சென்னை, நவ. 5: சமச்சீர் கல்விக்கான வரைவு பொதுப் பாடத் திட்டத்திற்கான தமிழ் பாடத்தின் இலக்கியப் பகுதிகளில் சிலப்பதிகாரம் உள்ளிட்ட பல காப்பியங்கள் இடம்பெறவில்லை என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்தனர். "பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின்' இணையதள தொடக்க விழா www.samacheerkalvi.in மற்றும் சமச்சீர் கல்விக்கான வரைவுப் பொதுப் பாடத்திட்டம் குறித்த கருத்தரங்கம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு முன்மொழிந்து நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்: எதிர்கால சவால்களை வளர்ந்துவரும் தலைமுறை எதிர்கொள்ளத் தேவைப்படும் ஆற்றல் பற்றிய எந்த சிந்தனையும் இல்லாமல் பாடத்திட்ட அறிமுகம் அமைந்துள்ளது. சமூக வளர்ச்சிக்கு கல்வி அடித்தளம் வகுக்கும் என்பதற்குப் பதிலாக உலகமயமாக்கலில் தனி மனிதனை மேம்பாடு அடையச் செய்வதையே நோக்கமாகக் கொண்டதாக வரைவுப் பொதுப் பாடத்திட்டம் அமைந்துள்ளது. இது கல்வியின் அடிப்படை நோக்கத்தை நிறைவேற்றக்கூடியதாக அமையவில்லை. ஆங்கில மொழி பாடத் திட்டத்தின் முன்னுரையில் பரந்த நோக்கங்கள் என்ற தலைப்பில் "ஆங்கிலம் கற்றல் அதிகாரமளித்தலுக்கான காரணி' என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் குறிப்பாக தமிழகச் சூழலில் இவ்வாக்கியம் வேதனையை அளிக்கக்கூடியதாக உள்ளது. கல்வி ஒருவருக்கு அதிகாரம் வழங்கும் கருவியாக அமையலாம். அதைவிடுத்து ஒரு அன்னிய மொழி அதிகாரமளிக்கும் காரணி என்பதை எப்படி ஏற்க இயலும். கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் மூட நம்பிக்கையைப் பரப்பும் அம்சங்களும் பாடத்தின் மீது சலிப்பை ஏற்படுத்தக்கூடிய கோட்பாடுகளாலும், தகவல்களாலும் நிரப்பப்பட்டுள்ளன என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. "தமிழ் மொழிப் பாடத்தில் தொடர்நிலைச் செய்யுள் பகுதியில் சிலப்பதிகாரம் இடம்பெறவில்லை. ஓரிரு காப்பியங்கள் மட்டும் உள்ளன. பெரும்பகுதி காப்பியங்கள் இல்லை. தமிழ் பாடத்தைப் பொறுத்தவரை மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு கடினமாக இல்லாத வகையில் எளிதாக இருக்க வேண்டும் என்று மனதில் வைத்து பொதுப் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது' என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்தனர். இதில் சமச்சீர் கல்விக்குழுத் தலைவரும், முன்னாள் துணை வேந்தருமான முத்துக்குமரன் பேசுகையில், ""இப்போது தயாரிக்கப்பட்டுள்ள வரைவுப் பொதுப் பாடத் திட்டத்தில் புதிய விஷயங்கள் எதுவும் இல்லை. அதேநேரத்தில், பாடத் திட்டத்தை தமிழில் உருவாக்கி இருக்க வேண்டும். இப்போதுள்ள குழந்தைகளுக்கு தேவையான பாடத் திட்டமாக இது இல்லை. அதேபோல கலை, சுற்றுச்சூழல், விளையாட்டு மற்றும் ஆசிரியர்-மாணவர் விகிதம் குறித்து எதுவும் இடம்பெறவில்லை. ஆங்கிலப் பாடத்துக்கு கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தைவிட தமிழுக்கு மிக குறைவான முக்கியத்துவமே கொடுக்கப்பட்டிருக்கிறது'' என்றார்.
கருத்துக்கள்
பூம்புகார் நாயகன்முத்தமிழறிஞர் முதல்வராக நடக்கும் பொழுது இந்த அநீதி நடக்கலாமா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.
By Ilakkuvanar Thiruvalluvan
11/6/2009 3:12:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *11/6/2009 3:12:00 AM