சனி, 7 நவம்பர், 2009

தமிழர்கள் மறு குடியமர்த்தல் அதிகரிப்பு: இலங்கை அரசு



கொழும்பு, நவ. 6: இலங்கையில் அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த தமிழர்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகிறது, அவர்கள் சொந்த ஊர்களில் குடியமர்த்தப்படுவது வேகம் பெற்று வருகிறது என்று இலங்கை அரசு கூறுகிறது. இலங்கைத் தமிழர் மறுவாழ்வு குறித்தும் முகாம்களின் அவல நிலைமை குறித்தும் சர்வதேச அரங்கில் கடுமையான சர்ச்சைகளும் விவாதங்களும் வேகம் பெற்று வருவதால் அவர்களை முகாம்களைவிட்டு அனுப்பும் வேலையை இலங்கை அரசு துரிதப்படுத்தி வருகிறது. கடந்த ஜூன் மாதம் இலங்கை அரசு நடத்திவந்த முகாம்களில் 2,88,000 தமிழர்கள் அகதிகளாகத் தங்கியிருந்தனர். இம் மாதம் 4-ம் தேதி கணக்கெடுப்பின்படி முகாம்களில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கை 1,57,000 தான். அடுத்த வாரத்தில் சுமார் 60,000 பேர் குடியமர்த்தப்படுவார்கள் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. மகிந்தா சமரசிங்க: இந்த ஆண்டின் இறுதிக்குள் (2009) பெரும்பாலான தமிழர்கள் அவரவர் சொந்த ஊர்களிலேயே குடியமர்த்தப்பட்டுவிடுவார்கள் என்று இயற்கைப் பேரழிவு நிர்வாகம் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்புக்கான அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவிக்கிறார். முல்லைத்தீவில்: விடுதலைப் புலிகளின் கோட்டை என்று கருதப்பட்ட முல்லைத் தீவில் மட்டும் 1,314 குடும்பங்களைச் சேர்ந்த 4,390 பேர் குடியமர்த்தப்பட்டுவிட்டனர் என்று அரசு தெரிவிக்கிறது. அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், மன்னார், திரிகோணமலை, முல்லைத்தீவு மாவட்டங்களில் அவரவர் வசித்த இடங்களுக்கே மீண்டும் சென்றுவிட்டனர். 15 லட்சம் கண்ணி வெடிகள்: வடக்குப் பகுதியில் 400 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட கண்ணி வெடிகளை விடுதலைப் புலிகள் புதைத்து வைத்திருப்பதாக நம்பப்படுகிறது. அவற்றை அடையாளம் கண்டு அகற்றும் பணி முழு வீச்சில் நடைபெறுகிறது. நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் முன்னர் 14 இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டன. கடந்த வாரம் மேலும் 5 இயந்திரங்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தன. 5 நாடுகள் இந்தப் பணியில் இலங்கை அரசுக்கு உதவுகின்றன. கண்ணி வெடிகளைத் தவிர வெடிக்காத பீரங்கிக் குண்டுகள் போன்றவையும் நிலங்களில் சிதறிக் கிடக்கின்றன. கண்ணி வெடிகளை அகற்றுவதில் முதலில் முக்கிய நெடுஞ்சாலைகளும் பிரதான சாலைகளும் இலக்காகக் கொள்ளப்பட்டன. இப்போது கிராமங்களுக்குச் செல்லும் சாலைகளிலும் இந்தப் பணி நடைபெறுகிறது. நிலக்கண்ணி வெடிகளை புதைத்து வைத்ததுடன் நீர் நிலைகளையும் மாசுபடுத்தி வைத்துள்ளனர். எனவே கால்நடைகளும் மக்களும் அவற்றைப் பயன்படுத்தும் அளவுக்கு அவற்றைச் சுத்தப்படுத்த வேண்டியிருக்கிறது. சாலை வசதி, மின்சார வசதி, ரயில் பாதை, தகவல் தொடர்பு ஆகிய வசதிகளையும் மக்களுக்குச் செய்துதர வேண்டியிருக்கிறது என்று அரசின் அறிக்கை தெரிவிக்கிறது. முகாம்களிலிருந்து வெளியே அனுப்பப்பட்டவர்களில் பெரும் பகுதியினர் வவுனியா, புல்மோடை ஆகிய ஊர்களுக்கு அருகில் உள்ள அரசு மையங்களில் இப்போது தங்கியிருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. பண்ட பாத்திரங்கள், நிதியுதவி: மறு குடியமர்த்தலின்போது தமிழர் குடும்பங்களுக்கு சமையல் பாத்திரங்கள், 6 மாதங்களுக்குத் தேவைப்படும் ரேஷன் சாமான்கள், வேளாண் கைக்கருவிகள், இலங்கை ரூபாயில் 5,000 ஆகியவை தரப்படுகின்றன. குடியமர்த்தல் மானியமாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் 25,000 ரூபாய் தரப்படுகிறது, கூரை வேய ஷீட்டுகள் தரப்படுகின்றன, விவசாயிகளுக்கு சாகுபடிக்கு நிலத்தைத் தயார் செய்ய ஏக்கருக்கு 4,000 ரூபாய் தரப்படுகிறது. அத்துடன் விதை, உரம், போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படுகின்றன என்கிறது அரசு அறிக்கை.
கருத்துக்கள்

கொத்தடிமை முகாம்களை இடம் மாற்றிக் கொண்டு மறு குடியமர்த்தல் என இந்தியத் துணையுடன் பொய்யான பரப்புரையைச் சிங்களம் மேற்கொண்டு வருகின்றது. என்றாலும் காலம் ஒரு நாள் மாறும்! விரைவில் சிங்களம் அழியும்! ஈழம் சிறப்பாய் மலரும்! ஞாலம் அதனை உணரும்! வருத்தத்துடனும் வாழ்த்துடனும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/7/2009 3:23:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக