சனி, 7 நவம்பர், 2009

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு- 158: போராட்டம் தொடர்கிறது...!



ராஜீவ்காந்தி படுகொலையைத் தொடர்ந்து, தமிழகத்தில் அதன் ஆதரவாளர்கள் மீது தடா சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம் ஆகியவை பிரயோகிக்கப்பட்டன. இதன் உச்சகட்ட நடவடிக்கையாக விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இந்திய அரசு தடைவிதித்தது. இது குறித்து பழ.நெடுமாறன் தனது நூலில், "தமிழகத்தில் செயல்படாத ஓர் இயக்கத்தின் மீது உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மீட்புப்படை என்ற பெயரில் சில இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து, இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டைப் பிரிக்க, விடுதலைப் புலிகள் சதி செய்தனர் என்ற குற்றச்சாட்டு நகைப்புக்கு இடமான குற்றச்சாட்டாகும். தமிழ் தேசிய மீட்புப் படையைச் சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சில இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கின் விசாரணையே இன்னும் தொடங்கப்படவில்லை. வழக்கு விசாரிக்கப்பட்டு, குற்றச்சாட்டு உண்மை என நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை. அவ்வாறு நிரூபிக்கப்பட்ட பின்பே தமிழ்த் தேசிய மீட்புப்படை உண்மையில் இருந்தது என்பது நிரூபணம் ஆகும். இந்த வழக்கே விசாரணைக்கு வராத நிலையில் இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குத் தடை விதித்துள்ளது சரியல்ல' என்று குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு தடை அறிவிக்கப்பட்டதும் விடுதலைப் புலிகள் இயக்கம் ஓர் அறிக்கையினை வெளியிட்டது. அவ்வறிக்கையில், "தமிழ்நாட்டு இளைஞர்கள் சிலருக்கு யாழ்ப்பாணத்தில் ஆயுதப் பயிற்சி அளித்ததாகவும், தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்தைத் தூண்டிவிட்டதாகவும் இந்தியா, விடுதலைப் புலிகள் மீது அபாண்டமான பழிகளைச் சுமத்துகின்றது. இந்தக் குற்றச்சாட்டில் எந்தவித உண்மையுமில்லை' என்று தனது மறுப்பினை வெளியிட்டு, இலங்கையின் இனப் பிரச்னையில் இந்தியாவின் தவறுகள் குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குத் தடை விதிக்கும் நடவடிக்கையைக் கூட சட்டப்படி இந்திய அரசு செய்யவில்லை. 14-5-1992 அன்று இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்வதாக ஓர் அறிவிப்பை வெளியிட்டது. இந்தத் தடை சரிதானா? என்பதைப் பற்றி முடிவு செய்ய நடுவர் மன்றம் ஒன்றையும் அமைத்தது (தமிழீழம் சிவக்கிறது - பழ.நெடுமாறன், பக்-488). 8-7-1992 அன்று நடுவர் மன்றம் வெளியிட்ட அறிவிப்பில், "விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்ப்பவர்கள் தங்கள் மனுக்களை, தம்மிடம் அளிக்கலாம்' என்றும் தெரிவித்திருந்தது. இதனையொட்டி, பழ.நெடுமாறன், மணியரசன், தியாகு, தீரன், சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் தங்கள் மனுக்களைத் தாக்கல் செய்தனர். விடுதலைப் புலிகளின் பன்னாட்டுச் செயலகம் சார்பில் திலகர் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், "தமிழீழ மக்களுக்கு எதிரான இன ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிற ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராக, ஆயுதப் போராட்டத்தில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டுள்ளார்கள். பன்னாட்டுச் சட்டங்களின் கீழும், பன்னாட்டு முறைமைகளின் கீழும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்ட நிலை ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது. 1985-ஆம் ஆண்டில் திம்புவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போதும், 1987-ஆம் ஆண்டில் இந்திய-இலங்கை உடன்படிக்கையின்போதும் இந்திய அரசு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் பேராட்ட ஈடுபாட்டை ஏற்றுக்கொண்டுள்ளது. விடுதலைப் புலிகள் தங்கள் போராட்டத்தைத் தொடங்குவதற்கு ஆயுதமும், பயிற்சியும் கொடுத்துள்ளது. 1967-ஆம் ஆண்டு சட்டவிரோதச் செயல்பாடுகள் சட்டத்தின் கீழ் கூறப்பட்டுள்ள கருத்துகளின் கீழ் விடுதலைப் புலிகளின் இயக்கம் வரவில்லை. இந்திய அரசின் நீதி-நிர்வாக எல்லைக்குள்ளும் அஃது இயங்கவில்லை. எனவே, எந்தச் சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்டாலும் அது செல்லத்தக்கதன்று. இந்தியாவின் உள் அரசியலிலோ அல்லது அதனுடைய எல்லைகளுக்கு அபாயம் விளைவிக்கும் வகையிலோ, நேரடியாகவோ, மறைமுகமாகவோ குறுக்கிடும் எண்ணம் விடுதலைப் புலிகளுக்கு அறவே இல்லை' என்று கூறிய அவர், மேலும் கூறுகையில், "இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை வீணானது; தேவையற்றது. சட்டத்தினால் செயல்படுத்த முடியாதது' என்றும் குறிப்பிட்டிருந்தார். இந் நிலையில், நடுவர் மன்றத்தில் தங்களது கருத்துகளைச் சொல்ல வாய்ப்பளிக்க வேண்டும் என்றும், விசாரணைகள் ரகசியமாக நடக்கின்றன என்றும், இதனால் ஒருதலைப்பட்சமான முடிவு அறிவிக்கப்படலாம் என்றும் இவ்விசாரணைக்குத் தடை கோரி, தியாகு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இம் மனுவை ஏற்ற உயர்நீதிமன்றம், 27-10-1992 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, இரண்டு வாரத்தில் பதிலளிக்க நடுவர் மன்றத்தின் பதிவாளருக்கு அறிவிப்புக் கொடுக்க உத்தரவிட்டது. ஆனால், உயர்நீதிமன்றத்தின் அறிவிப்பு கிடைக்கும் முன்பாகவே, நடுவர் மன்றம் ரகசியமாகக் கூடி விடுதலைப் புலிகளுக்கு அறிவிக்கப்பட்ட தடை செல்லும் என்ற தீர்ப்பை வழங்கியது (ஆதாரம்: மேலது நூல்). விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு இந்தியாவில் அரசியல் தலைவர்கள் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர். பத்திரிகைகளும் பல்வேறு விமர்சனங்களை வெளியிட்டன. அது குறித்த விவாதங்கள் தொடர்ந்துகொண்டே இருந்தன.நாளை: கிட்டுவின் உயிர்த்தியாகம்!
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக