இலங்கை அதிபர் ராஜபக்ஷே, திருமலையில் சுவாமி தரிசனத்திற்கு வந்திருந்தபோது நடந்துள்ள சம்பவங்கள், ஆன்மிக பக்தர்களிடையே பெரும் சர்ச்சையை கிளம்பியுள்ளது.
ராஜபக்ஷே மனைவி, மகன் உட்பட 80 பேர் கொண்ட குழுவினர் திருமலைக்கு வந்து சுவு�மி தரிசனம் செய்துள்ளனர்.பாதுகாப்பு காரணங்கள் கருதி, திருமலையின் நான்கு மாட வீதிகளிலும் பிரதான வாயில் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கேட்டுகள் ஒரு மணி நேரம் மூடப்பட்டது.ராஜபக்ஷே திருமலை கோவிலுக்குள் நுழையும் முன், கோவிலை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது.சுவாமி தரிசனத்திற்காக கியூவில் சென்று கொண்டிருந்த பக்தர்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர். சுமார் ஒரு மணி நேரம் பக்தர்கள் கால் கடுக்க கியூவில் காத்திருந்தனர்.
கோவில் மரியாதைப்படி, அதிபரின் குடும்பத்தினருக்கு முகத்வார தரிசனம் செல்ல அனுமதி வழங்க நிபந்தனைகள் இல்லை. ஆனால், அவருடன் வந்த 80 பேர் கொண்ட குழுவினரில், பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட 40 பேர் முகத்வார வாசல் வழியாக தரிசனத்திற்குச் சென்றுள்ளனர். மீதி 40 பேர் கியூ மூலம் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.மூலவரான வெங்கடேசப் பெருமாளை தரிசனம் செய்ய, கோவிலுக்குள் சென்ற ராஜபக்ஷேவின் குடும்பத்தினரும் அவருடன் வந்தவர்களும் சராசரியாக 20 முதல் 30 நிமிடங்கள் கோவிலுக்குள் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக வேத பண்டிதர்கள் மந்திரங்கள் ஓத மேளதாளம் முழங்க தேவஸ்தான போர்டின் சேர்மன் அதிகாரிகள் புடைசூழ சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டு, தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.தேவஸ்தான நிபந்தனைகளின்படி, நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், கவர்னர்கள், மாநில முதல்வர்கள் போன்ற உயர் பதவி வகிப்போருக்கு மட்டும், முகத்வார தரிசன வசதிக்கு அனுமதி உள்ளது.இந்நிலையில், அடுத்த நாட்டின் அதிபருடன் வந்த 40 பேர் முகத்வார தரிசனத்திற்குச் சென்றுள்ளனர். இது முற்றிலும் நிபந்தனையை மீறிய நடவடிக்கை என்ற புகார் எழுந்திருக்கிறது.
பாதுகாப்பு அதிகாரிகளின் அடாவடி கெடுபிடி நடவடிக்கைகள் குறித்து திருமலையில் குவிந்த பத்திரிகையாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.மேலும் முகத்வார தரிசனத்திற்கு அதிபருடன் வந்த பாதுகாப்பு படையினர் மற்றும் அவரது குழுவினரையும், தேவஸ்தானம் அனுமதித்து குறித்தும், ஆந்திர மாநில அரசியல் தலைவர்கள் உட்பட பலர் இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகளின் செயல்பாடு குறித்தும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
வேண்டுதல் நிறைவேறியது : சுவாமி தரிசனம் மற்றும் கோவில் அர்ச்சகர்களின் ஆசீர்வாதம், பிரசாதங்களை ஏற்றுக் கொண்ட பின், கோவிலுக்கு வெளியே நிருபர்களை சந்தித்த ராஜபக்ஷே, தன் மனதில் இருந்த கருத்தைக் கூறி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது:கடந்த ஆண்டு திருமலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தேன். இலங்கையில் விடுதலைப் புலிகளால் எழுந்துள்ள பிரச்னைகள் ஓய வேண்டும், அதற்கான தீர்வும் காணப்பட வேண்டும் என, அப்போது பிரார்த்தித்துக் கொண்டேன். இலங்கையில் தற்போது விடுதலைப் புலிகள் ஒடுக்கப்பட்டு அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் நடந்த போரும் ஓய்ந்துள்ளது. எனது வேண்டுதல் இப்போது நிறைவேறியுள்ளது. திருப்பதி வெங்கடேசப் பெருமாளின் கருணையால் இலங்கையில் அமைதி திரும்பியுள்ளது. அங்கு வாழும் மக்கள் அமைதியுடன் நலமுடன் வாழ இந்தப் பயணத்தில் பிரார்த்தித்துக் கொண்டேன்,இவ்வாறு ராஜபக்ஷே கூறியுள்ளார்.இந்திய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலர் திருமலையில் அரசியல் பேசுவது இல்லை. பேசவும் விரும்ப மாட்டார்கள். ஆனால், தன் பிரார்த்தனையை வேறுவிதமாக ராஜபக்ஷே வெளியிட்டிருக்கிறார்.
நமது சிறப்பு நிருபர்-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக