. திராவிட மொழிகளில் உள்ள 27 மொழிகளில் தமிழ், கன்னடம், மலையாளம்,
தெலுங்கு ஆகிய 4 மொழிகள் பிரபலமாகி மக்களை சென்றடைந்துள்ளன. தனக்கே உரிய எழுத்து வடிவம் இல்லாத துளுமொழியானது தற்போது பிரபலமாகி வருகிறது. திராவிடர்களின் கலாசாரம், கலை, பண்பாடு, வரலாறு, அகழ்வாராய்ச்சி, இலக்கியம் மற்றும் தத்துவங்கள் மூலம் அதன் தொன்மையை அறியக் கல்வியாளர்களுக்கு வழி செய்கிறது இந்த பல்கலைக்கழகம்.
தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் ஆகிய அரசுகள் திராவிட மொழிகளை மேம்படுத்த இப்பல்கலைக்கழகத்துக்கு உதவியுள்ளன. கடந்த 1997-ம் ஆண்டு 2 துறைகளுடன் துவக்கப்பட்ட இப்பல்கலைக்கழகம் தற்போது 21 துறைகள் மற்றும் 7 ஆராய்ச்சி மையங்களுடன் செயல்படுகிறது. இங்கு மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள் மூலம் மற்ற மொழிகளிலிருந்து, திராவிட மொழிகளுக்கு நூல்களை மொழி பெயர்த்தல் மற்றும் திராவிட மொழி நூல்களை மற்ற மொழிகளுக்கு மொழிபெயர்தல் நவீனபடுத்தல் மூலம் திராவிட மொழிகள் வளர்ச்சிக்கு உதவுகின்றது. இப்பல்கலைக்கழகத்தில் 6 பிரிவுகளுக்கான துறைகள் உள்ளன. மேலும் தென்னிந்திய கலைகள் தொடர்பான அருங்காட்சியகம், நூலகம், திராவிட மொழிகள் பாதுகாப்பு இயக்கம், திராவிட மொழிகள் குறித்த பதிப்புத்துறை, மொழிபெயர்ப்புத் துறை, மகளிர் மேம்பாட்டுத் துறை, கணினி கல்வித் துறை போன்றவைகளும் உள்ளன. ஆயிரக்கணக்கான மாணவர்கள் இப்பல்கலைக்கழகத்தில் பயின்று வருகின்றனர். இவைமட்டும் அல்லாமல் தொலைதூரக்கல்வி, தொடர் கல்வி மூலம் மாணவர்களுக்கு, பட்ட, பட்டமேற்படிப்பு, பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது இப்பல்கலைக்கழகம். இப்பல்கலைக்கழக நூலகத்தில் ரூ.1.75 கோடி மதிப்பிலான 55 ஆயிரம் அரிய வகை புத்தகங்கள் உள்ளன. கணினியுடன் கூடிய மொழி ஆய்வக வசதி, மருத்துவமனை வசதி, வங்கி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி தங்கும் விடுதி, விளையாட்டு அரங்கம் உள்ளிட்டவைகள் உள்ளன. ஏழை மாணவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் அலுவலகம் மற்றும் நூலகத்தில் தாற்காலிக வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடும், பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பல்கலைக்கழகம் நடத்தும்
நுழைவுத் தேர்வில் (தொழில்சார்ந்த கல்வி அல்லாத பாடத்தில்) முதல் மூன்று இடங்களில் தேர்ச்சி பெறும் மாணவியருக்கு ரூ.1 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் தொழில் சார்ந்த கல்வியில் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறும் முதல் மூன்று மாணவியர்களுக்கு 50 சதவீதம் கல்விக் கட்டணம் சலுகையை வழங்குகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவ, மாணவியர் தங்கள் மேல்படிப்பையும், ஆராய்ச்சிகளையும் தொடர இந்த பல்கலைகழகம் உதவிகரமாக இருக்கும்.
திராவிடப் பல்கலைக்கழகத்தில் உள்ள பாடத் திட்டங்கள் ஆந்திர மாநிலம், குப்பம் அருகே உள்ள திராவிடப் பல்கலைக்கழகத்தில் திராவிட மொழிகள் குறித்த பட்டம் மற்றும் ஆராய்ச்சி படிப்பு மட்டுமல்லாமல் மற்ற துறைகள் படிப்பு குறித்த பாடத் திட்டங்களும் உள்ளன. இப்பல்கலைக்கழகத்தில் 6 துறைகளின் கீழ் உள்ள பாடத் திட்டங்கள் விவரம்: (முதுகலை மற்றும் ஒருங்கிணைந்த 5 ஆண்டுகளுக்கான பாடத் திட்டம்)
அ) ஒருங்கிணைந்த திராவிட இலக்கியங்கள் மற்றும்மொழிப்பெயர்ப்பு சார்ந்த படிப்புகள்:
1. ஒருங்கிணைந்த திராவிட இலக்கியங்கள் மற்றும் தத்துவம் சார்ந்த படிப்பு (30 இடங்கள்)
2. தெலுங்கு மொழி மற்றும் மொழிப்பெயர்ப்புத்துறை, (40 இடங்கள்) (5 ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த படிப்பு- 40 இடங்கள்)
3. தமிழ் மொழி மற்றும் மொழிப்பெயர்ப்புத் துறை (40 இடங்கள்)
4. கன்னட மொழி மற்றும் மொழிப் பெயர்ப்புத் துறை (40 இடங்கள்)
5. மலையாளம் மொழி மற்றும் மொழிப்பெயர்ப்புத் துறை
6. துளு மொழி மற்றும் மொழிப்பெயர்ப்பு (6 மாத சான்றிதழ் படிப்பு- 20 இடங்கள், ஓர் ஆண்டு பட்டயப்படிப்பு 20 இடங்கள்)
7. ஆங்கில இலக்கியம் மற்றும் தொடர்பு இயல். (40 இடங்கள்) (5 ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த படிப்பு-40 இடங்கள்)
ஆ) மனித மற்றும் சமூக இயல் தொடர்பான படிப்புகள்:
1. வரலாறு, தொல்லியல் மற்றும் கலை தொடர்பான படிப்பு (40 இடங்கள்), (ஒருங்கிணைந்த 5 ஆண்டுகளுக்கான படிப்பு- 40 இடங்கள்) (முதுகலை திராவிட கலாச்சார கல்விக்கான படிப்பு-40 இடங்கள்).
2. பழங்குடியினர் மக்களின் கலை மற்றும் கலாசாரம் தொடர்பான படிப்பு
3. திராவிட மற்றும் ஒருங்கிணைந்த மொழிகள் தொடர்பான படிப்பு (முதுகலை படிப்பு - 20 இடங்கள்)
இ) கல்வி மற்றும் மனித வள மேம்பாடு சார்ந்த படிப்பு:
1. கல்வி மற்றும் மனிதவள மேம்பாடு சார்ந்த படிப்பு (பி.எட்., இடங்கள்-100, எம்.எட்., இடங்கள் 25), தெலுங்கு புலமை (ஓராண்டு படிப்பு - 50 இடங்கள்)
2. நவீன முறையில் மொழி பயிற்றுவித்தல் படிப்பு
3. உடற்கல்வியல் படிப்பு
ஈ). இயற்கை அறிவியல் மற்றும் மூலிகை சார்ந்த படிப்பு:
1. உயிரியல் தொழில்நுட்பம், (சுயநிதிகல்வி 60 இடங்கள்) (முதுகலை- 30 இடங்கள்)
2. மூலக்கூறு அறிவியல் (சுயநதி கல்வி முதுகலை - 30 இடங்கள்)
3. மூலிகை அறிவியல் (சுயநிதிக்கல்வி முதுகலை-30 இடங்கள்)
4. சுற்றுச்சூழல் அறிவியல் (முதுகலை படிப்பு 30- இடங்கள்)
5. வேதியியல் (சுயநிதிக்கல்வி, முதுகலை, 30-இடங்கள்)
உ). அறிவியல் தொழில்நுட்பப் படிப்பு:
1. கணினி அறிவியல் (எம்.சி.ஏ., படிப்பு 30 இடங்கள் மற்றும் சுயநிதிக் கல்விக்கு 30 இடங்கள், எம்எஸ்சி 80 இடங்கள் மற்றும் சுயநிதிக் கல்விக்கு
30 இடங்கள்)
2. நூலக அறிவியல் மற்றும் தொடர்பியல் துறை (முதுகலை, சுயநிதிக்கல்விக்கு 20 இடங்கள்)
ஊ). வணிகம் மற்றும் மேலாண்மை சார்ந்த படிப்பு:
1. வணிகவியல் துறை (எம்.காம்., ஒருங்கிணைந்த 5 ஆண்டுப் படிப்பு, சுயநிதிக்கல்விக்கு 60 இடங்கள்)
2. தொழில் (வியாபாரம்) மேலாண்மை (பி.பி.எம்., சுய நிதிக்கல்விக்கு 60 இடங்கள், எம்.பி.ஏ., 60 இடங்கள்)
இவற்றில் ஒருங்கிணைந்த 5 ஆண்டுகளுக்கான படிப்பில் வரலாறு, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், துளு, தொல்லியல் மற்றும் கலை பண்பாட்டு படிப்புகளும் பயிலலாம்.
மேலும் விவரங்களுக்கு: www.dravidianuniversity.ac.in, www.dravidianuniversity.org என்ற இணையதளத்தில் தொடர்பு கொள்ளலாம். பல்கலைகழகத்தின் முகவரி: திராவிடன் பல்கலைக்கழகம், ஸ்ரீனிவாசவனம், குப்பம், ஆந்திர மாநிலம் - 517 425.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக