ஞாயிறு, 14 அக்டோபர், 2012

உரத்த சிந்தனை: ஊற்றெடுக்கும் ஊழல் நதி ஆர்.நடராசன்

உரத்த சிந்தனை: ஊற்றெடுக்கும் ஊழல் நதி ஆர்.நடராசன்
 தினமலர்

ராஜா வீட்டுக் கன்றுக் குட்டி, எவ்வளவு துள்ளினாலும் கண்டிக்கப் படுவதில்லை; ராணி வீட்டுக் கன்றுக் குட்டியும், எவ்வளவு அள்ளினாலும் தண்டிக்கப் படுவதில்லை. அதுதான், ராஜ குடும்பம் பெறும் சலுகை, மரியாதை.

ஜனநாயகம் என்று, சொல்லப்படும் சோனியா நாயகத்தில், இது கூட இல்லாவிட்டால் எப்படி? பங்குதாரராக உள்ள தொலைக்காட்சி நிறுவனத்திற்கு, பெருந்தொகையை, பிணையற்ற கடனாகப் பெற்ற கருணாநிதியின் மகள் கனிமொழி, நிதி முறைகேடு என்ற குற்றச்சாட்டில், திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.அதேபோன்று, பிணையற்ற கடன் பெற்றுள்ள, நாட்டின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனத்தின், டி.எல்.எப்., - டில்லி, பங்குதாரராக இருக்கும் ஒருவர், வெளியே சுதந்திரமாக இருக்கிறார். நாட்டின் எந்த விமான நிலையத்திலும், அவருக்குப் பாதுகாப்பு சோதனைகள் இல்லை.இப்படி ஓசைப்படாமல், சொத்து சேர்த்து வரும், அந்த அதிகோடீஸ்வரர் யார்? வேறு யாருமில்லை; சோனியாவின் மருமகன், ராஜிவின் மகள் பிரியங்காவின் கணவர். அவர் தான் ராபர்ட் வதேரா. இந்த ராபர்ட் வதேராவுக்கு, சில வணிக நிறுவனங்கள், எந்த அடிப்படையில் சகாயம் செய்தன; அவற்றிற்கு, அவர் என்ன செய்தார் போன்ற விவரங்களை, இப்போது அரவிந்த் கெஜ்ரிவாலும், பிரசாந்த் பூஷணும் வெளியிட்டு இருக்கின்றனர். இவரது அபார வளர்ச்சியைப் பார்ப்பதற்கு முன், இவரது குடும்பப் பின்னணி பற்றியும் தெரிந்து கொள்வோமா?

இவர், 1969ம் ஆண்டு பிறந்தவர். தந்தை ராஜேந்தர், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்; தாயார், ஸ்காட்லாந்துப் பெண்மணி. முதலில், இவர் தொழிற்சாலைக் கழிவுப் பொருட்களை வாங்கி விற்றவர். அந்தக் காயலான் கடை வியாபாரத்தில், பெரிய அளவு லாபம் இருக்க முடியாது.ஆனால், கடந்த, 10 ஆண்டுகளில், பெரிய தொழிலதிபராக வளர்ந்திருக்கிறார், அரசியல் தொடர்பால். இவரது முதல் தொடர்பு, போபர்ஸ் பீரங்கி விற்பனைத் தரகரான குட்ரோச்சி. அவர் மூலம், பிரியங்காவின் நட்பு கிடைத்தது. அப்புறம் அபார வளர்ச்சி.இவர், பிரியங்காவைத் திருமணம் செய்து கொண்டது, 1997ல். பின், தொழிலில் ஏறுமுகம். அடுத்த சில ஆண்டுகளில், சந்தேகத்திற்கிடமான சூழலில், இவரது சகோதரர் உயிரிழந்தார். இவரது சகோதரி, ஒரு சாலை விபத்தில் சிக்கி இறந்தார்; தந்தை தற்கொலை செய்து கொண்டார். எல்லாச் செய்திகளுமே, அடக்கி வாசிக்கப்பட்டன.

இந்தக் காலக்கட்டத்தில் தான், ராபர்ட் வதேரா, பிரம்மாண்டமாக வளர்ந்தார்.ராபர்ட் வதேராவுக்கு, டில்லியின் ஹில்டன் கார்டன் ஓட்டலில், பெருமளவு பங்கு உண்டு. பல உள்நாட்டு நிறுவனங்களிலும், கணிசமான பங்குகள் உண்டு. வெளிநாட்டு நிறுவனங்களிலும், வணிகத் தொடர்புகள் உண்டு.குறிப்பாக, டில்லியில் உள்ள, டி.எல்.எப்., என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவர். இது, நாட்டின் மிகப்பெரிய, "ரியல் எஸ்டேட்' நிறுவனம். காமன்வெல்த் போட்டி தொடர்பான கட்டுமான ஒப்பந்தங்கள், இதற்குத்தான் தரப்பட்டன. அதனால் தான், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஊழல் என்று பரவலாகப் பேசப்பட்ட போதும், அப்போதைய ஒலிம்பிக்ஸ் குழுத் தலைவரான சுரேஷ் கல்மாடியை விசாரணை அமைப்புகள் நெருங்கவில்லை.அரசு சட்ட திட்டங்கள், இவருக்கு வளைந்து கொடுத்து, இவரது வளர்ச்சிக்கு உதவுகின்றன. இந்திய விமான நிலையங்களிலும், வெளிநாடுகளிலும் உள்ள இந்தியத் தூதரகங்களிலும், இவருக்குத் தனிச் சலுகை, எழுத்துப் பூர்வமாகத் தரப்பட்டிருக்கிறது.

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் முதலிய, 33 அதி முக்கிய பிரமுகர்களுக்கு பதவி காரணமாக, விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனை இல்லை. அவர்கள், நேரே விமானத்தில் சென்று அமரலாம். இந்தியத் தூதரகங்களிலும், இவர்களுக்குப் பாதுகாப்புச் சோதனைக்கு விதிவிலக்கு உண்டு. இதே சலுகை, ராபர்ட் வதேராவுக்கும் தரப்பட்டிருக்கிறது. இவரது உடமைகள், சோதனை செய்யப்படுவதில்லை.விமான நிலையங்களில், பாதுகாப்புச் சோதனைக்கு விலக்கானவர்கள் பற்றிய அறிவிப்புப் பலகையில், வதேராவின் பெயரை பார்க்கலாம். ராபர்ட் வதேரா, எந்த அரசு பொறுப்பிலும் இல்லை; கவுரவப் பதவியும் கிடையாது. ஏன் இந்தச் சிறப்பு சலுகை?

இதை எந்த இந்திய அரசியல்வாதியும், இதுவரை எதிர்த்ததாகத் தெரியவில்லை. இந்தச் சலுகை இருந்தால், இந்தியாவிலிருந்து எதையும் கடத்தி போக முடியும். இத்தாலியில் விலை மதிப்பற்ற இந்தியப் பழம்பெரும் பொருட்கள் கிடைக்கின்றன. இவர், இத்தாலியில் இப்படிப்பட்ட கடை வைத்திருக்கிறார்.ராபர்ட் வதேராவுக்கு, "யூனிடெக்' நிறுவனத்தில் பங்குகள் உண்டு என்கிறார் பெயரை வெளிக்காட்டாத, ஒரு அயல்நாட்டுச் செய்தியாளர். அதுமட்டுமல்ல, பல நிறுவனங்களில் பிணையற்ற கடன் பெருமளவுக்கு வாங்கியிருக்கிறார். ஓட்டல்கள் நடத்துகிறார்; சொந்த விமானங்கள் வைத்திருக்கிறார். அவற்றை வாடகைக்கு விட்டுச் சம்பாதிக்கிறார். புகாரும் இல்லை; திகாரும் இல்லை. மகிழ்ச்சியுடன் வெளியே இருக்கிறார்.

சி.பி.ஐ.,யின் கரங்கள், இவரை நெருங்க முடியாது. சி.பி.ஐ.,யை இயக்கும் பிரதமர் மன்மோகன் சிங்கை, அந்த பதவியில் நியமித்ததே, இவரது மாமியார் தானே. இதையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டியவர்கள், 100 கோடி இந்திய மக்கள்.எகிப்தில், டுனிஷியாவில் வெடித்தது போல், இந்தியாவிலும், மக்கள் புரட்சி வெடிக்க வேண்டும். இரண்டாவது சுதந்திரப் போராட்டம் பிறக்க வேண்டும். காந்தி போன்றவர்களால்... போலி காந்திகளால் அல்ல!

கெஜ்ரிவாலும், பூஷணும் கேள்விகள் எழுப்பிய பின், அரியானா முதல்வரைக் கூப்பிட்டு, சோனியா பதில் சொல்லச் சொல்லியிருக்கிறார்.இப்போதும், சோனியா நேரடியாக எதுவும் சொல்லவில்லை. மருமகனைச் சொல்லவிடவில்லை. எல்லாவற்றிலும், பயன் இவருக்கு; பழி மற்றவர்களுக்கு என்றிருக்கும் போது, மற்றவர்களே பதில் சொல்லிவிட்டுப் போகட்டுமே என்றிருக்கிறார். என்ன நிர்வாகம், இந்த நிர்வாகம்?

தினந்தோறும் பயனுள்ள, பயனற்ற விவாதங்களை நாள் முழுவதும் நடத்தும் சேனல்காரர்கள், எத்தனையோ பெருந்தலைகளை அழைத்தும், கிடுக்கிப்பிடி போட்டிருக்கின்றனரே. விழிகளையும், விரல்களில் பென்சிலையும் உருட்டும் சேனல் கேள்வியாளர்கள், இதுவரை சோனியாவை விட்டு வைத்துள்ளதன் மர்மம் என்ன?மன்மோகன் சிங் வெறும் முகமூடி. சோனியாதான் சூத்ரதாரி என்பது, அத்வானி உட்பட, எல்லாருக்கும் தெரியுமே. அவர்கள் கூட, ஏன் சோனியா மீது பாயாமல், மன்மோகன் சிங்கையே மீண்டும் மீண்டும் நோண்டுகின்றனர்? எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் ஏன் வாய் திறக்கவில்லை? அவர்களில் பலர் அமைச்சர்களாக இருந்தவர்கள். மீண்டும், அமைச்சர்களாகப் போகிறவர்கள். அவர்கள் வீட்டுக் கொட்டில்களிலும் கன்றுக்குட்டிகள் இருக்கின்றன!
Email: hindunatarajan@hotmail. com

ஆர்.நடராஜன்,கட்டுரையாளர், அமெரிக்கத் தூதரக முன்னாள் அரசியல் ஆலோசகர் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக